இந்த அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் கருத்துக்கு அடிபணிந்து செயற்படுகிறது: கோத்தபாய

453
யுத்த காலத்தில் இராணுவ வீரர்களால் எந்த யுத்தக்குற்றங்களும் இழைக்கப்படவில்லை என கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த அரசாங்கமும், அரசாங்கத்தைச் சார்ந்தவர்களும் யுத்த காலத்தின் போது இராணுவ வீரர்கள் குற்றமிழைத்ததாகக் கூறி இராணுவ வீரர்களை மீது குற்றஞ் சுமத்துவதோடு, அவர்களை சர்வதேச நீதிமன்றிட்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் நாம் இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் கோத்தபாய இதன் போது குறிப்பிட்டார்.

இன்று கொழும்பில் இடம்பெற்று வரும் இராணுவ வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து கையொப்பம் இடும் நிகழ்வில் கலந்துக் கொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அரசாங்கமானது புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் அமைப்புகளின்  கருத்துக்களுக்கு அடிபணிந்து செயற்படுவதாகவும் குறிப்பிட்ட அவர் இந்தப் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பணத்திலேயே விடுதலைப் புலிகள் இராணுவத்திற்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்ததாகவும் தெரிவித்தார்.

அத்துடன் இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பக்கபலமாக செயற்பட்டவர்கள் நாங்கள் அதேபோல் இந்த நாட்டில் நீண்டகாலம் நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்தியவர்களும் நாங்களே என கோத்தபாய  இதன் போது குறிப்பிட்டார்.

இந்த அரசாங்கம் பதவியேற்று ஒருவருடம் பூர்த்தியடைந்த நிலையில் இந்த நாட்டு மக்களுக்கு இந்த புதிய அரசாங்கம் என்ன செய்தது? என்றும் கோத்தபாய ஊடகங்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.

இந்த அரசாங்கம் பேசுவதற்கு பயிற்சி அளித்து ஒருவரை அனுப்பியுள்ளதாகவே அவரது வருகையை நாம் கருதும் இதேவேளை சாதாரண 2 அல்லது 3 நாட்களில் அவரின் வருகை எதை சாதித்து விடப் போவது என்றும், அவர் எதை முழுமையாக தெரிந்துகொண்டு செல்லப்  போகிறார் என்றும் எமக்கு தெரியவில்லை என்றும் கோத்தபாய ராஜபக்ஷ இதன் போது தெரிவித்தார்.

SHARE