இரு பிள்ளைகளின் தாயை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு விளக்கமறியல்.

249
இரு பிள்ளைகளின் தாயை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு விளக்கமறியல்:

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா பிரதேசத்தில் பெண்ணொருவரை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், கடந்த திங்கட்கிழமை இரவு கைதான, காவற்துறை புலனாய்வு உத்தியோகஸ்தர்கள் இருவரையும் எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பெண்ணை முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றி கர்பலா பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரும் காத்தான்குடி காவற்துறையினரால், நேற்று மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சந்தேகநபர்களில் ஒருவர் மட்டக்களப்பு காவற்துறை பிரிவிலும் மற்றவர் தெஹிவளை காவற்துறை  பிரிவிலும் புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளானதாக கருதப்படும் இரு பிள்ளைகளின் தாயான 38 வயதுடைய பெண், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவற்துறையினர்; மேற்கொண்டுள்ளனர்.

SHARE