ஶ்ரீலங்கா இராணுவத் தளபதி கோரியுள்ள மேலதிக அதிகாரத்தை வழங்க அரசு தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.
‘குறிப்பிட்டளவான ஒரு காலத்துக்கு மாத்திரம், இராணுவத்துக்குத் தேவையான அதிகாரங்களை வழங்கினால், வடக்கில் செயற்படும் குழுக்களை அடக்கி விட முடியும். இராணுவம் தனது கடமைகளை செய்யும். இராணுவத்துக்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவது பற்றி அரசுதான் முடிவு செய்ய வேண்டும்’ என்று இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கண்டியில் வைத்து நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் கொழும்பில் நேற்றுக் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சரியான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் தீர்மானங்களை எடுக்கவும் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அதிகாரம் இருக்க வேண்டும். அதற்குத் தேவையான கூடிய அதிகாரங்களை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.
இதேவேளை, யாழ்ப்பாணக் குடாநாட்டில், ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்களை அடங்குவதற்கு அரச தலைவரின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அந்த அனுமதி கிடைத்தால், 48 மணி நேரத்துக்குள் அந்தக் குழுக்களை அடக்கிவிட முடியும் என்றும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதி கடந்த 20ஆம் திகதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.