இலங்கைக்கான மக்களின் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal on Sri Lanka) தனது இரண்டாவது அமர்வை ஜெர்மனியின் பிரேமன் (Breman) நகரத்தில் ஒழுங்கு செய்திருந்தது.
இந்த அமர்வை ஏற்பாடு செய்வதில் முன்னின்று செயற்பட்ட நிறுவனங்கள் அயர்லாந்தைச் சேர்ந்த இலங்கையில் சமாதானத்திற்கான மக்கள் அமைப்பும் பிரேமன் நகரத்தில் இயங்கி வரும் மனித உரிமைகள் அமைப்புமாகும். இந்த இரு அமைப்புகளிலும் தீவிரமாகவும் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடும் பணியாற்றுபவர்களில் பலர், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து உணர்வுத் தோழமையுடன் பணியாற்றி வரும் சிங்கள எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஆவர். இவர்களுள் சிலர் புலமையாளர்களாகப் பல்கலைக்கழகம் சார்ந்து இயங்குபவர்கள். இவர்களுடைய முன் முயற்சியாலேயே இலங்கைக்கான மக்களின் தீர்ப்பாயத்தின் முதலாவது அமர்வு அயர்லாந்தின் டப்ளின் நகரில் ஜனவரி 2010இல் இடம்பெற்றது. தமிழ் மக்களுக்கு எதிரான போரில் போர்க்குற்றங்களும் மனிதத்துக்கு எதிரான குற்றங்களும் பெருமளவில் இடம்பெற்றன என்பதும் அதற்கான பொறுப்பாளிகள் இலங்கை அரசும் அதனது படைகளும் என்ற குற்றச்சாட்டு தீர்ப்பாயத்தின் முன் வைக்கப்பட்டது. தீர்ப்பாயத்தின் நீதிபதிகளாகக் கடமை புரிந்தவர்களுள் எகிப்து நாட்டைச் சேர்ந்த புகழ்மிகு பெண்ணியவாதியும் நாவலாசிரியருமான நவால் அல் சாடவி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக முன்னர் பணியாற்றிய ரஜிந்தர் சர்க்கார், தாய்லாந்தில் நீண்டகாலமாகப் பௌத்தம், சமாதானம், சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் பணிபுரிந்து வரும் துறவி சுலக் சிவரக்ஸா ஆகியோரும் இருந்தனர். தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளையும் ஆவணச் சாட்சியங்களையும் தீர்ப்பின் முழு விபரத்தையும் Ifpsl .org/images/files/peoples, tribunals on Srilanka. pdf என்னும் இணையதளத்தில் பார்வையிட முடியும். மனிதத்துக்கு எதிரான குற்றங்களும் போர்க்குற்றங்களும் பெருமளவில் இடம்பெற்றுள்ளன என்று தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது. அதனுடைய தொடர்ச்சியாகத்தான் இரண்டாவது அமர்வு பிரேமன் நகரில் இடம்பெற்றது. டிசம்பர் மாதம் 7,8,9 ஆகிய மூன்று நாட்களும் அமர்வுகள் காலைமுதல் இரவுவரை இடம்பெற்றன. இந்த அமர்வுகளில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் இரண்டு. முதலாவது குற்றச்சாட்டு, இலங்கையில் தமிழர்கள்மீது நடத்தப்பட்டது திட்டமிடப்பட்ட இனப்படுகொலை என்பது. இரண்டாவது குற்றச்சாட்டு, இந்த இனப்படுகொலைக்கு அமெரிக்க, பிரித்தானிய, இந்திய அரசுகள் உடந்தையாக இருந்தன என்பது. இனப்படுகொலை என்பது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்த்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் அழிப்பை மட்டுமே மையப்படுத்தியதாக இருக்கவில்லை. பிரித்தானியக் காலனித்துவ ஆட்சிக் காலத்திலிருந்தே அதற்கான வித்து வீசப்பட்டுவிட்டது எனபதும் இனப்படுகொலை எவ்வாறு மெல்லமெல்ல ஈழத்தமிழர்கள் மீது ஏவப் பட்டது என்பதும் ஜனவரி 2009 முதல் மே 2009 வரை இடம்பெற்றவை இந்த இனப் படுகொலையின் தர்க்க ரீதியான உச்ச விளைவு என்று நூற்றுக்கணக்கான ஆதாரங்களுடன் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இத்தகைய குற்றச் சாட்டுகளுக்குப் பதிலளிக்கவும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கவும் இலங்கை, இந்திய, அமெரிக்க, பிரித்தானிய அரசுகளுக்கு ஆறுமாத காலம் முன்னராகவே அழைப்பு அனுப்பப்பட்டிருந்த போதும் அவர்கள் தரப்பிலிருந்து எவரும் கலந்து கொள்ளவில்லை. இந்த அரசுகளுக்கான அழைப்பை தீர்ப்பாயத்தின் தலைமைப் பணிமனை ரோம் நகரிலிருந்து அனுப்பியிருந்தது. எனினும் இந்த அரசுகளின் உத்தியோக பூர்வமான நிலைப்பாடு, வாதங்கள் எவையெவை என்பதை அவர்களின் உத்தியோக பூர்வமான ஆவணங்களில் இருந்து தொகுத்துச் சமர்ப்பித்திருந்தார் அயர்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர். தீர்ப்பாயத்தின் அமர்வுகள் இரு தொகுதிகளாக இடம்பெற்றன. முதலாவது தொகுதி அமர்வுகள் பகிரங்கமானவை. அனைவரும் கலந்துகொண்டு சாட்சியமளிப்பவர்களையும் நீதிபதிகளையும் பார்க்க முடியும். பதிவு செய்ய முடியும். இரண்டாவது தொகுதி அமர்வுகள் ரகசியமானவை. நீதிபதிகளும் சாட்சிகளும் அவர்களது வழக்குரைஞர்களும் மட்டுமே பங்கு பெற முடியும். இலங்கைப் படையினரால் சித்திரவதைக்குள்ளானோர், பாலியல் வன்முறைக்காளானோர், சாட்சியமளித்துவிட்டு மறுபடியும் இலங்கைக்குத் திரும்ப வேண்டியவர்கள், வேறு பல காரணங்களால் பகிரங்கமாக சாட்சியம் தரத் தயங்கியவர்களுக்கு இத்தகைய இரண்டாவது தொகுதி அமர்வுகள் வாய்ப்பையும் பாதுகாப்பையும் வழங்கின. In – Camera Sessions என அழைக்கப்படும் இத்தகைய அமர்வுகள் இடம்பெறுவது வழமையானதே. முதல்நாள் காலை அமர்வின்போது இலங்கை அரசு நிகழ்த்திய இனப்படுகொலை பற்றியும் அதற்கு உடந்தையாக இருந்த அரசுகள் பற்றியும் விளக்கமானதொரு குற்றப்பத்திரிகையைப் பிரித்தானியாவின் கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கும் அண்ட்ரூ ஹிக்கின்பாட்டமும் அமெரிக்க வழக்குரைஞர் கரேன் பார்க்கரும் முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து பிரேமன் நகரத்தின் மனித உரிமைகள் நிறுவனத்தைச் சேர்ந்த விராஜ் மென்டிஸ், Corporate watch என்னும் அமைப்பைச் சேர்ந்த ஃபில் மில்லர் ஆகியோர் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம், பிரித்தானியக் காலனித்துவம் நடைமுறைப்படுத்திய ஒற்றையாட்சி முறை, இனப்படுகொலையின் மூலங்கள் என்பன பற்றி ஆதாரங்களுடன் வாதிட்டனர். இதனைத் தொடர்ந்து இலங்கையின் வட – கிழக்குப் பகுதிகளில் அரசால் முன்னெடுக்கப்பட்ட சிங்களக் குடியேற்றத் திட்டங்கள், அவற்றின் திட்டமிட்ட விரிவாக்கம், தமிழ் மக்களின் ‘இனத்துவச் சுத்திகரிப்பில்’ இத்தகைய திட்டங்கள் பயன்படுத்தப்பட்ட முறைமை பற்றி வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 1956ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டுவரை இடம்பெற்ற படுகொலைகள், இனவழிப்புக் கலவரங்கள், பாலியல் வன்கொடுமைகள் பற்றிய ஆவணங்களும் முன்வைக்கப்பட்டன. முனைவர் என். மாலதி, கனடாவின் மனிதஉரிமைச் செயற்பாட்டாளர் அன்டன் ஃபிலிப், லண்டனைச் சேர்ந்த செயற்பாட்டாளர் புனிதா செல்வரத்தினம் ஆகியோர் இந்த அமர்வில் பங்குகொண்டனர். தொடர்ந்து இடம்பெற்ற ‘முள்ளிவாய்க்கால்’ தொடர்பான விசாரணைகளின் போது இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வட மாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் (எழிலன்) இருவரும் முக்கியமான சாட்சியங்களை வழங்கினர். போரின் இறுதி நாட்களின்போது விடுதலைப் புலித் தலைவர்களான நடேசன், புலித் தேவன், கே.பி போன்றோருடனும் இலங்கை அரசின் அமைச்சர் பஸிஸ் ராஜபக்ஸ, அமெரிக்கத் தூதர், இந்தியத் தூதர் போன்ற பல்வேறு தரப்பினரோடும் தான் தொடர்பில் இருக்க நேர்ந்தமை பற்றி விளக்கிய கஜேந்திரகுமார், செஞ்சிலுவைச் சங்கத்தூடாகவோ அல்லது ஐக்கிய நாடுகள் அவையின் மேற்பார்வையின் கீழோ தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளிருந்த மக்கள் வெளியேறுவதற்கு இடம்தர விடுதலைப் புலிகள் சம்மதம் தெரிவித்திருந்தனர் எனவும் இது தொடர்பாகத்தான் பஸிஸ் ராஜபக்ஸவுடன் உரையாடிய பொழுது இலங்கை அரசுத் தரப்பிலிருந்து இதற்கு ஆதரவான எத்தகைய பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார். வெள்ளைக் கொடியுடன் படையினரிடம் சரணடைந்த நடேசன், புலித்தேவன் போன்றோர் சரணடைய முன்பு இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் பற்றியும் விவரித்தார். இந்த விவரங்களை எல்லாம் இப்போதுதான் பொதுவெளியில் தான் கூறுவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நீதிபதியின் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் குறிப்பிட்டார். இத்தகைய விவரங்கள் எல்லாம் இந்திய, அமெரிக்க அரசுக்கும் அதிகாரிகளுக்கும் தெரிந்திருந்தனவா எனத் தீர்ப்பாயத்தின் தலைவர் கேட்டபொழுது அவர்களுக்கு இவை தொடர்பான முழு விவரங்களும் தெரிந்திருந்தன எனத் தான் நம்புவதாகக் குறிப்பிட்டார். முள்ளிவாய்க்கால் படுகொலைகள், போரின் இறுதிக்கட்டங்களில் மக்கள் பட்ட அவலங்கள் குறித்து வேறு பலரும் In – Camera அமர்வுகளில் சாட்சியம் அளித்தனர். முதல்நாளின் இறுதி அமர்வாக எழுத்தாளரும் ஊடகவியலாளருமான கலம் மக்ரேயின் சாட்சியமும் சானல் 4 தொலைக்காட்சிக்காக அவர் இயக்கியிருந்த NO FIRE ZONE எனும் ஆவணப்படத்தின் பல காட்சிகள் திரையிடப்பட்டன. அதன் பிற்பாடாகத் தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் எழுப்பிய பல கேள்விகளுக்கு விரிவாகவும் தெளிவாகவும் தனது பதில்களை வழங்கினார். இனப்படுகொலைக்கு இவற்றை விடவும் மேலதிகமாக என்ன ஆதாரங்கள் தேவை? என அவர் கேள்வி எழுப்பினார். தீர்ப்பாயத்தின் இரண்டாம் நாள் அமர்வுகளில் பெரும்பான்மையானவை பகிரங்க அமர்வுகளாக இல்லாது தனியறைக்குள்ளேயே இடம்பெற்றன. மருத்துவமனைகளையும் பொதுமக்கள் பெருமளவு கூடியிருந்த பொது இடங்களை ஏவுகணைகள் வீசித் தாக்கியமை, போரின்போதும் இறுதிக் கட்டங்களின் போதும் வன்னியிலிருந்த ஊடகவியலாளர்கள் பட்ட அவலங்கள், அனுபவங்கள் அவற்றிடையே அவர்களது பங்களிப்பு, மருத்துவர்கள், தாதியர் போன்றோரின் நேரடி அனுபவங்கள், போரின் பின்னர் அரசு மேற்கொண்டு வரும் கட்டாயக் கருத்தடை பற்றிய சாட்சியங்கள் என ஏராளமானவற்றைக் கேட்கிற வாய்ப்பு நீதிபதிகளுக்குக் கிடைத்தது. இனப்படுகொலையின் பல்வேறு அம்சங்களையும் வெளிப்படுத்தக் கூடிய வகையில் ஆவணங்களும் சாட்சியங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. சாட்சியங்களினதும் ஆவணங்களினதும் தொகுப்பை தீர்ப்பாயம் வெளியிட இருக்கிறது. பிற்பகல் அமர்வுகளில் அமெரிக்கா, இந்தியா பிரித்தானியா ஆகிய நாடுகள் எவ்வாறு இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தார்கள் என்பது பற்றிய வாதங்களும் அவற்றுக்கு ஆதாரம் தரும் ஆவணங்களும் தீர்ப்பாயத்திடம் வழங்கப்பட்டன. இனப்படுகொலைக்கு அமெரிக்க அரசு எவ்வாறு உடந்தையாக இருந்தது என்பதை ஆதாரங்களுடன் வாதிட்டார் சிங்கள எழுத்தாளரும் ஊடகவியலாளருமான பாஷண அபேவர்த்தன. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே எட்டப்பட்ட சமாதான ஒப்பந்தத்தையும் அதன் பின்னரான பேச்சுவார்த்தைகளையும் முறியடிக்க முன்நின்று தொழிற்பட்ட முக்கியமான சக்தி அமெரிக்க அரசுதான் என்று பாஷண வலியுறுத்தினார். (அவருடைய வாதச் சுருக்கம் தனியே தரப்பட்டுள்ளது.) அவரைத் தொடர்ந்து நிஜிஞீ எனும் ஜெர்மானிய அரசின் அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளராக இலங்கையில் பல ஆண்டுகள் பணிபுரிந்த றைன்ஹார்ட் போல்ஸ், போர்க் காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் ஜெர்மன் அரசும் எத்தகைய கண்ணோட்டத்துடன் இருந்தனர் என்பதையும் அமெரிக்க அரசின் தொடர்ச்சியான அழுத்தங்களின் விளைவாகத்தான் ஜெர்மனியும் ஐரோப்பிய ராஜ்யமும் விடுதலைப் புலிகளைத் தடை செய்ய வேண்டி முற்பட்டது என்பதையும் விளக்கினார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் பணியாற்றிய ஒரேயொரு வெளிநாட்டு நிறுவனம் GTZ மட்டும்தான் என அவர் தெரிவித்தார். எனினும் தங்கள் நிறுவனத்தின் நடைமுறைகளும் கொள்கைகளும் இலங்கை அரசின் கோட்பாடுகளுடன் ஒன்றிணைக்கப்பட்டதாக இருக்க வேண்டிய நிர்பந்தமான சூழல் நிலவியது என அவர் மேலும் விவரித்தார். போரின் இறுதிக் காலக்கட்டத்தின்போது கூடத் தொடர்ச்சியாகவும் விரிவாகவும் செய்திகளை வெளியிட்டு வந்த தமிழ்நெற் (TamilNet) இணையதளத்தின் பொறுப்பாசிரியர் ஜெயா தன்னுடைய விவரமான சாட்சியத்தின்போது கொத்துக்குண்டுகள் வீசப்பட்ட மைக்கான ஆதாரங்களுக்கான ஒளிப்படங்களைச் சமர்ப்பித்தார். அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான தூதுவராக 1994 – 2000 வரை பணியாற்றிய புரூஸ் ஹெய்க் ( Bruce Haigh) சாட்சியமளிக்கிறபோது அவுஸ்திரேலியா அரசு எப்போதுமே அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளை விசுவாசமாகப் பின்பற்றி வருவதால் இலங்கை தொடர்பாகவும் இதே நிலைமைதான் இருந்தது என்றார். “தமிழர்கள் என்றால் பயங்கரவாதிகள், அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் அல்லது அழிக்கப்பட வேண்டும்” என்பதே பொதுவான கோட்பாடாக இருந்தது எனத் தொடர்ந்து விவரித்த புரூஸ் ஹெய்க், இலங்கைக்கு ஆயுத வழங்கல் இடையூறில்லாமல் தொடர்வதற்கு அவுஸ்திரேலிய அரசு முக்கியப் பங்காளியாக இருந்தது என்று கூறினார். ஐரோப்பிய, ஜெர்மன், அவுஸ்திரேலியச் சாட்சியங்களின்படி அமெரிக்காவின் தீவிரமான அழுத்தமும் செயற்பாடுகளும்தான் இந்த நாடுகளின் இலங்கை தொடர்பானதும் தமிழர் தொடர்பானதுமான கொள்கைகளிலும் நடவடிக்கைகளிலும் பலத்த தாக்கத்தைச் செலுத்தியிருக்கின்றன என்று அறியக் கிடைக்கிறது. ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு இந்திய அரசு எவ்வாறு உடந்தையாக இருந்தது என்பதைப் பற்றி விரிவான ஆதாரங்களை மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தியும் உமரும் சமர்ப்பித்திருந்தனர். “இலங்கை அரசின் இராணுவ வெற்றியே வடக்கில் சுமுகமான நிலைமையை ஏற்படுத்தும்” என்று பிரணாப் முகர்ஜி ஜனவரி 27, 2009இல் கூறியதை மேற்கோள் காட்டித் தமது வாதத்தை முன்வைத்தனர் அவர்கள். ஜனவரி – மே 2009 வரை இந்திய அரசின் முக்கியமான பங்களிப்பாக இருந்தது சர்வதேச அழுத்தத்திலிருந்து எழுந்த போர் நிறுத்தக் கோரிக்கையை நிராகரிப்பதற்கும் மழுங்கடிப்பதற்கும் வழியமைத்தமைதான். இதற்கு ஆதாரங்களிலொன்றாக பெப்வரி 7, 2009இல் டென்மார்க் வெளியுறவு அமைச்சர் இந்தியத் தலைவர்களைத் தொடர்பு கொண்டபோது ‘நாங்கள் எம்மாலான சிறப்பு முயற்சிகளையெல்லாம் செய்கிறோம், கவலைப்பட வேண்டாம்’ எனக் கூறியிருந்தமையையும் இதே வகையாகக் கனடிய, அவுஸ்திரேலிய அரசுகளின் தலையீட்டையும் கவனத்தையும் மழுங்கடித்துவிட்டார்கள் என்பதையும் குறிப்பிட்டனர். ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச்சபை கூடத் தேவையில்லை என்று தடுத்தது இந்தியஅரசுதான் என அவர்கள் ஆதாரத்துடன் குறிப்பிட்டார்கள். “இலங்கைக்கு எதிராக நாங்கள் பாதுகாப்புச்சபையைக் கூட்டி ஒன்று சேரத் தேவையில்லை. அது நல்லதல்ல. இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையேயான இருதரப்பு இராஜதந்திர விவகாரமாக இதனைப் பார்ப்பதே பொருத்தமானது. எனச் சிவசங்கரமேனன் குறிப்பிட்டிருந்தமை விக்கி லீக்ஸ் ஆவணங்களில் இருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். தொகுப்புரை வழங்கிய அண்ட்ரூ ஹிக்கின் பாட்டம் அவர்களின் வாதங்கள் முக்கியமானவை. 1. ஈழத் தமிழ் மக்களின் இனப்படுகொலையின் மையநோக்கமாக இருப்பது அவர்களின் சுய நிர்ணய உரிமையையும் அடையாளத்தையும் அழிப்பதுதான். இந்த இனப்படுகொலையின் ஊற்று மூலங்களைப் பிரித்தானியக் காலனித்துவத்தில் இனங்காண முடியும். 2. இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவாக ஈழத் தமிழர்கள் செயற்பட்ட வேளையில் அதற்கு எதிராகவும் சுதந்திரப் போராட்டத்தில் அக்கறையற்றதாகவும் சிங்கள அரசையும் பெரும்பான்மையான சிங்கள மக்களையும் காலனித்துவ அரசு பேணி வந்தது. இந்த அடிப்படையான கோட்பாட்டுப் பிளவை இந்திய ஆளும் வர்க்கம் உணர்ந்து கொள்ளவில்லை. 3. சமூக இணைவு நிலையையும் கூட்டு மனோபாவத்தையும் திட்டமிட்டுச் சிதைத்துள்ளது இலங்கை அரசு. 4. பாலியல் வல்லுறவு, கட்டாயக் கருத்தடை என்பன இனப்படுகொலையின் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டமை. 5. ஐ.நா. அவை, அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா ஆகியவற்றின் ஒத்துழைப்பு. 9.12.2013, செவ்வாய்க்கிழமை தீர்ப்பாயத்தின் பன்னிரண்டு நீதிபதிகளும் பல மணிநேரக் கலந்தாலோசனையின் பிற்பாடு தங்களுடைய தீர்ப்பை வழங்கினார்கள்: இனப்படுகொலை! மக்கள் தீர்ப்பாயம் இத்தாலியிலுள்ள ரோம் நகரில் மையங்கொண்டு இயங்கி வரும் மக்கள் தீர்ப்பாயம் வியட்னாம் போர்க்கால கட்டத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை, வியட்னாமில் அமெரிக்கா இழைத்த போர்க்குற்றங்கள் பற்றி விசாரணை செய்வதற்காக பேர்ட்ரண்ட் ரஸ்ஸல், ழான் போல் சார்த்தர் ஆகியோரால் துவங்கப்பட்ட மக்கள் தீர்ப்பாயத்தின் தொடர்ச்சியாகும். ரஸ்ஸல் – சார்த் தீர்ப்பாயம் என்று இவை குறிப்பிடப்பட்டு வந்தாலும் அமைப்பிலும் செயன்முறைகளிலும் இவை பொதுமக்கள் நலன் சார்ந்த தீர்ப்பாயங்கள்தான். இவற்றின் தீர்ப்புகள் உலக நாடுகளையும் அரசுகளையும் சர்வதேசச் சட்டம் சார்ந்து எவ்வகையிலும் கட்டுப்படுத்தாது. எனினும் அற விழுமியங்கள் சார்ந்தும் தார்மீகக் கடப்பாட்டின் அடிப்படையிலும் இத்தீர்ப்பாயங்களின் தீர்ப்புகளுக்கும் பரிந்துரைகளுக்கும் கண்டனங்களுக்கும் பெரும் வலு இருக்கிறது. பொதுமக்கள், மனித உரிமை நிறுவனங்கள், பாதிக்கப்பட்ட இனக்குழுமங்கள், தொழிற்சங்கங்கள் போன்ற பல தளத்தினரும் அரசுகளுக்கு எதிரான முறைப்பாடுகளை மக்கள் தீர்ப்பாயத்தின் முன் கொண்டு செல்ல முடியும். உலகின் பல பாகங்களிலிருந்து பல்வேறு மொழிகள் பேசும் அறிஞர்கள், புலமையாளர்கள், சர்வதேசச் சட்டங்களில் ஆழ்ந்த அறிவு மிக்கோர், எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பலதரப்பிலுமிருந்து நீதிபதிகள் மக்கள் தீர்ப்பாயத்துக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 1979 ஜூன் மாதத்திலிருந்து ரோம் நகரில் இயங்கி வருகிற மக்கள் தீர்ப்பாயம் நிறுவனம் பெற்ற ஆண்டு 1966. ஈராக் மீதான அமெரிக்க யுத்தம், லத்தீன், அமெரிக்க நாடுகள் பலவற்றில் நிகழ்ந்த படுகொலைகள், இனப்படுகொலை, அமெரிக்க அரசின் ஆதரவுடன் சிலியில் நடந்த இராணுவப் புரட்சி (1974 – 76), பல்வேறுபட்ட பன்னாட்டு வணிக நிறுவனங்களின் மக்கள் விரோதச் செயற்பாடுகள் போபாலில் நிகழ்ந்த அழிவு, பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலிய அரசின் வன்கொடுமைகளும் இனவழிப்பும் போன்ற ஏராளமான மனிதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் தீர்ப்பாயம் தீர விசாரித்துத் தீர்ப்புகளை வழங்கியுள்ளது. அனைத்துலக மானுடத்தின் மனச்சாட்சியாக இருந்து வருகிற அமைப்பு மக்கள் தீர்ப்பாயம் என்று கூற முடியும். அனைத்துலக அமைப்புகள், ஐக்கிய நாடுகள் அவை, அனைத்துலக நீதிமன்றங்கள் எல்லாமே நாடுகளுக்கும் அரசுகளுக்கும் சார்பாகத் தொடர்ந்து இயங்கி வருவதால் பலஸ்தீன மக்கள், ஈழத்தமிழர்கள், குர்தீஷ் மக்கள் போன்ற நூற்றுக்கணக்கான நாடற்ற இனக் குழுமங்களுக்கும் மக்களுக்கும் இப்போதைக்கு மக்கள் தீர்ப்பாயங்களை நாடுவதைவிட வேறு செயல்வழி இல்லை. |