இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் இருந்த வெடிகுண்டு குவியல் 25 நாட்களுக்கு பின்னர் பொலிஸ் பாதுகாப்புடன் சிவகங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஜுன் 25இல் தங்கச்சிமடம், அந்தோணியார்புரம் மீனவர் எடிசன் வீடு பின்புறத்தில் செப்டிக் டாங்க் தோண்டிய போது 10,828 இயந்திர துப்பாக்கி தோட்டாக்கள், 199 டி.என்.டி.சிலாப் வெடிகுண்டுகள், 87 சிக்னல் லைட் தோட்டாக்கள், ராக்கெட் லாஞ்சரில் பொருத்த கூடிய 20 வெடிகுண்டுகள், 2 கண்ணி வெடிகுண்டுகள், 8 டெட்டனேட்டர் ஒயர் ரோல், செயிலிழந்த வெடிமருந்துகள் என்பவை கண்டெடுக்கப்பட்டன.
இதில் துப்பாக்கி தோட்டாக்கள் இராமநாதபுரம் ஆயுதப்படைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏனைய வெடிகுண்டுகளை அதே பகுதியில் குழியில் வைத்து துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பாதுகாத்தனர்.
வெடிகுண்டுகளை அகற்ற தாமதமானதால், அச்சமடைந்த எடிசன் குடும்பத்தினர் கடந்த 17ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், அன்றிரவே வெடிகுண்டுகளை அகற்ற, திருவாடானை நீதிபதி பாலமுருகன் உத்தரவிட்டார்.
]அதன்படி சிவகங்கை கனிமவள நிறுவன களஞ்சியசாலையில் வெடிகுண்டுகளை வைக்க தங்கச்சிமடம் பொலிஸார் அனுமதி பெற்றனர்.
நேற்று இராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி, திருவாடானை நீதிபதி பாலமுருகன் ஆகியோர் தங்கச்சிமடம் மீனவர் வீட்டிற்கு வந்து வெடிகுண்டுகளை பார்வையிட்டனர்.
இதனையடுத்து நீதிபதிகள், வெடிகுண்டு கட்டுப்பாடு துணை அலுவலக நிபுணர் சேக்உசேன், இராமேஸ்வரம் டி.எஸ்.பி.மகேஷ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். இதன்பின் 10 பெட்டிகளில் வெடிகுண்டுகளை வைத்து பிரத்தியேக வாகனத்தில் ஏற்றி சிவகங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சிவகங்கை அருகே கோமாளிபட்டியில் கனிமவள நிறுவன களஞ்சியசாலையில் நேற்று மாலை 10 வெடிகுண்டு பெட்டிகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இந்த நிலையில், 25 நாட்கள் நீடித்த வெடிகுண்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்திலிருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டுகளை அகற்றிய போது மீனவர் வீட்டிற்குள் செய்தி சேகரிக்க, புகைப்படம் எடுக்க பத்திரிகையாளர்களை பொஸார் அனுமதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த வெடிபொருட்கள் 1980 ஆண்டு காலப்பகுதிக்கு உரியவை என்றும், அவை இலங்கையில் செயற்பட்ட போராளிகள் குழு ஒன்றுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.