
இன்று உலக ஊடக சுதந்திர தினம். இன்றைய நாளில் இலங்கையில் ஊடக சுந்திர வரலாறு குறித்து சிந்திப்பதும் நினைவுகூர்வதும் மிகவும் முக்கியமானதா அமைகின்றது. இலங்கையில் போர் மற்றும் இனமுரண்பாடு தொடங்கிய காலம் தொட்டு ஊடகங்கள் தமது சுதந்திரத்தை இழந்த நிலையில் இருந்துள்ளன. இலங்கையைப் பொறுத்தவரையில் ஊடக சுதந்திரம் என்பது உயிரை அர்ப்பணித்து பணியாற்றும் துறையாகவே கருதப்படுகின்றது.
மே 03ஐ உலக ஊடக சுதந்திர நாள் (World Press Freedom Day) என்று ஐ.நா அறிவித்தது. ஊடக சுதந்திரத்தை வலுப்படுத்தும் நோக்கிலும் ஐக்கிய நாடுகள் சபையினால் “மனித உரிமைகள் சாசனம்” பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. ஊடகவியலின் உரிமைகளைப் பேணும் காப்பாற்றும் முதன்மையான நாளாக கருதப்படுகிறது.
1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று ஊடக சுதந்திர நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆபிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே “பத்திரிகை சுதந்திர சாசனம்” (Declaration of Windhoek) முன்வைக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட ,’உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடகச் சுதந்திரத்தினதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை’ என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக தோற்றம் பெற்றதும் சுட்டிக்காட்டத்தக்கது.
ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ உலக ஊடக சுதந்திர விருதை இந்நாளில் வழங்கிக் கௌரவிக்கின்றனர். இவ்விருது கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா என்பவரின் நினவாக வழங்கப்பட்டு வருகிறது. இவர் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 இல் அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் கொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றது.
உலக அமைதிக்காகவும், பேச்சுச் சுதந்திரத்திற்காகவும் மற்றும் பத்திரிக்கை தர்மத்தினூடாகவும் பல இன்னல்களைத் தாண்டிப் போராடிய பத்திரிகை எழுத்தாளர் ஒருவருக்கு 25,000 டொலர் பெறுமதியான பரிசு வழங்கப்படுகின்றது. சுமார் 14 நபர்களைக் கொண்ட குழுவால் குறிப்பிட்ட இத்தெரிவு நடைபெறுகிறது. உலகில் இத்தகைய நெருக்கடிகளின் மத்தியில் பணியாற்றும் ஊடகப் போராளிகளை நினைவுகூரும் நாளாக நினைவுகூரப்படுகிறது.
இலங்கையைப் பொறுத்தவரையில் ஊடக சுதந்திரத்திற்காக பலர் தமது உயிரை அர்ப்பணித்தார்கள். தராகி சிவராம், நிமலராஜன், ரவிவர்மன் எனப் பலர் மக்களின் செய்தி மற்றும் கருத்து அறியும் சுதந்திரத்திற்காக உயிர் பறிக்கப்பட்டார்கள். இராணுவ வலயங்களில் ஊடகவியலாளர்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்கள். போர்வலயங்களில் எறிகணைகளிலும் விமானக் குண்டு வீச்சிலும் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள்.
இலங்கையின் போர் மற்றும் இன முரண்பாட்டின் காரணமாக ஊடகவியலாளர்கள் ஆட்சியில் இருப்பவர்களுக்கும் இராணுவத்திற்கும் எதிரானவர்களாக நோக்கப்பட்டார்கள். பல சிங்கள ஊடகவியலாளர்களே மிகவும் கொடுமையாக அழிக்கப்பட்டார்கள் என்கிறபோது தமிழ் ஊடகவியலாளர்களின் நிலமை எப்படி மோசமானதாக இருந்திருக்கும் என்பதை எவராலும் உணர இயலும்.
நடுநிலை நின்று செயற்பட்ட பல ஊடகவியலாளர்கள் விடுதலைப் புலிகள் என்ற முத்திரை குத்தப்பட்டு பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளானார்கள். ஆட்கடத்தல் செய்யப்பட்டு சில ஊடகவியலாளர்கள் மீண்டுவந்தார்கள். சிலர் மீண்டு வராது போனார்கள். ஊடகங்களை இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கினார்கள். இரும்புக் கரத்தின் பிடியிலும் மரணப்பொறியின் அகத்திலுமாக இலங்கையில் ஊடகங்கள் இயங்கின.
இலங்கையின் ஊடகவியலாளர்களான நடராஜா குருபரன் கடத்தல், வித்தியாதரன் கடத்தல் என்பன அப்போதைய இலங்கை அரசின் இராணுவ நிகழ்ச்சி சார்ந்த நடவடிக்கைகளாக அமைந்தன. போர் மற்றும் இன நெருக்கடி சார்ந்து நடுவுநிலை கருதி இயங்கிய ஊடகவியலாளர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு நல்கினார்கள் என்ற பெயரில் சட்டவிரோதமாக கடத்தப்பட்டும் கைது செய்யப்பட்டும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார். இதற்கு மேற்குறித்த கடத்தல்களும் கைதுகளும் உதாரணங்களாகும். அத்துடன் சிவராம் போன்ற ஊடகவியலாளர்களின் படுகொலைகள் தமிழ் ஊடகங்களை மாத்திரமன்றி தமிழ் மக்களை மாத்திமன்றி சிங்கள ஊடகங்களையும் சிங்கள ஊடகவியலாளர்களையும் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியவையாகும்.
தராகி, லசந்த விக்கிரமசிங்க, மற்றும் பிரகீத் எக்னலியகொட ஆகியோருக்கு நடைபெற்ற சம்பவங்கள் வெறும் ஊடகக் கொலைகள் அல்ல. அவை மனித குலத்திற்கு மாறான மனித உரிமை மீறல்கள். மனித மனங்களை மிகவும் அஞ்சச் செய்பவை. மனித நாகரிகத்தை கூசச் செய்பவை. தலைகுனிய வைப்பவை. இத்தகைய ஊடகக் கொலைகளைப் புரிந்தவர்கள் இன்றும் மிகவும் உல்லாசமாக வலம் வருகின்றனர். அவர்கள் தண்டிக்கப்படுதல் இலங்கையில் ஏற்பட்ட ஊடக சுதந்திரத்தை மெய்யாக நிலைப்படுத்துவதற்கு அவசியமானது.
இத்தகைய கறைபடிந்த சம்பங்கள் என்பது, இலங்கையில் எவ்வகையான ஊடக சுதந்திரம் நிலவுகிறது? உலகில் எத்தகைய ஊடக சுதந்திரம் நிலவக்கூடாது என்பதற்கு இலங்கையின் ஊடக சுதந்திர வரலாறு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. மனித உரிமைகளுக்கு மாறாகவும் ஜனநாயகத்திற்கு மாறாகவும் இலங்கையில் நிலவிய ஊடக சுதந்திர மறுப்பு என்பது மனித குலத்திற்கு விரோதமானது. இன்னமும் இலங்கையில் ஆட்சி மாறியபோதும் ஊடக சுதந்திரத்தின் தடைத் திரைகள் முழுமையாக விலகவில்லை.
இப்போதும் வடகிழக்கில் தமிழ் மக்கள் சார்ந்த செய்திகளை வெளியிடுவதில் தமிழ் ஊடகங்களும் தமிழ் ஊடகவியலாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். மக்கள் எதை விரும்புகிறார்கள்? மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை வெளிக்கொணர்வதே சரியான ஊடக சுதந்திரம். அரசும் அதிகாரமும் விரும்பாத, ஏற்காத விடயங்களை மக்கள் விரும்பலாம். அதனை குறித்து இன்னும் பேசுவதையும் உரையாடுவதையும் மக்கள் விரும்பும்போது அதற்கு ஊடகங்கள் எந்த தடையையும் விதிக்க இயலாது.
இலங்கையில் கருத்து சுதந்திரத்திற்காக, ஊடக சுதந்திரத்திற்காக அனைத்து சமூகங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்களும் தமது உயிரையும் வாழ்க்கையையும் அர்பணித்துள்ளனர். அவர்களின் எண்ணங்கள் முழுமையாக ஈடேறும் நாள் ஒன்று ஈழத்தில் புலப்படவேண்டும். அவர்களை அரசும் அது சார்ந்த ஊடக கொள்கையையும் உணர வேண்டும். எவ்வாறெனினும் கடந்த காலங்களில் நிலவிய ஊடக சுதந்திரம் சார் கொடிய நிலைகளிலிருந்து மீண்டு வருவது நம்பிக்கைக்குரியதுவே.
தமிழ் மக்களின் உரிமைக்காகவும் மனித உரிமைக்காகவும் ஊடகச் செயல் புரிந்த லசந்த விக்கிரமசிங்கவினதும் பிரகீத் எக்னலியகொடவினதும் மரணங்கள் தொடர்பிலும் இப்போது ஆட்சி புரியும் அரசாங்கம் மெய்யான அக்கறையை செலுத்தினால் ஊடக சுதந்திரத்திற்கு அப்பால் தமிழ் இனம்மீது கொண்ட மனித உரிமை மற்றும் ஒடுக்கப்பட்ட இனம் குறித்த கரிசனையை புரிந்துகொள்ள இயலும். ஊடகத்துறையின் உன்னதத்தையும் புரிந்துகொள்ள இயலும்.