இந்திய மெக்கானிக்கிற்கு புர்ஜ் கலிஃபா-வில் 22 வீடுகள்…

257

உலகப் புகழ்பெற்ற புர்ஜ் துபாய் கட்டிடத்தில் இந்திய தொழிலதிபர் ஒருவர் ஆச்சரியமளிக்கும் வகை யில் 22 வீடுகளை சொந்தமாக்கியுள்ளார். மெக்கானிக்காக வாழ்க்கையை தொடங்கி தொழிலதிபராக வளர்ந்துள்ள இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இது தொடர்பான தகவல்கள் நேற்று வெளியாகியுள்ளன.

ஜிஇஓ குழும நிறுவனங்களின் தலைவரான ஜார்ஜ் என். நேரேபரம்பிள் என்கிற இந்த தொழிலதிபர் தற்போது கலீஜ் டைம்ஸ் என்கிற மீடியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் இதைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பேசியபோது 22 வீடுகளோடு நிற்கப்போவதில்லை, நல்ல விலையில் கிடைத்தால் தொடர்ந்து வீடுகள் வாங்குவேன் என்று குறிப்பிட்டுள்ளார். நான் கனவு காண்கிறேன். கனவு காண்பதை ஒரு நாளும் நிறுத்த மாட்டேன் என்று கூறியுள்ளார்.

உலகின் மிகப் பெரிய கட்டிடமாக விளக்கும் புர்ஜ் கலிஃபாவில் ஆச்சரியமளிக்கும் வகையில் அதிக வீடுகளை வைத்துள்ள தனிநபர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார். எனது உறவினர் ஒருவர் உன்னால் புர்ஜ் கலிஃபாவில் நுழைய கூட முடியாது என்று கிண்டல் செய்தார். ஆனால் இப்போது அங்கு 22 வீடுகள் வாங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

2010ம் ஆண்டில் இந்த கட்டிடத்தில் ஒரு வீடு வாடகை தொடர்பான விளம்பரத்தை செய்தி தாளில் பார்த்துள்ளார். அந்த நாளிலேயே அதற்கான வாடகையை கொடுத்து, அடுத்த நாளிலிருந்து அங்கு வசிக்கத் தொடங்கியுள்ளார். இந்த ஆறு ஆண்டுகளில் 900 அடுக்கு மாடி வீடுகளைக் கொண்ட புர்ஜ் கலிஃபாவில் 22 சொகுசு வீடுகளுக்கு உரிமையாளராகியுள்ளார். தற்போது 5 வீடுகளை வாடகைக்கும் விட்டுள்ளார். பிற வீடுகளுக்கு தற்போது பொருத்தமான வாடகைதாரர்களை பார்த்து வருவதாகக் கூறியுள்ளார்.

இவருடைய வளர்ச்சியும் ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது. அதிக வெப்ப நாடுகளான இங்கு குளிர்சாதன கருவிகள் விற்பதற் காக முதன் முதலில் 1976ல் ஷார்ஜா வந்துள்ளார். நேரேபரம்பிள் 11 வயதிலிருந்து தனது தந்தையின் தொழிலுக்கு உதவியாக இருந்துள்ளார். எங்களது ஊரில் மக்கள் பருத்தி விவசாயம் செய்கின்றனர்.

ஆனால் பருத்தி விதைகளை அலட்சியமாக கருதுவார்கள். நான் அவற்றை விற்பனை செய்து லாபம் பார்த்துள்ளேன். புளியங்கொட்டை விதைகளைக் கூட விற்பனை செய்துள்ளேன். கால்நடை தீவனங்களுக்கான இந்த விதைகளை விற்பனை செய்துள்ளேன் என்று தனது கடந்த காலத்தையும் நினைவு கூர்ந்துள்ளார்.

 

SHARE