இயற்கை தரும் துன்பத்தை அரசியல் துரும்பாக்குவதா?

589

இலங்கை, இந்தியா உட்பட தெற்காசியப் பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கெல்லாம் மார்ச், ஏப்ரல் மாதங்கள் மிகுந்த உபத்திரவம் தருவதுண்டு.

வருடம் தோறும் மார்ச் மாத நடுப்பகுதி நெருங்கியதும் உஷ்ணம் ஆரம்பமாகிவிடும். இந்த வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து சென்று ஏப்ரல் மாதத்தில் உச்சத்தைத் தொட்டுவிடும். மே மாதம் தொடங்கும் வரை அதிகரித்த உஷ்ணத்தையும், அதன் விளைவினால் ஏற்படுகின்ற உபாதைகளையும் மக்கள் எவ்வாறேனும் தாங்கித்தான் ஆக வேண்டும்.

இலங்கையைப் பார்க்கிலும் இந்திய மக்கள் அனுபவிக்கின்ற கொடுமை அதிகம். வெப்பம் தாங்காமலும், தண்ணீர் இல்லாததாலும் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழக்கும் பரிதாபமும், இந்தியாவில் ஆண்டு தோறும் நடப்பது வழக்கம். அந்நாட்டுடன் ஒப்பிடுகையில் இலங்கை மக்கள் அனுபவிக்கின்ற துன்பம் பாரியதல்ல.

ஆனாலும் கடந்த சுமார் கால் நூற்றாண்டு காலப் பகுதியுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் உஷ்ணமான காலநிலை இப்போது கூடுதலாக அதிகரித்திருக்கிறது. வெப்பத்தைச் சகிக்க முடியாமல் அல்லலுறுவது ஒருபுறமிருக்க, உஷ்ணத்துக்குரிய வியாதிகளும் மக்களைச் சங்கடப்படுத்துகின்றன.

இவ்வியாதிகளுக்குச் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வைத்தியர்கள் கூறுகின்றனர். அத்துடன் வரட்சியையும் வெப்பத்தையும் சமாளிப்பதற்கு ஏதுவாக வைத்தியர்கள் அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர்.

கூடுதல் நீர் அருந்துவது. பழங்கள். கீரை வகைகளை அதிகம் உண்பது, இயற்கையான பழங்களை அருந்துவது. கடும் வெயிலில் செல்வதைத் தவிர்த்தல் போன்ற அறிவுரைகளையெல்லாம் வைத்தியர்கள் கூறுகின்றனர். உஷ்ண காலத்துக்கு முகம் கொடுக்கக் கூடிய வகையில் வைத்தியர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றி நடந்து கொள்வது அவசியம்.

இல்லையேல் கூடுதல் உஷ்ணத்தின் பக்கவிளைவுகளால் நாம் உடல் பாதிப்புக்கு ஆளாக வேண்டிய ஆபத்து ஏற்படலாம். உஷ்ணம் காரணமாக இவ்வருடத்தில் முதல்முறையாக யாழ்ப்பாணத்தில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு மக்கள் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம். சிறுவர்கள் விபரம் அறியாதவர்களென்பதால் அவர்கள் விடயத்தில் பெற்றோர் அவதானமாக இருப்பது அவசியம்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, நாட்டின் வரட்சிக் கால நிலையானது அரசாங்கத்துக்கும் ஓரளவு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் முக்கிய நீர்த்தேக்கங்கள் விரைவாக வற்றி வருகின்றன. நீர்மின்சாரத் தயாரிப்பு குறைவதனால் மன்சாரத் துண்டிப்பை எதிர்நோக்க வேண்டியேற்படலாம் என இலங்கை மின்சாரசபை கூறுகின்றது.

அதேவேளை நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. நாட்டில் வரட்சி தொடருமானால் நீர் விநியோகத்திலும் துண்டிப்பு ஏற்படக் கூடிய அபாயம் எதிர்நோக்கப்படுகிறது.

மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றின் பாவனையில் மக்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். இல்லையேல் இவ்விரண்டிலும் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படுவது தவிர்க்க முடியாமல் போய் விடலாம்.

நாடடில் அண்மையில் ஏற்பட்ட மின்துண்டிப்பை அரசாங்கத்துக்கு எதிரான சக்திகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் நடத்துவதற்கு முற்பட்டன. வரட்சி காரணமாக மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படுவதனால் அரசாங்கத்துக்கு எதிரான அணியினர் அதனையும் தங்களுக்கான துரும்பாகப் பயன்படுத்தாமல் விடப் போவதில்லை.

நாட்டில் வரட்சி ஏற்பட்டதற்கும் இன்றைய அரசாங்கமே காரணமென எதிரணியினர் மக்களுக்குக் கூறாமல் விடப் போவதில்லை. நீர் விநியோகத் துண்டிப்புக்கும் அவர்கள் அரசு மீதுதான் பழி போடுவார்கள். நாட்டில் குழப்பமான நிலைமையொன்று உருவாக வேண்டுமென்பதே எதிரணியினரின் இன்றைய எதிர்பார்ப்பாக உள்ளது.

மின்சாரக் கட்டணத்தையும் எரிபொருட்களின் விலையையும் முன்னைய ஆட்சியாளர்கள் நாட்டு மக்களின் நலன்களைக் கவனத்தில் கொள்ளாமல் கண்டபடி அதிகரித்ததை மறந்து விட முடியாது. மின்கட்டணத்தையும் எரிபொருள் விலையையும் இன்றைய அரசு கணிசமான அளவு குறைத்திருக்கிறது. மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காகவே அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனவே மின்துண்டிப்பு. நீர் விநியோகத் துண்டிப்பு என்பதெல்லாம் அரசாங்கத்தின் கைகளில் இல்லை. அவையெல்லாம் இயற்கை அளிக்கின்ற துன்பங்கள். இவற்றை அரசியலாக்குவதற்கு எதிரணியினர் முற்படுவதை மக்கள் புரிந்து கொள்வது அவசியம்.

SHARE