இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: குப்தில் அபார ஆட்டம்…நியூசிலாந்து 409 ஓட்டங்கள் குவிப்பு!

300

டுனிடினில் இன்று தொடங்கிய இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 409 ஓட்டங்கள் குவித்துள்ளது.

முதலில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் லதம் 22 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான மார்டின் குப்திலும், வில்லியம்சனும் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர்.

குப்தில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 37–வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு 3–வது செஞ்சூரியாகும். மறுமுனையில் இருந்த வில்லியம்சன் 88 ஓட்டத்தில் ஆட்டம் இழந்தார். 5–வது வீரராக களம் இறங்கிய அணித்தலைவர் மெக்குல்லமின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 57 பந்தில் 75 ஓட்டங்கள் (13 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து வெளியேறினார்.

ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் இருந்த குப்தில் தொடர்ந்து சிறப்பாக விளையாடியதால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

156 ஓட்டங்கள் குவித்த குப்தில், மேத்யூஸ் பந்தில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் சவுத்தியும் (2) ஆட்டமிழந்தார். இதனால், இன்றைய ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 409 ஓட்டங்கள் குவித்தது.

இலங்கை தரப்பில் லக்மல், பிரதீப், சமீரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினர். நாளை இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

SHARE