மன்னார் மாவட்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகள், யுத்தத்தில் பிள்ளைகளை இழந்த முன்னாள் போராளிகளின் குடும்பங்கள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள், ஏனைய போராட்டக் குழுக்களில் இருந்து உயிர் நீத்த போராளிகளின் குடும்பங்கள் ஆகியோருக்கான வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சரின் மேற்படிக் குடும்பங்களை வாழ்வாதாரத்தில் உயர்த்தும் திட்டத்திற்கு அமைவாக, 2016 ஆம் ஆண்டிற்கான மன்னார் மாவட்டத்தில் தெரிவான ஒரு தொகுதி பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு 19-09-2016 திங்கள் காலை 11.30 மணியளவில் மன்னாரில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் இடம்பெற்றது.
இத்திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு தனது அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டில் வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக 43 மில்லியன் ருபாய் நிதியை ஒதுக்கி மேற் குறித்த வகையிலே பயனாளிகள் பதிவு செய்யப்பட்ட வேளையிலே வடக்கு மாகாணம் முழுவதும் மொத்தமாக 12,494 குடும்பங்கள் பதிவு செய்திருந்த போது, விசேட தேவைகள் உடையவர்கள் என்னும் அடிப்படையில் 05 மாவட்டங்களிலும் தெரிவுகள் இடம்பெற்று, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 50,000/- ரூபா வீதம் வாழ்வாதார உதவித் திட்டத்தை 860 குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 147 குடும்பங்கள் வீதமும், சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் 125 குடும்பங்களுக்கும் இத்திட்டம் வழங்கப்பட்டமை அனைவரும் அறிந்ததே.
அந்த வகையிலே மீதமாக உள்ள பதிவு செய்த குடும்பங்களுக்கும், கடந்த ஆண்டு பதிவு செய்யத் தவறிய நிலையில் இந்த ஆண்டு பதிவுகளைச் செய்த குடும்பங்களுடன் ஏனைய போராட்டக் குழுக்களில் இருந்து இறந்த அங்கத்தவர்களின் குடும்பங்களின் பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டு இவ்வருட நிதி ஒதுக்கீட்டில் 25 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 குடும்பங்களைத் தெரிவு செய்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஐம்பது ஆயிரம் 50,000/= வீதம் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இருந்து 500 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, பயனாளிகளின் வாழ்வாதாரத் தேவைகள் தொடர்பான அவர்களது தெரிவிற்கான விசேட கூட்டம் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு, குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கடிப்படையில் விசேட தெரிவின் மூலம் தெரிவு செய்யப்பட்ட குறித்த ஒருதொகை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 11 பயனாளிகளுக்கான, அவர்கள் தெரிவு செய்த வாழ்வாதாரத் திட்டங்களான பசு மாட்டுக்கான காசோலைகள், மரவேலை செய்வதற்கான இயந்திர உபகாரங்கள், இரும்பு ஒட்டு வேலைகள் செய்வதற்கான இயந்திர உபகரணங்கள், வாடகைப் பாத்திரங்கள், தோட்டச் செய்கை செய்வதற்கான நீர் இறைக்கும் இயந்திரங்கள் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.
இவ் நிகழ்விற்கு கத்தோலிக்க அருட்தந்தை, வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். அத்தோடு இதேபோன்ற தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு மாகாணத்தின் ஏனைய 04 மாவட்டங்களிலும் விரைவில் இடம்பெறவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.



