நாதப்பிரமமாய் விளங்கும் இறைவனை அடைவதற்கு சிறந்த சாதகம் இசையேயாகும். இசைக்கலை என்பது தமிழர்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்தது. இசைக்கு அடிமையாகாதவர்கள் எவருமே இருக்க முடியாது.
சிவபெருமானைக் கூட இசையினால் மயக்கினான் இராவணன் என்பது புராண வரலாறு. இறைவன்கூட மயங்குகின்ற இசைக்கு சாதாரண மனிதர்கள் விதிவிலக்காக அமைய முடியாது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
செல்வி சௌதாமினி மோகனசுந்தரம் அவர்களின் சங்கீத அரங்கேற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கலைகள் என்பன மொழி ரீதியாகவோ, மதங்கள் ரீதியாகவோ அல்லது வேறு குணாதிசயங்கள் ரீதியாகவோ ஒன்றுபட்டுள்ள மக்களின் பண்பாட்டை வெளிப்படுத்தக்கூடிய அடையாளச் சின்னங்கள்.
சிறுவயதில் எனக்கும் கர்நாடக சங்கீதம் கற்க வேண்டும் என்ற அவா மிகுந்திருந்தது. எனது தாயாரிடம் கர்நாடக சங்கீதம் படிக்க வேண்டும் என்ற என் விருப்பைத் தெரிவித்த போது அவர் முற்றிலும் மறுத்துவிட்டார்.
இது நடந்தது 1951ஆம் ஆண்டில். ஒருநாள் எனது தாயார் என்னை அவசரமாக அழைத்து வீதியால் செல்கின்ற ஒருவரைக் காட்டி “நீ சங்கீதத்தைக் கற்றுக் கொண்டு இவர் போலவா வரப் போகின்றாய்?
உனது உறவினர்கள் எல்லோரும் பெரிய சட்டத்தரணிகளாக விளங்குகின்ற போது நீ மட்டும் சங்கீதத்தைக் கற்றுவிட்டு தெருத் தெருவாகத் திரியப் போகின்றாயா?” என்று கேட்டார்.
அதாவது அந்தக் காலத்தில் சங்கீதத்திற்கு அவ்வளவுதான் கொழும்பில் மதிப்பு இருந்தது. ஆடற்கலைக்கும் மதிப்பு இருக்கவில்லை.
இப்பொழுது தான் முத்தமிழைப் போற்றுகின்றோம். 1956ஆம் ஆண்டு “சிங்களம் மட்டும்” வந்தபோதுதான் நாங்கள் எமது தமிழ்ப் பாரம்பரியத்தை வலியுறுத்த முன்வந்தோம் என்பது எனது கணிப்பு.
ஆனால் இன்று நிலைமைகள் மாறிவிட்டன. எங்கள் சிறுவயதில் கிரிகெட் விளையாடச் சென்றாலும் வீட்டில் ஏச்சுப்பேச்சுத்தான்.
“கிரிக்கெட்டா உனக்கு சோறு போடப் போகின்றது?” என்று கேட்பார்கள் வீட்டிலுள்ள பெரியோர்கள். இன்று முரளீதரன், சங்கக்கார, மஹேல ஜயவர்தன போன்றவர்கள் பலருக்குச் சோறு போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்று இந்தியத் தொலைக்காட்சிகள் மற்றும் மேடை நிகழ்வுகளில் இசை நிகழ்ச்சி அளிக்கின்ற இளஞ்சிறார்களின் வித்துவத்தன்மை கண்டு நாம் மூக்கின் மேல் விரலை வைக்கின்றோம்.
எமது குழந்தைகளும் இயல்பாகவே சங்கீத ஞானத்தைக் கொண்டிருப்பவர்கள் தான். அவர்களையும் சங்கீதக் கலை விற்பன்னர்களாக இந்தியக் கலைஞர்களுக்கு ஒப்பானவர்களாக விளங்கக்கூடிய விதத்தில் அவர்களுக்கு அதிக பயிற்சிகளை அளிக்க வேண்டியது பெற்றோர்களினதும் பயிற்றுவிக்கின்ற ஆசிரியப் பெருந்தகைகளினதும் தலையாய கடமையாகும்.
எமது குழந்தைகள் கலையில் நாட்டம் உள்ளவர்களாக மாறுகின்ற போது அவர்களின் உளப்பாங்கிலும் மிகப் பெரிய மாற்றங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.