பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள இமானுவேல் மக்ரான் அபாரமாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
வரலாற்றில் முதன்முறையாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இந்தத் தேர்தலை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வந்தன.
பிரான்ஸ் நாட்டு வரலாற்றில் 1958ஆம் ஆண்டு முதல் பெரும்பான்மை பெற்ற இரண்டு முக்கிய கட்சிகள் மட்டுமே தொடர்ந்து ஆட்சியை பிடித்து வந்துள்ளன.
ஆனால், இந்த வழக்கத்தை உடைத்த மக்ரான் எதிரணி வேட்பாளரான லீ பென்னை தோல்வி அடைய செய்து சுமார் 65 சதவிகித வாக்குகள் மூலம் வெற்றி பெற்றுள்ளார்.
பிரான்ஸ் நாட்டை வழிநடத்திய நெப்போலியன் போனபர்ட்டிற்கு பிறகு மிகவும் இளம்வயதில் உயரிய பதவிக்கு வந்தவர் இம்மானுவேல் மேக்ரான் தான்.
இதன் மூலம் சர்வதேச அளவில் இளம் தலைவர்களின் பட்டியலில் மேக்ரான் 4வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில், புதிய ஜனாதிபதி அகதிகளுக்கு ஆதரவாக செயல்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனினும் இது தொடர்பாக தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்ரான் ஒரு உறுதியான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தினார்.
அண்டை நாடான ஜேர்மனியில் சான்சலர் அகதிகளுக்கு அடைக்கலம் அளித்து வருவதை மக்ரான் வெகுவாக பாராட்டியுள்ளார்.
மேக்ரானை எதிர்த்து போட்டியிட்ட லீ பென் ‘அகதிகளுக்கு புகலிடம் அளிப்பதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார். ஆனால், இதனை மக்ரான் வரவேற்கவில்லை.
இது குறித்து மேக்ரான் பேசியபோது, ‘பிரான்ஸ் நாட்டில் அகதிகளுக்கு புகலிடம் அளிப்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
பாதுகாப்பு தேவைப்படும் அகதிகளுக்கு நிச்சயமாக பிரான்ஸ் அடைக்கலம் வழங்கும். ஆனால், தகுதி இல்லாத புலம்பெயர்ந்தவர்கள் உடனடியாக தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.
புலம்பெயர்ந்தவர்களின் கோரிக்கையை அடுத்த 6 மாதங்களுக்குள் பரிசீலிக்கப்படும் எனவும் இம்மானுவேல் மக்ரான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.