இறுதிப் போட்டியில் யார்? நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

234
உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.இந்த ஆட்டம் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு (புதன்கிழமை) அரங்கேறுகிறது.

நியூசிலாந்து அணி:-

நியூசிலாந்து அணி நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி என்ற பெருமையை பெற்று வருகிறது. லீக் சுற்றில் இந்தியா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு வந்திருக்கிறது.

அந்த அணியில் சுழற்பந்து வீச்சாளர்களே பக்கபலமாக இருக்கின்றனர். அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டும் இதுவரை 20 விக்கெட்டுகளை சாய்த்து இருக்கிறார்கள்.

இதுவரை நான்கு வெவ்வேறு விதமான ஆடுகளங்களில் ஆடிய போதிலும் நியூசிலாந்து பிரமாதமாக விளையாடி இருக்கிறது. அந்த அணி பந்துவீச்சாளர்கள் மற்ற அணியை விட சிக்கனத்திலும் முன்னணியில் இருக்கிறார்கள்.

சுழற்பந்து வீச்சாளர்கள் சான்ட்னெர் (9 விக்கெட்), சோதி (8 விக்கெட்) ஆகியோரைத் தான் அந்த அணி அதிகமாக சார்ந்து இருக்கிறது.

துடுப்பாட்டத்தில் மார்ட்டின் குப்தில் மட்டுமே அரைசதம் அடித்திருக்கிறார். இருப்பினும் முதல்முறையாக இறுதி சுற்றை அடையும் வேட்கையுடன் மற்ற வீரர்களும் வரிந்து கட்டி நிற்பார்கள்.

இங்கிலாந்து அணி:-

இங்கிலாந்து அணிக்கு பலமே துடுப்பாட்டம் தான். இமாலய ஓட்டங்களையும் அசால்டாக எட்டிப் பிடித்து வியக்க வைக்கிறது.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக்கில் 230 ஓட்டங்கள் இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து உலக சாதனை படைத்தது மலைப்பான விடயமாகும்.

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் (168 ஓட்டங்கள்), ஜோஸ் பட்லர் (123 ஓட்டங்கள்), ஜாசன் ராய் (105 ஓட்டங்கள்), அணித்தலைவர் மோர்கன் உள்ளிட்ட அபாயகரமான வீரர்கள் உள்ளனர்.

ஏற்கனவே 2010ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றிருந்த இங்கிலாந்து, 2வது முறையாக இறுதிப்போட்டியை எட்டும் முனைப்பில் உள்ளது.

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா ஆடுகளம் சுழல்பந்துக்கு சாதகமான ஆடுகளமாக இருப்பதால் சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

SHARE