இனப்பிரச்சினைத் தீர்விற்கும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்குமான சந்தர்ப்பமாக தோழர் பத்மநாபாவின் நினைவு நாளை பயன்படுத்திக்கொள்வோம்- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்மு.சந்திரகுமார்

338

 


இப்பொழுது ஒரு ஜனநாயகச் சூழல் படிப்படியாக வலுப்பெற்று வருகிறது .இது இன்னும் விரிவடைந்து, ஒவ்வொருவடைய மனதிலும் சிந்தனையிலும் ஜனநாயப் பண்பை உருவாக்க வேண்டும். அப்படியான ஒரு ஜனநாயகப் பண்பு மனதில் வளர்ந்தால்தான் நம் சிந்தனையிலும் எண்ணங்களிலும் ஜனநாயக விழுமியங்களின் அடிப்படைகள் உருவாகும்.

10933898_10153186511647409_3853915108995026163_n 12115447_10153186509262409_8988520650964475120_n 12243248_10153186509732409_1903634924645369723_n 12294813_10153186508212409_6911600563086642929_n

அதற்கான ஒரு களமாக தோழர் பத்மநபா அவர்களின் இன்றைய நினைவு நாள் அமையவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார் இன்று (22) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நபா அவர்களின் பிறந்ததின நினைவு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அங்குஅவர் மேலும் உரையாற்றுகையில்.

தோழர் நாபாவின் நினைவுகள் மறக்க முடியாதவை மட்டுமல்ல, நினைவு கூரப்படவும் வேண்டியவை. ஏனென்றால் நாபா அவர் வாழ்ந்த, செயற்பட்ட காலத்தில் மட்டுமல்ல, இந்தக் காலகட்டத்துக்குரிய பிரதிநிதியாகவும் இருக்கிறார். அவர் இன்று எம்மோடு இல்லாது விட்டாலும் தன்னுடைய சிந்தனைகளாலும் தோழமையினாலும் லட்சியப் பற்றினாலும் மனிதாபிமானத்தினாலும் ஜனநாயகத்தில் அவர் விருப்புக்கொண்டிருந்த காரணத்தினாலும் இந்தக் காலகட்டத்துக்குரியவராகவும் உள்ளார்.
மகத்தான ஆளுமைகள் இப்படித்தான் காலம் கடந்தும் நிற்பர்.; இதைக் காலத்தினால் வென்று நிற்கும் தகுதி என்பர். அவருடைய தலைமையின் கீழ் இளமைப்பிராயத்தில் நானும் ஒரு போராளியாக இருந்து செயற்படக் கிடைத்தமை எனக்கு வாய்த்த நல்லதோர் அனுபவமாகும். இன்று அவரை நினைவு கூருதென்பது, அவர் கொண்டிருந்த இலட்சியங்களுக்கும் விருப்பங்களுக்கும் மதிப்பளிப்பதாகவே இருக்க வேண்டும்.
இப்பொழுது நாபாவைப்பற்றி, அவருடைய லட்சியம் பற்றி, அவருடைய தோழமையைபற்றி, அவருடைய செயற்பாடுகளைப் பற்றியெல்லாம் இணையத்தளங்களிலும் முகநூல்களிலும் தாரளமாக உரையாடல்கள் நடக்கின்றன.
இங்கே, இந்த அரங்கிற்கூடப் பல தரப்பைச் சேர்ந்தவர்களும், பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டவர்களும் பல வகையான சிந்தனைப்போக்கினை உடையவர்களும் நாபாவின் பொருட்டுக் கூடியிருக்கிறீர்கள். அதுவும் யாழ்ப்பாணத்தில் பல தரப்பைச் சேர்ந்தவர்களும் இணைந்து இந்த ஒன்று கூடலை, இந்த நினைவு கூரலைச் செய்கிறோம் என்பது ஆச்சரியமளிக்கும் ஒன்றே.
இது மாற்றத்தை விரும்பும் மக்களுக்கும் எமக்கும் மகிழ்சியளிக்கும் விசயமாகும்.
இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
வரலாறென்பது இப்படித்தான் விசித்திரமானது.
அது எந்த நேரத்தில் என்னமாதிரியான தோற்றத்தைக் காட்டும் என்று சொல்ல முடியாது. எதிர்பாராத அதிசயங்களை எங்களின் முன்னே நிகழ்த்திக் காட்டும். நாம் செய்யக் கூடியதெல்லாம், வரலாற்றிலிருந்து பாடங்களைப் படித்துக் கொள்வதுதான்.
இப்பொழுது ஒரு ஜனநாயகச் சூழல் படிப்படியாக வலுப்பெற்று வருகிறது என்று நம்புகிறேன்.
இது இன்னும் விரிவடைந்து, ஒவ்வொருவடைய மனதிலும் சிந்தனையிலும் ஜனநாயப் பண்பை உருவாக்க வேண்டும். அப்படியான ஒரு ஜனநாயகப் பண்பு மனதில் வளர்ந்தால்தான் நம் சிந்தனையிலும் எண்ணங்களிலும் ஜனநாயக விழுமியங்களின் அடிப்படைகள் உருவாகும்.
நாபாவை அனைத்துச் சமூகத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான தோழர்கள் தங்களின் மனதில் நினைத்துக்கொண்டேயிருக்கின்றனர். அவருடைய நினைவு நிகழ்வுகள் இன்று பல திசைகளிலும் நடக்கின்றன.
தோழர் நாபாவின் சிறப்பென்பது, அவர் எப்பொழுதும் ஜனநாயக விரும்பியாகவும் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவராகவும் இன, மத, பேதமற்ற ஒருவராகவும் இருந்தார் என்பதுதான்.
நாபாவின் இந்த விருப்பத்திற்குரிய தருணம் ஏதோ ஒரு வடிவில் இப்பொழுது வந்திருப்பதாக நம்புகிறேன். இது வெறுமனே சம்பிரதாயபூர்வமான வார்;த்தையல்ல. உண்மையின் ஒளியைக் கொண்டு சொல்லப்படும் சத்தியவார்த்தையாகும்.
இன்றைய சூழலின் தேவையானது, ஜனநாயகத்தைக் கட்டமைப்பதாகவே உள்ளது. இதற்கு நாம் எமது கடந்தகாலப் படிப்பினைகளைப் பாடமாகக் கொள்ள வேண்டு;ம்.
இதுதான் எமக்கு முன்னே உள்ள மிக முக்கியமான சவாலாகும்.
கடந்த காலத்தை படிப்பினையாகக் கொள்வதா அல்லது கடந்த காலத்தை எம்முடைய எதிர்காலப் பயணத்திற்கு தடையாகக் கொள்வதா? என்று நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது.
பலரும் கடந்த காலத்தை படிப்பினையாகக் கொள்ளத் தயாரல்லாத நிலையில் தான் இருக்கின்றார்கள்.
அவர்கள் மீண்டு மீண்டும் கடந்த காலத்தின் துயரங்களையும் வேதனைகளளையும் அநீதிகளையும் மீட்டுப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றார்கள்.
இது கடந்த காலத்தை மீண்டும் புதுப்பிப்பதற்கே வழிவகுக்கும்.
படிப்பினைக்குப்பதிலாக அந்த வேதனைக்கிடங்கில் கிடந்து உழல்வதற்கு ஒப்பானது.
இதுதான் பிரச்சினையே.
நாம் நாபாவை அவருடைய இலட்சியங்களின் படியும் விருப்பங்களின் படியும் நினைவு கூர்வதாக இருந்தால் முதலில் நாம் பகை மறப்புக்கு செல்ல வேண்டும்.
இது பகை மறப்புக் காலமாகும்
பகை மறப்பை செய்தால்தான் நல்லிணக்கம் உண்டாகும். இந்தப் பகை மறப்பை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதிலிருந்து விடுபட்டு, கடந்த காலப்படிப்பினைகளின் வழியாகப் புதிய காலத்துக்குப் பயணிப்பதைப் பற்றிச் சிந்திப்பது அவசியம்.
இங்கே நாம் எதை நினைவிற் கொள்ளப்போகிறோம்? எவற்றை அடியொற்றி நமது பயணங்களைச் செய்யப்போகிறோம் என்று நான் சிந்திக்கிறேன்.
நல்லிணக்கம் உண்டாகும்போதே ஜனநாயக அடிப்படைகள் வலுப்பெறும். நாபாவும் இதையே இன்றிருந்தால் விரும்பியிருப்பார்.
சிங்களவர்கள் தமிழர்களைச் சந்தேகிக்கிறார்கள். தமிழர்கள் சிங்களவர்களைச் சந்தேகிக்கிறார்கள். முஸ்லிம்கள் இரண்டு தரப்பையும் சந்தேகிக்கிறார்கள். இப்படிச் சந்தேகங்கள் இருந்தால் எப்படி ஒரு புதிய நிலையை நாம் பெற முடியும்?
இதிலிருந்து எப்படி மீள்வது?
ஒவ்வொருவரும் தத்தம் நிலைப்பாடுகளை முன்னிறுத்திக் கொண்டு, தமது நியாயங்களை மட்டும் சொல்லிக் கொண்டிருந்தால் போதாது.
அதற்கு அப்பால் நீண்டகாலத்துயரங்களுக்கு என்ன காரணங்கள் என்று தேட வேண்டும்.
நாம்தான் அதைச் செய்யக்கூடிய தலைமுறையினர். எங்களுக்குத்தான் வலிகளின் துயரம் அதிகளவிற்குத் தெரியும். நாங்கள்தான் காயங்களை அதிகமாகப் பட்டவர்கள். இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மக்களே பெரும் பாரச் சிலுவைகளைச் சுமந்தவர்கள்.
ஆகவே இந்தப் பாரச்சிலுவைகளை இன்னும் நாங்கள் சுமக்க முடியாது. மற்றவர்களுக்கு இவற்றைத் தோள் மாற்றவும் கூடாது.
எனவே, இதை நாம் இறக்கி வைப்போம். நாபா மற்றவர்களுக்காக சிலுவை சுமக்க முன் வந்த போராளி. மற்றவர்களின் மீது எந்தப் பாரச் சிலுவையையும் சுமத்துவதற்கு விரும்பியவரல்ல.
அவருடைய அந்த நம்பிக்கையை – அந்த எண்ணத்தை நாம் ஈடேற்ற புதிய நிலைப்பாடுகளுக்கு எங்களைக் கொண்டு செல்வோம்.
இது அதற்கான ஒரு தொடக்கமாக இருக்கட்டும்.என அவர் மேலும் தெரிவி்த்தார்

இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாண இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் வடக்குகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் விடுதலை அமைப்புக்களின் முன்னாள் பிரதிநிதிகள் மக்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

SHARE