நாட்டிலுள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் நேற்று ஸ்தம்பிதமடைந்து போய்விட்டன.
யாழ். பல்கலைக்கழக மாணவர் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்ட சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதத்தில், இன மத பேதங்களுக்கு அப்பால் அனைத்து மாணவர்களும் நேற்று ஒன்றுதிரண்டிருந்தமை சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்.
நாடெங்கும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்களென்ற பேதமின்றி பெருந்தொகையான மாணவர்கள் பகிஷ்கரிப்பிலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டதை நேற்றுக் காண முடிந்தது.
பல்கலைக்கழக மாணவர்களின் நேற்றைய ஒருமித்த கண்டனச் செயற்பாடுகள் சில விடயங்களை எமக்குத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை சந்தேகத்துக்கு இடமின்றி அப்பட்டமான கொடூர சம்பவம்.
பொலிஸார் நடத்தியிருக்கும் இச் செயலானது மனித நேயத்துக்கு அப்பாற்பட்ட மோசமான ஈவிரக்கமற்ற செயல்.
நேற்றைய கண்டன ஆர்ப்பாட்டங்களிலும் பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்ட அத்தனை மாணவர்களிடமிருந்தும் இக்கருத்து பகிரங்கமாகவே வெளிப்பட்டது.
எதிர்காலக் கனவுகளுடன் பல்கலைக்கழகத்துக்குள் பிரவேசித்த இரு மாணவர்களின் உயிரை பொலிஸார் அநியாயமாகப் பறித்து விட்டனர்.
அது மாத்திரமன்றி அம்மாணவர்களின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் ஆறாத துயரத்தைக் கொடுத்துள்ளனர் பொலிஸார்.
மாணவரின் நேற்றைய எதிர்ப்பு நடவடிக்கையின் போது தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்த முக்கியமான விடயம் அது.
இதுதவிர, மற்றொரு விடயம் எமக்கெல்லாம் மனதுக்கு நிறைவாக உள்ளது.
தமிழ் மாணவர்கள் இருவருக்கு நேர்ந்துள்ள அநீதியை உலகுக்குத் தெரியப்படுத்துவதற்காக தமிழ் மாணவர்களுடன் முஸ்லிம், சிங்கள மாணவர்களும் ஒன்றுதிரண்டிருந்ததை நேற்றுக் காண முடிந்தது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்றைய எதிர்ப்பு நடவடிக்கைக்கான அழைப்பை விடுத்திருந்ததென்றாலும், அத்தனை மாணவர்களும் அந்நடவடிக்கையில் பங்கேற்றமைதான் இங்கு முக்கியமான விடயம்.
இளமைப் பருவம் உண்மையிலேயே இன மத பேதங்களுக்கு உட்படாதது என்பதையும், அரசியல்வாதிகளாலேயே பேதங்கள் தூண்டப்படுகின்றன என்பதையும் பல்கலைக்கழக மாணவர்களின் ஒற்றுமை எமக்கெல்லாம் புரிய வைக்கின்றது.
யாழ். பல்கலைக்கழகத்தில் சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்குமிடையே பெரும் மோதலொன்று இடம்பெற்றதும், அம்மோதலில் மாணவர் சிலர் காயமடைந்ததும் இன்னும் நினைவிருக்கின்றது.
தமிழ் – சிங்கள மாணவர்கள் எதிரும் புதிருமாக நின்று மோதலில் ஈடுபட்டதனால் அப்பல்கலைக்கழகமே பெரும் யுத்தகளமாக மாறியிருந்தது.
மாணவர்களுக்கிடையிலான அம்மோதலை தென்னிலங்கையிலுள்ள இனவாத அரசியல் சக்திகள் தமிழ் – சிங்கள மோதலாக திரிபுபடுத்துவதற்கு முற்பட்டதையும், அன்றைய பதற்றத்தைத் தணிப்பதில் அரசாங்கத் தரப்பானது பெரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டதையும் மறந்து விடுவதற்கில்லை.
அம்மோதலின் பின்னர் யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் – சிங்கள மாணவர்களுக்கிடையிலான விரோதமே எந்நாளும் தொடரப் போகின்றதென்றே எதிர்பார்க்கப்பட்டது.
இவ்வாறான அசௌகரியமான சூழல் குறித்து பலதரப்பினரும் அச்சமடைந்ததும் உண்மை.
எனினும் நேற்றைய நிலைமையானது முன்னைய விரோத சூழலைச் சித்தரிப்பதாக இருக்கவில்லை.
யாழ். பல்கலைக்கழகத்தின் சிங்கள மாணவர்களும் தங்களது இரங்கலையும் பொலிஸாரின் செயல் மீதான கண்டனத்தையும் வெளிப்படுத்தி நின்றதைக் காணமுடிந்தது.
நேற்றைய காட்சியானது உருக்கம் நிறைந்தது மாத்திரமன்றி, இன பேதங்களைக் கடந்த மனித நேயத்தையும் ஐக்கியத்தையும் வெளிப்படுத்தியதை நாம் கண்டோம்.
இத்தகைய வேளையில் பல்கலைக்கழக மாணவர்கள் கொண்டுள்ள எதிர்கால தார்மிகக் கடமைகளை இவ்விடத்தில் நினைவுபடுத்த வேண்டியது அவசியமாகின்றது.
பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பாக எமது சமூகத்தில் சர்ச்சைக்குரிய அபிப்பிராயங்கள் நிலவி வருகின்றன.
இம் மாணவர்கள் நடத்தி வருகின்ற போராட்டங்களாலேயே இவ்வாறான அபிப்பிராயம் வளர்ந்துள்ளதென்பதே உண்மை.
மாணவர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு நியாயமான காரணங்கள் உள்ள போதிலும் சமூகம் அதனை ஆராய்ந்து பார்க்க முற்படுவதில்லை.
இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் வெறுமனே போராட்டக்காரர்களென்ற கருத்து நேற்றைய தினம் ஓரளவு மாற்றம் பெற்றுள்ளதென்றுதான் கூற வேண்டும்.
பல்கலைக்கழக மாணவர்கள் அநீதிக்கு எதிராக அணிதிரளக் கூடியவர்கள் மாத்திரமன்றி மனித நேயமும் கொண்டவர்களென்பதை நேற்றைய நிகழ்வுகள் உணர்த்தியிருக்கின்றன.
இதேவேளை பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்காலத்தில் நாட்டில் பாரிய பொறுப்புகளைச் சுமக்க வேண்டியவர்களாவர்.
அநீதிகளை அஹிம்சை வழியில் எதிர்க்க வேண்டிய கடப்பாடும் அவர்களுக்கு உண்டு.
நேற்று வெளிப்பட்டதைப் போன்ற நிதானமும் பொறுப்பும் மிக்க பிரதிபலிப்புகளையே எமது சமூகம் அவர்களிடம் எதிர்பார்க்கின்றது.