உத்தரப்பிரதேச மாநில அரசு சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை மூடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட பிறகு, இறைச்சி வியாபாரிகளும், இறைச்சி விற்பனை செய்பவர்களுக்கு பணியும் இல்லை, பணமும் இல்லை. அதனால், அன்றாட வாழ்க்கைக்கே அல்லல்படும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகினறனர்.

52 வயதான ஷகீல் அஹமத் சொல்கிறார், “ஒரு வாரத்திற்கு முன்பே என் கடை மூடப்பட்டுவிட்டது. இப்போது என்னிடம் வேலையும் இல்லை, பணமும் இல்லை. என் சிறு குழந்தைகளுக்கும், வயதான பெற்றோருக்கும் எப்படி சாப்பாடு போடப்போகிறேன் என்று புரியவில்லை”.
ஷகீல் கேட்கிறார், “நான் ஒரு முஸ்லிம் என்பதுதான் காரணமா? இல்லை நான் மாமிச வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பது காரணமா?”
மாநிலத்தில் புதிய முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் யோகி ஆதித்யநாத் மீது அவர் கோபத்தில் இருக்கிறார். முதலமைச்சர் உண்மையிலேயே சட்டவிரோத இறைச்சிக் கூடங்களுக்கு எதிராக செயல்படவில்லை, அவர் இந்து மதத்தில் புனிதமானதாக கருதப்படும் மாட்டை கொல்வது மற்றும் மாட்டிறைச்சிக்கு எதிராக செயல்படுகிறார்”.
கடந்த மாதம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சி ஜெயித்த பிறகு, மாநில நிர்வாகம் பல இறைச்சி விற்பனைக் கடைகளை மூடிவிட்டது. ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி விற்பனைக் கடைகளையும் விட்டுவைக்கவில்லை”.

ஷகீல் கூறுகிறார்- “அவர்கள் மாட்டிறைச்சி விற்பனை கடைகளை மூடுவதற்கு காரணம் அது அவர்களின் தேர்தல் வாக்குறுதி”.
“ஆனால், ஆடு மற்றும் கோழி இறைச்சி விற்பனை செய்பவர்களை ஏன் தொல்லை செய்கிறார்கள்? என்னைப் போன்ற பல கசாப்புக் கடைக்காரர்கள், பல காலமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறோம். இதன் மூலம் தான் குடும்பத்தை நடத்துகிறோம். எங்களுக்கு வேறு எந்த வேலையும் தெரியாது”.
நகராட்சி அதிகாரிகள், கடைக்காரர்களின் உரிமத்தையும் புதுப்பிக்க மறுக்கிறார்கள். “இறைச்சிகளின் எச்சங்களை, குப்பைகளை போடுவதற்கு கழிவு அகற்றும் இயந்திரத்தை (Waste disposal unit) அமைக்கச் சொல்கிறார்கள். ஆனால் அதற்கான பணம் என்னிடம் இல்லை”.
அஹமதின் குடும்பத்தில் மொத்தம் 10 பேர் இருக்கின்றனர். நகரின் நெரிசலான பகுதியில் வசிக்கின்றனர். இங்கு இஸ்லாமிய குரைஷி சமூகத்தினர் அதிக அளவில் வசிக்கின்றனர்.
இந்தப் பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலோனோர் இறைச்சித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறுகிறார் அஹமதின் தாய் ஃபாத்திமா.
வந்தே மாதரம் பாடினால்தான் கவுன்சிலர் பதவி தப்புமா?
“இங்கு இருக்கும் ஆண்களுக்கு வேறு எந்தத் தொழிலும் தெரியாது. நாங்கள் ஏற்கனவே ஏழைகள். இனிமேல் நாங்கள் எப்படி சாப்பிடுவோம் என்று தெரியவில்லை. இந்த நிலைமைக்கு, அவர்கள் எங்களை கொன்றுவிடுவதே மேல்” என்று அவர் மனம் குமுறுகிறார்.
தனக்கு வயதாகிவிட்டது, நோய்களுக்காக மருந்து சாப்பிட வேண்டும் என்று சொல்லும் ஃபாத்திமா, “என்னிடம் இருந்த மருந்து தீர்ந்து போய்விட்டது. இதைப் பற்றி என் மகனிடம் இன்னமும் சொல்லவில்லை, அவன் ஏற்கனவே கஷ்டத்தில் இருக்கிறான், என்ன செய்ய?”
குழந்தைகளைப் பற்றித் தான் ஷகீலின் மனைவி ஹுசைனா பேகம் அதிகம் கவலைப்படுகிறார். “என் குழந்தைகள் நன்றாக இருக்கவேண்டும். அவர்களும் ஏழைகளாகவே இருக்கக்கூடாது. இறைச்சிக் கடை வைப்பது தவறு என்று சொன்னால், அரசே எங்களுக்கு வேறு ஏற்பாடுகள் செய்து கொடுக்கட்டும்”.
“எனது குழந்தைகளின் படிப்புக்காக கவலைப்படுவது தவறா என்ன?” என்று அவர் கேட்கிறார்.

ஷகீலின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் மொஹம்மத் ஷரீக்கின் கடையும் மூடப்பட்டுவிட்டது. “என்னிடம் இறைச்சிக் கடை நடத்துவதற்கான உரிமம் இருந்தாலும், வலது சாரி குழுக்கள் தாக்குதல் நடத்தலாம் என்று பயமாக இருக்கிறது”.
ஷரீக்கின் பயம் ஆதாரமற்றது இல்லை. ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, கடந்த இரண்டு வாரங்களாக பல இறைச்சிக் கடைகள் தாக்கப்பட்டுள்ளன.
“என்னுடைய வீடு ஏற்கெனவே சேதமடைந்து இருக்கிறது. பத்து பேரின் வயிற்றை நிரப்பவேண்டும். இறைச்சி விற்பனைதான் எங்களுடைய வருமானத்திற்கான ஒரே வழி. இதையும் மூடிவிட்டால், நாங்கள் என்ன செய்வோம்?.
அவருடைய சகோதரன் குரேஷி மற்றும் குடும்பத்தின் பிற உறுப்பினர்களும் எங்களுடன் பேச முன்வந்தார்கள். அனைவரும் அவர்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறார்கள்
குரேஷி சொல்கிறார், “முதலமைச்சர் எங்களுடைய பிரச்சனைகளை புரிந்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அவருடைய பெயரை யாரும் தவறாக பயன்படுத்த முதலமைச்சர் அனுமதிக்கக்கூடாது. ஆட்டிறைச்சியையும், மாட்டிறைச்சியையும் விற்பனை செய்வது சட்ட விரோதமானது இல்லை. ஆனாலும் எங்களுக்கு அவற்றை விற்கவும் பயமாக இருக்கிறது”.
இந்தப் பகுதியில் இருக்கும் அனைவரின் கதையும் ஏறக்குறையே இதுபோன்றே இருக்கிறது.

விலங்குகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தன்னுடைய சைக்கிள் ரிக்க்ஷாவில் கொண்டு செல்வதுதான் அப்துல் குரேஷியின் வேலை. அவர் கேட்கிறார், “இறைச்சிக்கு தடை செய்வது எந்த வகையில் சரி என்று தெரியவில்லை, இந்துக்களும் தானே மாமிசம் சாப்பிடுகிறார்கள்?”.
“இந்த சந்தைக்கு அதிகம் வருபவர்கள் இந்து வாடிக்கையாளர்கள் தான். இந்திய இராணுவத்தினரும் எங்கள் கடைக்கு வந்து இறைச்சிகளை வாங்கிச் செல்கின்றனர். சாப்பிடும் ஒரு உணவு பொருளுக்கு தடை போட்டு, ஒரு மதத்தை விட மற்றது உயர்வு என்றோ தாழ்வு என்றோ எப்படி நிரூபிக்கமுடியும்?” என்று அப்துல் குரேஷி கேட்கிறார்.
“இஸ்லாமியர்கள் மட்டுமே பாதிக்கப்படவில்லை”

அங்கிருக்கும் இஸ்லாமியத் தலைவர்களுள் ஒருவரான குல்ஜார் குரைஷி கூறுகிறார், “இது முஸ்லீம்களுக்கு மட்டுமான விவகாரம் இல்லை. ஆடுகளையும், கடாக்களையும் வளர்க்கும் தொழிலில் இந்துக்கள் தான் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர்”.
அவர் மேலும் கூறுகிறர், “எனக்கு பல இந்துக்களை தெரியும். அவர்கள், தங்கள் கிராமத்தில் இருந்து விலங்குகளை விற்பதற்காக இங்கு வருவார்கள். இப்போது அவர்களும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்”.
அவர்களில் ஒருவர் தான் சுனிலால். “என்னிடம் ஐந்து ஆடுகள் உள்ளன. அவற்றிற்கு தீவனம் வாங்கக்கூட என்னிடம் காசு இல்லை. இப்போது இவற்றை வாங்கவும் யாரும் தயாராக இல்லை”.
“என் மகன் விட்டுச் சென்ற பிரசாரத்தை தொடர்வேன்”: ஃபாரூக்கின் தந்தை
இறைச்சி வியாபாரத்தின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதால் இறைச்சிக்கூட முதலாளிகள் மட்டும் பாதிக்கப்படுவார்கள் என்று நினைத்தால், அது தவறு”.
கால்நடைகளை வளர்ப்பவர்கள், அவற்றை வாங்கி-விற்கும் இடைத்தரகர்கள், கசாப்பு கடைக்காரர்கள், விலங்குகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் ரிக்க்ஷாக்காரர்கள், தோல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் என பல தரப்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
எங்களுக்கு தேவையானது, வசதியான சாலைகளும், பள்ளிக்கூடங்களும் இல்லை, எங்கள் குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதற்காக எங்களை சம்பாதிக்க விடுங்கள். ஒரு குடிமகனாக அரசிடம் இந்த நம்பிக்கையை நான் வைக்கமுடியும் என்று அவர் கூறுகிறார்.