இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா அணி

264

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த அரை இறுதியின் 2வது சுற்றில், மும்பை சிட்டி எப்சி அணியுடன் 0-0 என்ற கணக்கில் டிரா செய்த அத்லெடிகோ டி கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

கொல்கத்தாவில் நடந்த முதல் கட்ட ஆட்டத்தில் அந்த அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்றிருந்ததால் 1 கோல் வித்தியாசத்தில் இறுதி வாய்ப்பை வசப்படுத்தியது.

இப்போட்டியை சமநிலையில் முடித்தாலே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நோக்குடன் களமிறங்கியது.

ஆனால் 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் மும்பை வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினார்கள்.

போட்டியில் 6வது நிமிடத்தில் மும்பை வீரர் சுனில் சேத்ரி, தனியாக முன்னேறினார். கோல் காப்பாளர் மட்டுமே நின்ற நிலையில் அவர் அடித்த ஷொட்டை கொல்கத்தா கோல் காப்பாளர் மஜூம்தார் அபாரமாக தடுத்து நிறுத்தினார்.

மும்பை அணியின் பக்கமே அதிகமான நேரம் (56 சதவீதம்) பந்து, இருந்தாலும் எந்த ஒரு கோலையும் பெற்றுக்கொள்ளவில்லை.

43வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ராபெர்ட் 2வது முறையாக மஞ்சள் அட்டை பெற்று, அது சிவப்பு அட்டைக்கு சமம் என்பதால் வெளியேற்றப்பட்டார்.

இதனால் எஞ்சிய நேரம் 10 வீரர்களுடன் விளையாடிய கொல்கத்தா அணி அதன் பிறகு தடுப்பாட்டத்தில் திறமையாக செயற்பட்டது.

போட்டி முடிவடைவதாக நடுவர் அறிவிப்பு விடுத்த தருணத்தில் இரு அணி வீரர்கள் இடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெலேன்கோசோ (கொல்கத்தா), தியாகோ குனா (மும்பை) ஆகியோர் சிவப்பு அட்டை எச்சரிக்கைக்குள்ளானார்கள்.

முடிவில் இந்த போட்டி கோல் இன்றி (0-0) சமநிலையில் முடிந்தது. இரண்டு அரைஇறுதி போட்டிகளின் அடிப்படையில் 3-2 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணி 2வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அத்தோடு மும்பை அணித்தலைவர் டியோகோ பார்லன் கடந்த போட்டியில் சிவப்பு அட்டை பெற்றமையால் இந்த போட்டியில் விளையாடவில்லை.

SHARE