தென் ஆப்பிரிக்கா அணி 72 ஓவர்களில் 72 ரன்கள் மட்டுமே எடுத்தது உண்மையிலேயே எங்களுக்கு மிகுந்த ஆச்சரியம் அளித்தது என இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.தென் ஆப்பிரிக்க அணி இது போன்று விளையாடும் என்று நினைக்கவில்லை, 4-வது நாள் டெஸ்ட் ஆட்டத்திற்கு பிறகு உமேஷ் யாதவ் கருத்து வெளியிட்டார்.
துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், ஷாட் அடிக்கக்கூட முயற்சிக்கவில்லை. ரன் எடுக்க ஏதுவான பந்துகளை கூட அவர்கள் அடிக்காதது ஆச்சரியத்திற்குரிய விஷயம். துடுப்பாட்டக்காரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடாவிட்டால், அவர்களை அவுட் ஆக்குவதற்கான வாய்ப்பு குறைந்து விடும். இது பவுலர்களுக்கு பெரும் சவாலாகும். ஆனால் இது போன்று விளையாடுவது, சுவாரஸ்யமின்றி சலிப்பை ஏற்படுத்தி விடும். கடைசி நாளில் அம்லா, டிவில்லியர்ஸ் இருவரையும் சீக்கிரம் சாய்ப்பதே எங்களது முதல் குறிக்கோள். எந்தவித கேட்ச் வாய்ப்பையும் வழங்காமல் ஒருநாள் முழுவதும் அவர்கள் தாக்குப்பிடிப்பது கடினம்’ என்றார். தென்ஆப்பிரிக்க வீரர் பவுமா கூறும் போது, ‘கடைசி நாளிலும் இதே போன்று விளையாடி தோல்வியில் இருந்து மீள்வோம் என்று நம்புகிறேன். இது கடினமான பணி தான். ஏனெனில் கடைசி நாளில் ஆடுகளம் இன்னும் மோசமாகும். ஆனாலும் எங்களிடம் அனுபவமும், திறமையும் கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். அம்லா, டிவில்லியர்சுக்கு பிறகு பாப் டு பிளிஸ்சிஸ், டேன் விலாஸ் உள்ளனர். எனவே டிரா செய்ய எங்களால் ஆன முழு முயற்சியையும் வெளிப்படுத்துவோம். எனது துடுப்பாட்டம் குறித்து கேட்கிறீர்கள். எனது வாழ்க்கையில் நான் விளையாடிய கடினமான பேட்டிங் இது தான்’ என்றார். |