இந்திரஜித் சிங் ஒலிம்பிக் கனவு கலைந்தது? ஊக்கமருந்து பயன்படுத்தியது “பி’ மாதிரியிலும் உறுதியானது

203

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றிருந்த இந்திய குண்டு எறிதல் வீரர் இந்திரஜித் சிங்கின் “பி’ மாதிரியைக் கொண்டு நடத்தப்பட்ட சோதனையிலும் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடைய ஒலிம்பிக் வாய்ப்பு ஏறக்குறைய பறிபோய்விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திரஜித்திடம் கடந்த ஜூன் 22-ஆம் தேதி பெறப்பட்ட ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரியை பரிசோதித்தபோது, அதில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் இந்திரஜித் சிங் கேட்டுக்கொண்டால், அவருடைய “பி’ மாதிரியைக் கொண்டு 2-ஆவது கட்ட சோதனை நடத்தப்படும் என தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (நாடா) அறிவித்திருந்தது.

அதைத்தொடர்ந்து தனக்கு எதிராக சதி நடந்திருப்பதாகக் கூறிய இந்திரஜித், தனது “பி’ மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அவருடைய “பி’ மாதிரி சோதிக்கப்பட்டது. அதிலும் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியிருப்பது உறுதியானது என இந்திய தடகள சம்மேளன வட்டாரங்கள் தெரிவித்தன. நடப்பு ஆசிய சாம்பியனான இந்திரஜித்துக்கு சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் புதிய விதிப்படி 4 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது.

800 மீ. ஓட்டத்தில் இருந்து மாரத்தானுக்கு தாவிய சவூதி வீராங்கனை

கடந்த ஒலிம்பிக்கில் 800 மீ. ஓட்டத்தில் பங்கேற்ற சவூதி அரேபிய வீராங்கனை சாரா அல் அட்டார், ரியோ ஒலிம்பிக்கில் மாரத்தான் போட்டியில் பங்கேற்கிறார்.

முன்னதாக, 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கின் மூலம் முதல் முறையாக ஒலிம்பிக்கில் தடம் பதித்தார் சாரா. அப்போது அவருக்கு வயது 19. சவூதி அரேபிய நாட்டில் இருந்து முதல்முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீராங்கனைகளில் சாராவும் ஒருவர். அவர், 800 மீ. ஓட்டத்தில் கலந்து கொண்டார்.

தற்போது 23 வயதாகியுள்ள சாரா, ரியோ ஒலிம்பிக்கில் மாரத்தான் போட்டியில் பங்கேற்கிறார். இந்த ஒலிம்பிக்கில் அவரது நாட்டைச் சேர்ந்த 4 மகளிர் மற்றும் 7 ஆடவர்கள் பங்கேற்கின்றனர்.

தீவிர பாலின பாகுபாடு காரணமாக, சவூதி ஒலிம்பிக் கமிட்டியின் இணையதளத்தில் கூட, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அந்நாட்டு வீராங்கனைகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

எனினும், அந்நாட்டைச் சேர்ந்த ஊஜுத் ஃபாமி என்ற வீராங்கனை ஜூடோவிலும், லுப்னா அல் ஒமைர் என்பவர் வாள் சண்டையிலும், கரிமான் அபு அல் ஜதைல் என்ற வீராங்கனை 100 மீ. ஓட்டத்திலும் பங்கேற்கவிருப்பது தெரியவந்துள்ளது.

தகுதிப் போட்டிகளின் மூலமாக அல்லாது, சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் சிறப்பு அழைப்பின் பேரில் இவர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர்.

முன்னணி வீரர்களின் விலகலால் களை இழந்த டென்னிஸ்

நட்சத்திர டென்னிஸ் வீரர்கள் விலகியுள்ளதை அடுத்து, ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டி களை இழந்துள்ளது.

இந்த ஒலிம்பிக்கில் ஆடவர் பிரிவில் இருந்து ரோஜர் ஃபெடரர், மிலோஸ் ரயோனிச், தாமஸ் பெர்டிச் உள்ளிட்ட 20 முன்னணி வீரர்கள் விலகியுள்ளனர்.

ஒலிம்பிக் டென்னிஸில் பரிசுத் தொகையும், தரவரிசைப் புள்ளிகளும் இல்லாததைக் காரணமாகக் கூறி, லத்வியா டென்னிஸ் வீரர் எர்னஸ்ட் குல்பிஸ் விலகியுள்ளார். 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ரோஜர் ஃபெடரர், காயம் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார். சுகாதாரப் பிரச்னையை குறிப்பிட்டு, அமெரிக்காவின் பாப் பிரையன், மைக் பிரையன் சகோதரர்கள் ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஸிகா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவே ரியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளனர்.INDRJEETH

SHARE