அரச சார்பற்ற நிறுவனங்களின் போலி அறிக்கைகளினால் ஐக்கிய நாடுகள் அமைப்புப் பிரதிநிதிகள் இலங்கை விஜயம் செய்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கையில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு போலி அறிக்கைகளை அனுப்பி வைத்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு போலி அறிக்கைகள் அனுப்பி வைக்கப்படுவதனால் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதிகள் இலங்கைக்கு அதிகளவில் விஜயம் செய்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர்களை நன்கொடையாக பெற்றுக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு 20 அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் போலி அறிக்கைகளை அனுப்பி வைத்துள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு போலி அறிக்கைகளை ஜெனீவாவிற்கு எடுத்துச் செல்லும் அரச சார்பற்ற நிறுவன செயற்பாட்டாளர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றி வரும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர்.
இலங்கை தொடர்பில் போலியான அறிக்கை தயாரித்து சமர்ப்பிப்பது லாபகரமான ஓர் நடவடிக்கையாக மாறி வருவதாக சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுபான்மை உரிமைகள் குறித்த விசேட பிரதிநிதி ஈவா ஐசாக் கடந்த 10ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் முன்னணி மனித உரிமைச் செயற்பாட்டாளர்களில் ஒருவரான ருகி பெர்னாண்டோ அண்மையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.