இலங்கைக்கு வழங்கவுள்ள நிதி குறித்து விளக்கம் தேவை! தமிழர்களுக்கான நாடாளுமன்றக்குழு பிரித்தானிய அரசிடம் கோரிக்கை

328

இலங்கையின் இராணுவ மீளமைப்புக்காக வழங்கப்படப் போகும் நிதி குறித்து விளக்கம் ஒன்றை தமிழர்களுக்கான பிரித்தானிய நாடாளுமன்றத்தின் அனைத்துக்கட்சி குழு கோரியுள்ளது.

பிரித்தானிய பிரதி வெளியுறவு அமைச்சர் ஹூகோ ஸ்வைரியிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் இராணுவத்தை மீளமைப்பு செய்ய 6.6 மில்லியன் பவுண்ட்ஸ்களை வழங்க அண்மையில் பிரதமர் கமரொன், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் உறுதியளித்துள்ளார்.

எனினும் இந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்படவுள்ளது என்பது குறித்து விளக்கம் தேவை என்று நாடாளுமன்றக் குழு கோரியுள்ளது.

ஏற்கனவே போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவம் ஒன்றுக்கு வழங்கப்படப் போகும் நிதி குறித்தும் இதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஜெனீவா யோசனைகளை இன்னும் இலங்கை அரசாங்கம் உரிய வகையில் செயற்படுத்தவில்லை என்பது குறித்தும் தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்ற குழு ஹூகோ ஸ்வைரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜொன் ராய்ன், ஜோன் மான், ஸ்டீபன் பௌன்ட், ஸ்டீவ் ரீட், வெஸ் ஸ்ரீட்டிங் மற்றும் ஸ்டீபன் டிம்ஸ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

SHARE