இந்தோனேசியாவின் பாலியில் இரண்டு தீவுகளை இணைக்கும் தொங்கும் மஞ்சள் பாலம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் ஏராளமான தீவுக்கூட்டங்கள் உள்ளன. இதில் பாலித் தீவும் ஒன்று. இந்த தீவில் உள்ள சிறிய தீவுகளான நுசா லெம்போங்கன் மற்றும் நுசா செனிங்கன் தீவை இணைப்பதற்காக மஞ்சள் நிற பாலம் ஜெம்பாடன் கனிங் உள்ளது.
இந்த இரண்டு தீவுகளில் உள்ள மக்கள் நடைபயணமாகவும், மோட்டார் சைக்களில் மூலமாகவும் கடந்து செல்வது வழக்கம். உள்ளூர் நேரப்படி இன்று மாலை 6 மணியளவில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் பாலம் திடீரென உடைந்து விழுந்தது.
இதில் 9 பேர் பலியானார்கள். 42 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட விபத்தின் முன்பாக பாலம் ஆபத்தான நிலையில் இருந்துள்ளதாக அதை கடந்து சென்ற சிலர் கூறியுள்ளனர். ஆனால் பொதுமக்கள் அதை கருத்தில் கொள்ளவில்லை என்பதே பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விபத்தில் பலியானவர்களில் 3 குழந்தைகளும் அடங்கும் என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மட்டுமின்றி குறித்த விபத்தில் எவரேனும் மாயமாகியுள்ளனரா எனவும் பொலிஸார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
30 ஆண்டுகள் பழமையான இந்த பாலமானது மிக குறைவான எண்ணிக்கையிலான மக்கள் கடந்து செல்ல மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று ஒரு விழாவில் கலந்து கொண்ட திரளான மக்கள் இந்த பாலத்தை கடந்து செல்ல பயன்படுத்தியுள்ளனர்.
இதற்கு முன் ஜெம்பாடன் கனிங் என்ற இந்த பாலம் 2013-ம் ஆண்டு உடைந்து விழுந்தது. இதில் யாரும் காயம் அடையவில்லை என கூறப்படுகிறது.