இரட்டைக் கொலைச் சம்பவம்: விசாரணையில் வெளியான முக்கிய தகவல்

24

 

ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி மொரகஹஹேன (Moragahahena) பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்திற்கு சந்தேகநபர்கள் பயன்படுத்திய கார் சப்புகஸ்கந்த பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆரம்பக்கட்ட விசாரணையின் பின்னர் காரை வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டதாக மொரகஹஹேன பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட நபர், சபுகஸ்கந்த ஹெயன்துடுவ கொட்டுன்ன வீதியில் வசிக்கும் 35 வயதுடையவர் என கூறப்படுகிறது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்
சந்தேக நபர் வாகனங்களை விற்பனை, இடமாற்றம் மற்றும் வர்ணம் பூசும் வியாபாரத்தை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, கொலை தொடர்பில் தற்போது விளக்கமறியலில் உள்ள சஞ்சய் நமட்ட, வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஹோமாகம ஹந்தய நமட்டவின் நெருங்கிய உறவினரே தனக்கு காரை வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

இதன்படி, சியம்பலாப்ப பிரதேசத்தில் வீதி சமிக்ஞைக்கு அருகில் உள்ள பாதசாரிகள் செல்லும் நடைபாதைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை எடுத்து வெள்ளை நிறத்தில் மாற்றுமாறு பணித்ததாக சந்தேக நபர் கூறியுள்ளார்.

ஹோமாகம ஹந்தயா டுபாய் மாநிலத்தில் இருந்து ஒரு இலட்சம் ரூபாவையும் கடுவலை பிரதேசத்தில் உள்ள வங்கியொன்றில் இருந்து மேலும் 40,000 ரூபாவையும் தனது கணக்கில் வரவு வைத்துள்ளதாக சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.

சிசிரீவி காட்சி
இந்நிலையில் காருக்கு வெள்ளை நிறப்பூச்சு மற்றும் இலக்கத்தக்கடை மாற்றி, அந்த இடத்திற்கு கொண்டு சென்று நிறுத்தியதாக, கைது செய்யப்பட்ட நபர், வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதன்படி வாகனத்தை கொண்டு வந்து நிறுத்திய காட்சியானது அருகிலுள்ள சிசிரீவி கருவியில் பதிவாகியுள்ளது. வெளிநாட்டில் உள்ள ஹோமாகம ஹந்தயா மற்றும் அவரது நண்பர் சஞ்சய் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்களது உறவினர்கள் கைது செய்யப்பட்ட போது இந்த சந்தேக நபர் உதவிகளை வழங்க தலையிட்டதாக மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஏப்ரல் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE