ஆனாலும் அரசாங்கமானது இந்த விடயத்தில் மாற்று நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகவே தெரிகின்றது. இதனால் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றங்கள் தொடர்பான விசாரணை தொடர்பில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை உருவாகி வருகின்றது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த யுத்தத்தின்போதும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். வடக்கு, கிழக்கில் 90 ஆயிரம் பேர் விதவைகளாக்கப்பட்டனர். 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் அநாதரவாகினர். இவ்வாறு பெரும் இழப்புக்களை ஏற்படுத்திய யுத்தத்தின்போது மனித உரிமை மீறல்களும் யுத்தக்குற்றங்களும் இடம்பெற்றன என்பதை சகல தரப்பினருமே ஏற்றுக்கொள்கின்றனர்.
இந்த நிலையில்தான் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் முதலாவது பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று இந்தப் பிரேரணை மூலம் வலியுறுத்தப்பட்டது. 2013 ஆம் ஆண்டு 2014 ஆம் ஆண்டு என தொடர்ச்சியாக இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை இடம்பெற்றது.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் புதிய ஆட்சிக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. இதனையடுத்து அந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் உள்ளக விசாரணையினை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கியிருந்தது. சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கி இந்த உள்ளக விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியதுடன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் இணக்கம் தெரிவித்திருந்தது.
இவ்வாறு சர்வதேச நீதிபதிகளின் ஒத்துழைப்புடன் உள்ளக விசாரணையினை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் இணங்கிய போதிலும் அதற்கான நடவடிக்கைகள் இன்னமும் எடுக்கப்படவில்லை. தற்போது உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளபோதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான விடயத்தில் காலதாமதம் காண்பிக்கப்பட்டு வருகின்றது.
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் சர்வதேச நீதிபதிகளுடனான உள்ளக விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் இணங்கிய போதிலும் இத்தகைய சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைக்கு ஒருபோதும் இடமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அமைச்சர்களும் அடிக்கடி கூறிவருகின்றனர். அரசாங்கத்தின் தலைவராகிய ஜனாதிபதியே சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு ஒருபோதும் சாத்தியமில்லையென்று தெரிவித்திருக்கும் நிலையில் விசாரணையின் போக்கு எவ்வாறு அமையும் என்ற கேள்விக்குறியே தற்போது எழுந்திருக்கின்றது.
கடந்த ஜூன்மாதம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரின் போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இலங்கை நிலைவரம் தொடர்பில் கூட்டமொன்றை நடத்தியிருந்தார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பினர் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புகளுடனான விசாரணை தொடர்பில் கேள்விகளை எழுப்பினர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை என்று கூறி வருகின்ற நிலையில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று இவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்குப் பதிலளித்திருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அது ஜனாதிபதியின் தனிப்பட்ட கருத்து என்றும் இவ்விடயம் தொடர்பில் இன்னமும் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லையென்றும் கூறியிருந்தார்.
இவ்வாறு சர்வதேச தலையீட்டுடனான நீதியான விசாரணை தொடர்பில் குழப்பமான நிலையே தற்போதும் காணப்பட்டு வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில் பிரித்தானிய நாட்டின் பாலியல் வன்முறைகள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பரனஸ் அனவி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் நடைமுறை விடயம் தொடர்பில் ஆராயும் வகையிலேயே அவரது இந்த விஜயம் அமைந்திருக்கின்றது.
இலங்கை வந்துள்ள இவர் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையிலான மாகாண அமைச்சர்கள் குழுவினரை நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேசியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினரையும் நேற்று இவர் சந்தித்துப் பேசியுள்ளார்.
பிரித்தானிய அமைச்சருடனான சந்திப்பின்போது சர்வதேச தலையீட்டுடனான விசாரணையின் அவசியம் குறித்து வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் விளக்கி கூறியிருக்கின்றார். இலங்கை அரசாங்கம் இன்றுவரைக்கும் போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நாடுகளின் தலையீட்டை அங்கீகரிக்கவில்லை. அத்துடன் அத்தகைய சர்வதேச நாடுகளின் தலையீட்டை அவர்கள் விரும்பவில்லை. இதனாலேயே நாங்கள் கடந்த வருடம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு இந்த விடயம் தொடர்பில் தெரிவித்திருந்தோம். போர்க்குற்றங்களுக்கு தண்டனை வழங்கக் கூடிய சட்டம் உலகில் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளபோதும்இ இலங்கை அரசாங்கம் அதனை உருவாக்குவதற்கு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முதலமைச்சர் பிரித்தானிய அமைச்சரிடம் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
சர்வதேச நாடுகளின் தலையீட்டுடன் போர்க்குற்றவிசாரணை நடத்தப்படாவிட்டால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய சர்வதேச விசாரணைகளை அரசாங்கம் விரும்பவில்லை அதனை அங்கீகரிக்கவுமில்லை. எனவே சர்வதேச தலையீடு இல்லையேல் எமக்கு நீதியும் கிடைக்கப் போவதில்லை என்றும் முதலமைச்சர் இந்த சந்திப்பில் எடுத்துக்கூறியுள்ளார்.
இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினருடனான சந்திப்பின் போதும் நீதியான விசாரணை நடத்துவதற்கு பிரித்தானியாவின் பங்களிப்பு முக்கியமானது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சர்வதேச பங்களிப்புடனான விசாரணையை தமிழ் தரப்பினர் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற போதிலும் அந்த விடயத்தில் அரசாங்கமானது அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் சர்வதேச விசாரணையின் அவசியம் பல தடவைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. தற்போது இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதையடுத்து சர்வதேச நீதிபதிகளின் ஒத்துழைப்புடனான சர்வதேச விசாரணைக்கு சர்வதேச நாடுகள் சம்மதம் தெரிவித்திருந்தன. ஆனால் இந்த விசாரணைப் பொறிமுறை அமைக்கப்படுமென்று உறுதியளித்த அரசாங்கமானது தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறிவருவது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு ஏமாற்றுச் செயற்பாடாகவே அமைந்திருக்கின்றது.
தற்போதைய நிலையில் சர்வதேச நீதிபதிகளுடனான உள்ளக விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டுமானால் அதற்கு சர்வதேச நாடுகளின் அழுத்தம் என்பது முக்கியமானதாகும். எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரின் போது இலங்கை அரசாங்கமானது விசாரணைப் பொறிமுறை தொடர்பில் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. எனவே அதற்கு முன்னர் விசாரணைப் பொறிமுறையின் நம்பகத் தன்மையை புலப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாக உள்ளது.
எனவே மனித உரிமை பேரவையில் இணங்கிக் கொண்டதற்கு இணங்க சர்வதேச ஒத்துழைப்புடன் விசாரணைப் பொறிமுறையினை முன்கொண்டு செல்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
இலங்கைப் படையினரால் இறுதி மூன்று மாதங்களில் நடத்தப்பட்ட பெரும் இனப்படுகொலையின் போது 53 ஆயிரத்து 215 தமிழ் மக்கள் கொல்லப்பட்டு விட்டனர்.
பிரிட்டிஷ் தமிழர் பேரவை நடத்திய ஆய்வுகளின் அடிப்படையிலும் திரட்டப்பட்ட நம்பகமான தகவல்களின் அடிப்படையிலும் அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரபூர்வ வெளியீடுகளின் அடிப்படையிலும் இந்த செய்தியை பேரவை வெளியிடுகின்றது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வன்னி மண்ணில் 3 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் வாழ்ந்ததை அதிபர் ராஜபக்சேவின் முந்தைய அறிக்கைகளும் அந்தப் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கைகளும் உறுதி செய்கின்றன.
ஆனால், தற்போது அகதி முகாம்களில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 785 மக்கள்தான் எஞ்சியுள்ளதாக ஐ.நா. சபை கூறுகின்றது. இந்த அடிப்படையில் பார்த்தால் எவ்வளவு பெரிய இனப்படுகொலை நடந்துள்ளது என்பதை எளிதில் அறிய முடியும்.
அரசின் வதை முகாம்களுக்கு வந்த அப்பாவி மக்களில் 13 ஆயிரத்து 130 பேர் காணாமல் போயுள்ளனர். இதை ஐ.நா. சபையும் உறுதி செய்துள்ளது.
இந்த தகவல்களின் அடிப்படையில் 53 ஆயிரத்து 215 பேரை மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான ஒரு குறுகிய காலப்பகுதியில் நாங்கள் இழந்து நிற்கின்றோம்.
காணாமல் போய் விட்டதாக கூறப்படும் 13 ஆயிரத்து 130 அப்பாவி தமிழ் மக்களையும் மீட்க அரசும் உலக சமுதாயமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முள்வேலியின் பின்னால் அடைபட்டு நிற்கும் எங்களது மக்களுக்கு தேவையான சகலவற்றையும் பொறுப்பேற்பது தமிழர் அனைவரின் தலையாய கடமையாகும்.