இராணுவம் தாக்கல் செய்த பட்டியலை ஏற்க முடியாது – முல்லைத்தீவு நீதிமன்றம்

214

court

இராணுவத்திடம் சரணடைந்த பின்னர், காணாமல் போனவர்கள் சம்பந்தமாக இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த பெயர்ப் பட்டியலை ஏற்றுக்கொள்ள முடியாது என முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.சம்புதீன் அறிவித்துள்ளார்.

போரின் போது காணாமல் போனவர்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த 14 ஆட்கொணர்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே நீதிபதி இதனை கூறியுள்ளார்.

போரின் இறுதி நான்கு நாட்களுக்குள் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக பெருந்தொகையான தமிழ் மக்களை, அவர்களின் உறவினர்கள் இராணுவத்தினரிடம் ஒப்படைத்தனர்.

ஒப்படைக்கப்பட்டவர்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் போது காணாமல் போயுள்ளதாக மனுக்கள் கூறப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் போது, இராணுவம் புனர்வாழ்வு வழங்கியவர்களின் பெயர் பட்டியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை நிராகரித்த நீதிபதி, மனுவில் கூறப்பட்டுள்ள நபர்களின் பெயர் பட்டியலை அடுத்த வழக்கு விசாரணையின் போது தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மனுவில் குறிப்பிட்டுள்ள பெயர் பட்டியலுக்கு மாறான பெயர் பட்டியலையே இராணுவ அதிகாரி தாக்கல் செய்ததாக நீதிமன்றத்தில் தெரியவந்ததாக மனுதார்களின் உரிமைகளுக்காக ஆஜரான சட்டத்தரணி ஆர்.எஸ். இரத்தினவேல் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களின் உயிர்களை பாதுகாத்து தருவதாக இராணுவம் வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே உறவினர்கள் அவர்களை சாட்சியங்களுடன் இராணுவத்தினரிடம் ஒப்படைத்ததாகவும் இரத்தினவேல் குறிப்பிட்டுள்ளார்.

SHARE