இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா பல நிகழ்வுகளிலும் பங்கேற்பதற்காகஇன்று வடக்கு மாகாணத்துக்கு வருகை தரவுள்ளார்.

347

 

yksinha20151210

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா பல நிகழ்வுகளிலும் பங்கேற்பதற்காக இன்று வடக்கு மாகாணத்துக்கு வருகை தரவுள்ளார். இந்திய அரசின் உதவியில் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக அமைக்கப்பட்டவற்றைக கையளிப்பதற்காகவே அவர் இரு நாள் பயணமாக வடக்கு மாகாணத்துக்கு வருகிறார். இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வரும் அவர் பிற்பகல் 2.45 மணிக்கு கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் நிறுவப்பட்ட ‘மொழியியல் – கற்பித்தல் ஆய்வுகூட’த்தைத் திறந்து வைப்பார். இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.எஸ். இராதகிருஷ்ணன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொள்வர். நாளை வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இந்திய முனையத்தைதிறந்து வைப்பார். இதில் வட மாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிகக்கார, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரும் பங்கேற்பர். பின்னர் முற்பகல் 11.15 மணிக்கு யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பொறியியல், விவசாய பீடங்களை நிறுவும் நிகழ்வில் அவர் பங்கேற்பார். துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் உயர்ஸ்தானிகருடன் வட மாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிகக்காரவும் கலந்துகொள்வார். பிற்பகல் 2 மணிக்கு வவுனியா பொது வைத்தியசாலையில் இந்திய நிதி உதவியில் அமைக்கப்பட்ட 200 படுக்கைகளுடன் கூடிய விடுதியை உயர் ஸ்தானிகர் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிப்பார். வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன கலந்துகொள்வார்.

SHARE