இலங்கைப் பெண்ணுக்கு லண்டனில் நேர்ந்த அவலம்! உயிருக்கு போராடும் இளம் தாய்

219

பிரித்தானியாவில் ஒரு கடையில் இடம்பெற்ற மோசடியை தடுத்த சென்ற கர்ப்பிணி பெண் ஒருவர் வாகனத்தில் மோதி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

30 வயதுடைய இலங்கையை சேர்ந்த பெண் என நம்பப்படுகின்ற குறித்த பெண், தான் வேலை செய்யும் Leigh-on-Sea,Essex பகுதியில் உள்ள கடையில் இடம்பெற்ற மோசடியை தடுக்க முற்பட்ட போதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். அவர் மோசடியாளர் ஒருவரை துரத்தி பிடிக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் சாம்பல் நிற வோக்வேகன் கொல்ப் என்ற வாகனத்தில் மோதுண்டமையினால் முகம் மற்றும் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் 4 அல்லது 5 மாத கர்ப்பிணியாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து சம்பவம் கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என தாம் நம்புவதாக Essex பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய வாகன சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரின் வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளர்.

குறித்த பெண் 4 அல்லது 5 மாத கர்ப்பிணி பெண் என பெயர் குறிப்பிடப்படாத நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னரே அவர் இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் மிகவும் வருத்தமாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று குறித்த கடை மிகவும் பரபரப்பான நிலையில் இயங்கியுள்ளாகவும், அந்த பகுதியில் அதிகமான மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டதாகவும், சம்பவத்தை பலர் பார்த்துள்ளதாகவும், பொலிஸ் துப்பறியும் ஆய்வாளர் Stuart Truss தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாராவது சாட்சியளிக்க வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும், தகவல் தெரியும் என்றால் தங்களுக்கு அழைப்பேற்படுத்துமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE