பலாலி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து இந்திய அதிகாரிகள் குழு நேற்று நேரில் ஆய்வு நடத்தியுள்ளது.
தென்னிந்தியாவுடனான விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கு ஏற்ற வகையில் பலாலி விமான ஓடுதளத்தை விஸ்தரிப்பது தொடர்பிலேயே இந்தக் குழு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் உதவியுடன் பலாலி விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டம் தொடர்பாக அண்மையில் கொழும்பில் நடந்த இந்திய – இலங்கை கூட்டு ஆணைக்குழுக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.
இதன் ஒரு கட்டமாக இந்திய விமானப்படை அதிகாரிகளின் குழுவொன்று விரைவில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஐந்து பேர் அடங்கிய இந்திய அதிகாரிகள் குழுவொன்று கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்புக்கு வந்திருந்தது. இவர்கள் பலாலி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தொடர்பாக இந்தியத் தூதரகத்தில் நடந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இந்தச் சந்திப்புக்களை முடித்துக் கொண்டு, நேற்றுக் காலை பலாலி விமான நிலையத்திற்கு மேற்படி குழுவினர் சென்றிருந்தனர். இந்தக் குழுவினர் விமானப் படையினருடன் இணைந்து பலாலி விமான நிலையம் தொடர்பிலான முதல் கட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர்.
குறிப்பாக பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரித்து, தென்னிந்தியாவுடன் நேரடியான விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பிலும், பலாலி விமான நிலையத்தை தொழில்நுட்ப ரீதியாக தரமுயர்த்துவது தொடர்பிலும் ஆராய்ந்துள்ளனர்.
இதனை முடித்துக் கொண்டு நல்லூர் கோவிலுக்கும் அந்தக் குழுவினர் சென்றனர். இதன்போது இந்தியத் துணைத் தூதுவர் அவர்களை வரவேற்றார்.
தற்போது வந்துள்ள இந்தியக் குழுவினர் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத்துறையைச் சார்ந்தவர்களா அல்லது இந்திய விமானப் படையைச் சேர்ந்தவர்களா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
மக்களின் மீள்குடியமர்வை மேற்கொண்ட பின்னர் பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்ற நிலையிலும், மக்கள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் இதே கருத்தை வலியுறுத்தி வருகின்ற நிலையிலுமே, மீள்குடியமர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.