தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடிய ரஹானேவுக்கு முன்னாள் இந்திய அணித்தலைவர் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இந்தியா அணி 337 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் ரஹானே முதல் இன்னிங்சில் 127 ஓட்டங்களும், 2வது இன்னிங்சில் 100 ஓட்டங்களும் எடுத்தார்.
இதன்மூலம் இரண்டு இன்னிங்சில் சதம் அடித்த 5வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இது பற்றி முன்னாள் இந்திய அணித்தலைவரும் தொலைக்காட்சி வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறுகையில், ரஹானே தடுப்பாட்டத்திலும் அதிரடி ஆட்டத்திலும் அசத்துகிறார்.
எல்லாவிதத்திலும் விளையாடக் கூடிய சிறந்த துடுப்பாட்ட வீரராக இருக்கிறார். இதனால் தற்போதைய டெஸ்ட் அணியில் அவர் ஜொலிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், சொந்த மண்ணில் விராட் கோஹ்லி ஓட்டங்கள் குவிக்க சிரமப்பட்டதாகவும், அவர் கடைசி போட்டியில் சதத்தை தவறவிட்டது தனக்கு வருத்தமளிப்பதாகவும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
|