இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? இன்று மேற்கிந்திய தீவுகளுடன் மோதல்

249
டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 2வது அரையிறுதியில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேற்றியது.

இந்நிலையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் உள்ளன.

இந்திய அணி:-

இந்திய அணியை பொறுத்தவரை கோஹ்லியை தான் மலைபோல் நம்பியுள்ளது. இந்திய அணி அரையிறுதிக்கு வந்ததற்கே கோஹ்லி தான் முக்கிய காரணம்.

அவரைத் தவிர இந்திய அணியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை என்பது கவலையளிக்கும் விடயமாகும்.

அதேபோல் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா (4 ஆட்டத்தில் 45 ஓட்டங்கள்), ஷிகர் தவான் (43 ஓட்டங்கள்) ஆகியோரின் துடுப்பாட்டம் தொடர்ந்து சொதப்பலாக இருக்கிறது.

முக்கியமான இந்த ஆட்டத்திலாவது இருவரும் பொறுப்பை உணர்ந்து, தேவைக்கு ஏற்ப ஆட வேண்டும். இதே நெருக்கடியில் சுரேஷ் ரெய்னாவும் (4 ஆட்டத்தில் 41 ஓட்டங்கள்) தவிக்கிறார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது சகலதுறை வீரரான யுவராஜ்சிங் இடது கணுக்காலில் காயமடைந்தார். இதனால் அவர் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக மனிஷ் பாண்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அனுபவ வீரரான யுவராஜ் சிங்கின் வெளியேற்றம் அணிக்கு பெரிய இழப்பாகும்.

மேற்கிந்திய தீவுகள் அணி:-

கடந்த 2012ம் ஆண்டு சம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி இந்த தொடரில் பலம் வாய்ந்த அணியாக உள்ளது. சூப்பர்-10 சுற்றில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளை பதம் பார்த்தது.

ஆப்கான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தாலும் அந்த அணி நம்பிக்கையுடனே இருக்கிறது.

மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிரடி வீரர்களுக்கு கொஞ்சம் கூட பஞ்சம் கிடையாது. ‘சிக்சர் மன்னன்’ கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ், டேரன் சேமி, வெய்ன் பிராவோ, ஆந்த்ரே ரஸ்செல் அதிரடியில் வெளுத்து கட்டக்கூடியவர்கள்.

இந்தியாவுக்கு எதிராக நான் என்ன செய்யப் போகிறேன் என்று பாருங்கள் என்று கெய்லும் சவால் விடுத்துள்ளார். அவர் சற்று நேரம் நிலைத்து நின்று விட்டாலும் ருத்ரதாண்டவமாடி விடுவார்.

இங்கிலாந்துக்கு எதிராக இதே மைதானத்தில் கெய்ல் 11 சிக்சருடன் 100 ஓட்டங்கள் குவித்து தள்ளியது நினைவிருக்கலாம். எனவே அவர் இந்திய அணிக்கு பெரிய சிக்கலாக இருப்பார்.

ஆடுகளம்:-

மும்பை வான்கடே மைதானம் கண்டிப்பாக துடுப்பாட்ட வீரர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த உலகக்கிண்ணத்தில் இங்கு நடந்த ஆட்டங்களில் (230-8, 229-4, 209-5, 183-4, 182-6, 172 ஓட்டங்கள்) துடுப்பாட்ட வீரர்கள், பந்து வீச்சாளர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள். அதே மாதிரியான எதிர்பார்ப்பே இப்போதும் நிலவுகிறது.

இரு அணிகளும் ஏறக்குறைய சம பலத்துடன் இருப்பதால் களத்தில் எந்த அணி நெருக்கடியை திறம்பட கையாள்கிறதோ அவர்களின் கையே ஓங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

SHARE