இன்று நாட்டில் தகவல் அறியும் சட்டமும் கருத்து சுதந்திரமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது

இன்று நாட்டில் தகவல் அறியும் சட்டமும் கருத்து சுதந்திரமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.அவ்வாறான ஒரு நிலையில் அமைச்சர் தயாசிறி ஜயசேகர வட மாகாண முதலமைச்சரை அடித்து விரட்டுங்கள் என கூறியிருப்பது தமிழர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதை அமைச்சர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்
இன்று சீ.வி.விக்னேஸ்வரன் கூறியிருக்கின்ற அனைத்து விடயங்களையும் நாம் ஏற்றுக் கொள்வதா இல்லையா என தீர்மானக்கின்ற இடம் பாராளுமன்றமே.பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று இந்த அரசாங்கத்துடன் இணைந்து தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க தமது அழுத்தத்தை கொடுத்து வருகின்றது.ஒரே நாட்டிற்குள் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்பதையே அவர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள்.
ஆனால் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வெளிநாட்டு நீதிபதிகளை உற்வாங்க வேண்டும் அதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றதா?என்பதை வட மாகாண சபை ஆராய வேண்டும் என்ற கருத்தையே அவர் தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களிலும் பல பிரேரணைகள் வட மாகாசபையின் மூலமாக கொண்டு வரப்பட்ட போதிலும் அவற்றில் அரசாங்கம் எது தேவையே எது சாத்தியப்பாடானதோ என்பதை ஆராய்ந்து இறுதி தீர்மானத்திற்கு வந்துள்ளது.அது போல இந்த கருத்தையும் நான் பார்க்கின்றேன்.
ஆனால் இவரைவிட மிகவும் மோசமான இனவாத கருத்துக்களை வெளியிடுகின்றவர்களும் இந்த நாட்டில் இருக்கின்றார்கள் என்பதை அமைச்சர் தயாசிறி ஜயசேகர புரிந்து கொள்ள வேண்டும்.இன்று எமது நாட்டில் மக்களுக்கு மத போதனைகளை செய்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டியவர்கள் அதனை விடுத்து மத வாதத்தையும் இனவாதத்தையும் தூண்டுவதற்கு துணை போகின்றார்கள்.அப்படியானால் அவர்களை என்ன செய்வது?அவர்களையும் அப்படியானால் அடித்து விரட்டுவதா?அது சாத்தியமாகுமா?அதனை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?இல்லாவிட்டால் அவர்களை எல்லாம் ஒரு இடத்திற்கு கொண்டு வந்து கொலை செய்துவிட வேண்டும்.அது சாத்தியமா?
இதில் எதுவுமே சாத்தியமில்லை. யாரும் எந்த ஒரு கருத்தையும் வெளியிடலாம் அதனை ஏற்றுக் கொள்வதும் விடுவதும் பாராளுமன்றத்தின் கரங்களிலேயே தங்கியுள்ளது. ஆமைச்சராக இருக்கின்ற ஒருவர் அதிலும் விளையாட்டுத்துறைக்கு பொறுப்பாக இருக்கின்ற ஒரு அமைச்சர் இவ்வாறான கருத்தக்களை வெளியிடுவது மிகவும் கவலையளிக்கின்றது.அதிலும் அவர் மீது தமிழ் மக்கள் நல்ல ஒரு அபிப்பிராயத்தை வைத்திருக்கின்றார்கள்.
எனவே எதிர்காலத்தில் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதை அவர் தவிர்த்துக் கொள்வார் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.