ஒடிசாவில் இறந்த மனைவியின் உடலை தோளில் சுமந்து 10 கி.மீ. தூரம் நடந்து சென்றவரின் குடும்பத்திற்கு சுலப் இண்டர்நேஷனல் தொண்டு நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில், ஆம்புலன்ஸ் கிடைக்காமல் இறந்த தனது மனைவியை தோளில் ஒரு மனிதர் சுமந்து கொண்டு 10 கிலோ மீட்டர் தூரம் சாலையில் சென்ற சம்பவம் நாடும் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், ஆம்புலன்ஸ் கிடைக்காமலும், வாடகை வாகனத்தை ஏற்பாடு செய்ய வசதியில்லாமலும் இறந்த தனது மனைவின் உடலை தோளில் சுமந்து சென்ற தனா மஜி என்பவரின் குடும்பத்திற்கு சுலப் இண்டர்நேஷ்னல் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் நிதியுதவி வழங்க முன்வந்தார்.
இதையடுத்து, அந்த தொண்டு நிறுவனத்தை சேர்ந்த வினோத் சர்மா என்பவர், மெல்கார் கிராமத்தில் உள்ள தனா மஜியின் வீட்டிற்கு சென்று உடனடி செலவுக்கு ரூபாய் 10 ஆயிரம் மற்றும் ரூபாய் 5 லட்சம் வைப்பு நிதிக்கான பத்திரத்தையும் வழங்கினார்.
இதுதவிர, தனா மஜியின் மகள்களின் கல்வி செலவுக்காக மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய் வழங்கவும் சுலாப் நிறுவனம் முன்வந்துள்ளது. வங்கி கணக்கில் தனா மஜியின் பெயரில் செலுத்தப்பட்ட 5 லட்சம் ரூபாய், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு வட்டியுடன் சுமார் 7 லட்சத்து 33 ஆயிரம் ஆக முதிர்வு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தனா மஜியின் அவலநிலை தொடர்பான தகவல் வெளியான பின்னர், அவர் வசிக்கும் கலஹந்தி மாவட்ட நிர்வாகம் இதுவரை, ஒரு மூட்டை அரிசியும், 30 ஆயிரம் ரூபாயும் வழங்கிய நிலையில், தனியார் தொண்டு நிறுவனம் 5 லட்சம் ரூபாய் வழங்கியதுடன் இரு குழந்தைகளின் கல்வி செலவையும் ஏற்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.