இந்த முக்கிய பிரபலத்தின் வெளியேற்றம்! அச்சத்தில் உறையும் யாழ். குடாநாட்டு மக்கள்..!

190

சர்வதேச சமூகத்தின் பார்வைகள் தற்போது தமிழர் தாயகத்தின் யாழ். நகரை ஊடுறுவுகின்றன. இதற்கு வடக்கில் அதிகரித்துள்ள குறிப்பாக யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களும் வன்முறைகளுமே காரணம்.

சமகாலத்தில் யாழ்ப்பாணத்தில் அரங்கேறிவரும் பல சம்பவங்கள் யாழ். குடாநாட்டிற்கான தலைமைத்துவம் ஒன்றை அல்லது தலைவர் ஒருவரின் தேவையை உணர்த்தி நிற்கின்றது.

கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்படுவதற்கு முன்னரான காலப்பகுதிகளில், யாழ்ப்பாணம் எவ்வாறான ஒரு சமூக கட்டமைப்புக்குள் இருந்ததோ அதே போன்றதான ஒரு சூழல் தற்போது அனைவராலும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

வடக்கில் யுத்தம் முடிவுக்கு வந்ததே தவிர இதர விவகாரங்கள் எதுவும் இதுவரை முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை.

தொடர்ந்தும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்தவர்களாகவே இருந்து வருகின்றனர்.

குற்றச் செயல்கள் அதிகரிக்குமேயானால் இறுதியில் வடபகுதி நிலைமை மோசமடைவதுடன் அச்சத்துக்கு மத்தியிலேயே மக்கள் வாழ வேண்டிய நிலைமையே நீடிக்கும்.

யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் யாழ். மக்களின் வாழ்க்கைமுறை முற்றாக மாற்றமடைந்தது என்பதைவிட அப்பகுதி மக்களின் கலாச்சாரங்கள் மற்றும் ஒரு கட்டமைப்பு சீரழிந்து விட்டது எனலாம்.

இதற்கு, புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை ஒரு சிறந்த உதாரணம், சமூக சீரழிவு யாழில் தலைத்தூக்கியமைக்கு இது ஒரு ஆதாரம்.

எனினும் யாழ்ப்பாணத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்று வந்த நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் பிரசன்னத்தின் பின்னர் இவ்வாறான சூழல் ஒரு சிறிதளவேனும் மாற்றம் கண்டது என்பதை மறுப்பதற்கில்லை.

நீதிபதி இளஞ்செழியனின் துணிச்சலான தீர்ப்புக்களும், யாருக்கும் அஞ்சா அதிரடி நடவடிக்கைகளும் யாழ்ப்பாணத்தை ஒரு கட்டுக்கோப்பான, நிலையான பாதையில் அழைத்துச் சென்றது.

குற்றம் செய்தவர்களும் இனி குற்றம் செய்ய நினைப்பவர்களும் கூட அஞ்சும் அளவிற்கு அவரது தீர்ப்புக்கள் அமைந்திருந்தன, அத்துடன் நீதிபதி இளஞ்செழியனுக்கு என ஒரு தனி மரியாதை இருந்தது, அவரது சொல்லிற்கு கட்டுப்படும் அளவிற்கு மக்கள் அவர் மீது அதீத அன்பு கலந்த மரியாதையையும் கௌரவத்தினையும் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் அவர் அங்கு பதவி வகித்த கடந்த 3 வருட காலப்பகுதியில் பல குற்றச்செயல்கள் தடுக்கப்பட்டிருந்தன.

இது இவ்வாறிருக்க தற்போது நீதிபதி இளஞ்செழியன் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றலாகிச் சென்றுள்ளார்.

அவர் சென்ற அதே வேகத்தில் மீண்டும் யாழில் வன்முறைகள் தற்போது தலைத்தூக்க ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் கடந்த 17ஆம் திகதி மல்லாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம்கூட இதன் எதிரொலியாகத்தான் பார்க்கப்படுகின்றது,

ஆலயத்திற்கு வழிபாடுகளுக்கென வருகைத்தந்தவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு, காரணமின்றி ஒரு உயிரும் பலியானது. உண்மையில் இந்த உயிர் பலியும் துப்பாக்கிப்பிரயோகமும் தவிர்த்திருக்க வேண்டிய ஒன்று.

அந்த துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்று ஒரு வார காலப்பகுதிக்குள் மீண்டும் ஒரு கொலைச் சம்பவம் யாழ். குடாநாட்டை உலுக்கியுள்ளது.

தந்தையை பழிதீர்க்கும் நோக்கில் யாழ். சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய ரெஜினா என்ற சிறுமி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த இடத்தில் மரணித்துப்போனது சிறுமியா அல்லது மனிதமா என்ற கேள்வி அனைவருக்கும் எழுவதுண்டு.

இவ்வாறு சற்றும் எதிர்ப்பார்க்க முடியாத கொடூர கொலைகளை செய்யும் அளவிற்கு மனிதர்களின் மனங்கள் வக்கிரமடைந்துள்ளன.

நிச்சயமாக யாழ். குடாநாட்டில் இன்றும் நீதிபதி இளஞ்செழியன் இருந்திருப்பாரெனில் இவ்வாறான குற்றங்கள் செய்வதற்கு சற்றேனும் குற்றவாளிகள் தயங்கியிருப்பர் என்பது அனைவரது எண்ணமாக உள்ளது.

அத்துடன் தற்போதைய சூழலில் இளஞ்செழியனின் இடைவெளியை மக்கள் உணருகின்றார்கள்கள் என்பதுடன் அவரது சேவையின் அவசியத்தையும் எதிர்ப்பார்க்கின்றனர் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

SHARE