அரசாங்கம் விரைவில் விடுதலைசெய்யவுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களில் கொழும்பில் இடம்பெற்ற அனைத்து முக்கிய தாக்குதல்களையும் திட்டமிட்டு நடத்திய இரு முக்கிய புலி உறுப்பினர்கள் உள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், இவர்களில் ஒருவரின் பெயர் மொறிஸ், விடுதலைப்புலிகளின் கொழும்பு திட்டத்தின் சூத்திரதாரி இவரே, முன்ளாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா மீதான தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி இவரே, மற்றைய நபர் ஜின் என்ற பெயரினால் இனம் காணப்படுபவர்.
சரத்பொன்சேகா மீது தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தவர் மொறிசே. விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களிற்கு பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் என அழுத்தம் கொடுப்பவர்களிற்கு அவர்கள் என்ன சூழ்நிலையில் கைதுசெய்யப்பட்டார்கள் என தெரியாது.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் உட்பட பலர் விடுதலைசெய்யப்பட்டனர் இவ்வாறு விடுவிக்கப்படாமலிருந்தவர்கள் தேசியபாதுகாப்பிற்கு கடும் ஆபத்தை ஏற்படுத்த கூடியவர்களாவர்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் விடுதலைப்புலிகளின் புலனாய்வு பொறுப்பாளர் பொட்டம்மானுடன் தொடர்பிலிருந்தனர். சில விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் மத்தியில் மேற்கொண்ட ஆய்வின் போது அவர்கள் இன்னமும் தங்கள் கொள்கையில் உறுதியாகவுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் அவர்களால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் மீது செல்வாக்கை செலுத்தமுடியும். புலனாய்வு பிரிவினர் இவர்களை கைதுசெய்வதற்கு மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.