இனவாதத்தை தூண்டிய அமீரலிக்கு தமிழ் மக்கள் வாக்களித்தமை தவறு – யோகேஸ்வரன் எம்.பி

269
கடந்த காலங்களில் இருந்து இனவாதத்தை தூண்டிய பிரதியமைச்சர் அமீரலிக்கு தமிழ் மக்கள் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தமை தவறு என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

வாகரை இறாலோடை வள்ளுவர் வித்தியாலய வருடாந்த விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த பிரதேச மக்களைப் பொறுத்தவரை கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்காது முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளதை நான் வாக்கு எண்ணும் நிலையத்தில் நேரடியாக கண்டேன்.

இந்த சம்பவமானது தமிழ் மக்களை மிகவும் பாதித்திருந்தது. எமது இளைஞர்களின் போராட்டத்தை நேரடியாக பார்த்த இந்த பிரதேச மக்கள் அவர்களின் தியாகங்களை மறந்து அவர்களை கொச்சப்படுத்தும் வகையில் மாற்றுக் கட்சிக்கு வாக்களித்துள்ளார்கள்.

தமிழர்களுடன் இணைந்து இஸ்லாமிய மாணவர்கள் கல்வி கற்கக் கூடாது என இஸ்லாமியர்களுக்கு தனியானதொரு கல்வி வலயத்தை உருவாகி இனவாதத்தை தூண்டிய பிரதியமைச்சர் அமீர் அலிக்கு இந்த பிரதேச மக்கள் வாக்களித்துள்ளீரகள். தமிழ் முஸ்லிம் மாணவர்கள் ஏன் இணைந்து படிக்க முடியாது?

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சமுர்த்திக் கொடுப்பனவை நேரில் சென்று வழங்கினார் என்பதற்காக தமிழ் இனத்தின் ஒரேயொரு உரிமையாக இருக்கின்ற வாக்குகளை இஸ்லாமிய மகனுக்கு வழங்கி எமது இனத்தை கொச்சைப்படுத்தியிருக்கிறீர்கள்.

உங்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிடிக்கவில்லை என்றால் ஏனைய கட்சிகளில் போட்டியிட்ட தமிழனுக்கு வாக்களித்திருக்கலாம்.

தமிழ் மக்கள் எமது சொந்த நிலத்தில் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக நாங்கள் இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த பிரதேச மக்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக நாங்கள் அபிவிருத்தி நடவடிக்கைகளில் புறந்தள்ள மாட்டோம். சகல அபிவிருத்தி நடவடிக்கைகளும் இந்த பிரதேசங்களில் நடைபெறும் அதில் பாராபட்சம் காட்டமாட்டோம் என தெரிவித்தார்.

SHARE