இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரத்தினபுரி – அபுகஸ்தன்ன, மூக்குவத்தை தோட்டத்தில் 16.12.2015 அன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 06 தொழிலாளர் குடியிருப்பு அறைகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
எனினும் சில வீடுகளில் இருந்த சில பொருட்களை மாத்திரம் அவர்களால் தீக்கு இரையாகாமல் வெளியில் கொண்டு வர முடிந்துள்ளது. பெருமளவிலான வீட்டுபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், சிறிது சிறிதாக சேகரித்த தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கு இரையாகியுள்ளன. எனினும் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 06 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 06 குடும்பங்களை சேர்ந்த 30ற்கும் மேற்பட்டவர்கள் தற்காலிகமாக ஆலய மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மின்சார கோளாறு காரணமாகவே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.