இந்திய கிராமப்புற பள்ளிகளில் கல்வித்தரம் மோசமாக இருப்பதாக உலக வங்கி கவலை தெரிவித்து உள்ளது.

231

இந்திய கிராமப்புற பள்ளிகளில் கல்வித்தரம் மோசமாக இருப்பதாக உலக வங்கி கவலை தெரிவித்து உள்ளது. 2-ம் வகுப்பு மாணவனுக்கு இரண்டு இலக்க எண் கழித்தல் கணக்கு கூட தெரியவில்லை என்றும் குறை கூறி இருக்கிறது.

முன்னேறி வரும் நாடுகளில் ஒன்றாக திகழும் இந்தியாவில் கல்வியின் தரம் மேம்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதே நேரம், உலக வங்கி வளர்ந்து வரும் நாடுகளின் கல்வித்தரம் குறித்து வெளியிட்ட அறிக்கை இதற்கு ‘குட்டு’ வைப்பது போல் உள்ளது.

‘கல்வி மீதான வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான கற்றல்-உலக மேம்பாட்டு அறிக்கை 2018’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை நேற்று முன்தினம் உலக வங்கி வெளியிட்டது. இதில் இந்தியா, மலாவி உள்ளிட்ட 12 நாடுகளில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்து ஒப்பீட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த நாடுகள் எல்லாவற்றிலுமே கிராமப்புறங்களில் தொடக்க நிலை மற்றும் மேல்நிலை கல்வி இரண்டுமே மிகவும் பின் தங்கி இருப்பதாக உலக வங்கி கவலை தெரிவித்து உள்ளது.

அதில் இந்தியா குறித்து குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* 12 நாடுகளின் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவனால் இரண்டு இலக்க எண் கொண்ட கழித்தல் கணக்கை கூட செய்ய முடியவில்லை.

* கிராமப்புறங்களில் இந்த நிலை இன்னும் மோசமாக உள்ளது. அங்கு 3-ம் வகுப்பு படிக்கும் மூன்றில் ஒரு பங்கு மாணவர்களுக்கு, இரண்டு இலக்க கழித்தல் கணக்கை சரிவர செய்ய முடியவில்லை.

* குறிப்பாக 2-ம் வகுப்பு மாணவர்களின் கணித பாட பலவீன பட்டியலில் உள்ள 7 நாடுகளில் இந்தியாவுக்கு முதலாவது இடம் கிடைத்து இருக்கிறது.

* பள்ளிக்கூடங்களில் சேர்ந்து பல ஆண்டுகள் ஆகியும், பல லட்சம் மாணவர்களுக்கு சரிவர எழுத, படிக்க தெரியவில்லை. குறிப்பாக அடிப்படை கணிதத்தில் மிகவும் பலவீனமாக உள்ளனர். இதனால் கல்வி பயில்வதில் குறுகவேண்டிய சமூக இடைவெளி அதிகரித்து காணப்படுகிறது.

* கிராமப்புற இந்தியாவில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டால், அவனால் 2-ம் வகுப்பு பாடத்தை மட்டுமே நன்கு வாசிக்கவோ, எழுதவோ தெரிகிறது. அதுவும் எளிமையான வார்த்தைகள் என்றால்தான் சுலபமாக படிக்கிறான்.

* ஆந்திர மாநில கிராமப்புற மாணவர்களின் கல்வி நிலை மிகுந்த அதிர்ச்சி தருவதாக உள்ளது. அங்கு 5-ம் வகுப்பு படிக்கும் மாணவனால் ஒன்றாம் வகுப்பு பாடத்தில் உள்ள கேள்விகளுக்கு கூட சரிவர பதில் அளிக்க தெரியவில்லை.

இதுபற்றி உலக வங்கி குழு தலைவர் ஜிம் யோங் கிம் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த நாடுகளில் பள்ளிக்கூட மாணவர்களுக்கு சரிவர கல்வி கற்றுத்தர முடியாததால் அவர்கள் வாழ்க்கையின் சந்தர்ப்பங்களை இழக்கும் நிலைக்கும், எதிர்கால வாழ்க்கையில் குறைந்த ஊதியம் பெறும் நிலைமைக்கும் தள்ளப்படுகிறார்கள்.

சரியான முறையில் கற்பித்தல் இல்லாவிட்டால் வறுமையை ஒழித்து அனைவரும் செழிப்பான நிலை பெறும் வாய்ப்பை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியை நிறைவேற்ற முடியாமல் போய்விடும். இளம் மாணவர்கள் ஏற்கனவே வறுமை, முரண்பாடுகள் பாலினம் அல்லது ஊனம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு கல்வியில் மேம்பட முடியாமல் உள்ளனர். இதுபோன்ற கற்றல் நெருக்கடி அவர்களுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும்.

சிறந்த முறையில் கல்வியை தந்தால் மட்டுமே இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித்தர முடியும். அவர்கள் நல்ல சம்பாத்தியமும், உடல் ஆரோக்கியமும் கிடைக்கச் செய்து வறுமையை விரட்ட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SHARE