`இரும்புத்திரை’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக விஷால் உள்ளிட்ட படக்குழு தென்காசி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
`துப்பறிவாளன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஷால் நடிப்பில் பரபரப்பாக உருவாகி வரும் படம் இரும்புத்திரை. பி.எஸ்.மித்ரன் இயக்கும் இதில் சமந்தா, அர்ஜுன் போன்றோர் நடித்து வருகின்றனர். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் தென்காசி செல்லவுள்ளனர். இதை விஷாலின் வி எஃப் எஃப் நிறுவனம் தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உறுதிப்படுத்தியுள்ளது.
தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் தயாரித்து வரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ரோபோ சங்கர், டெல்லி கணேஷ் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இதன் ஆடியோவை டிசம்பர் 27ஆம் தேதியும், படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் (அபிமன்யுடு) அடுத்த ஆண்டு (2018) பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.