தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளை, குற்றமிழைத்த இராணுவத்தினரோடு ஒப்பிட்டு இராணுவத்தினருக்கும் பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்று கோருவது நகைப்புக்குரிய விடயம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கூடாது என்று தென்னிலங்கையில் பரவலாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சட்டத்தின் படி அரசியல் கைதிகளின் விடயத்தினைக் கூறுவதாயின், அரசியல் கைதிகளுக்கு பிணை கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. அதனை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
பொது மன்னிப்பு கொடுப்பதென்பது அரசியல் ரீதியான தீர்மானம். மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) காலத்தில் கொடூரமான வேலைகளை செய்தவர்களுக்கு கூட பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
எமக்கு மட்டும் ஏன் பொது மன்னிப்பு அளிக்கவில்லை என தமிழ் அரசியல் கைதிகள் கேள்வி எழுப்புகின்றார்கள். மற்றவர்கள் கூறும் காரணத்தினைப் பார்த்தால் குற்றஞ்சாட்டப்படப் போகும் இராணுவத்தினர் அவர்களையும் விடுவிக்க வேண்டுமென்று கேட்கின்றார்கள். இவ்வாறான கேள்வி சிரிப்புக்கு இடமான கேள்வி.
அரசியல் கைதிகள் குற்றவாளிகள் இல்லை என அரசு சொல்லிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், அரசியல் கைதிகளை குற்றவாளிகள் என கருத முடியாது. அப்படியான நிலையில், குற்றமிழைத்துள்ள இராணுவத்தினரையும் விடுவிக்க வேண்டுமென்றால், அதன் கருத்து தனக்கு விளங்கவில்லை.” என்றுள்ளார்