இலங்கையின் ஐந்து பழமையான ஐந்து சிவன் கோவில்களில்திருக்கேதீஸ்வரம் கோவிலும் ஒன்று. இது மன்னாருக்கு அருகாமையில் இலங்கை தலைநிலப்பரப்பில்இருக்கிறது. இக்கோவில் போர்ச்சுகீசியர்களால் பதினாறாம் நூற்றாண்டில் அழிக்கப்பட்டு, இருபதாம்நூற்றாண்டில் அதே இடத்தில் மீண்டும் கட்டப்பட்டது. இப்பொழுது, இந்திய அரசின் நிதியுதவியுடனும், தமிழ்ச் சிற்பிகளின் கைவண்ணத்துடனும் மீண்டும் பெரிதாகக் கட்டப்பட்டுவருகிறது. கடந்த ஜனவரிமாதம், 2017ல் நான் நேரில் அங்குசென்று புதுப்பிக்கும் பணியைக் கண்டு வந்தேன்.
“மொகஞ்சதாரோ, ஹாரப்பாவில் நமக்குக் கிடைத்த வைளிப்பாடுகளின் கண்டுபிடிப்புகளில்மிகவும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், செம்புக்காலத்திற்கோ [bronze age], அதற்கும்முன்னதாகவோ வரலாறு உள்ளது சைவசமயம். எனவே, அதை உலகத்தின் மிகப் பழமையானவாழும் சமயம் என்றே எண்ணவைக்கிறது”
— ஸர் ஜான் மார்ஷல்
சிவபெருமானை ஒப்புயர்வற்றவரென்றும், முழுமையானவரென்றும் வழிபடுதல் மிகவும் பரவியுள்ள பழமையான சமயங்களில் தொன்மையானதாகும். அது படைப்பு துவங்கியதிலிருந்தே இருக்கிறது என்று மரபு பறைசாற்றுகிறது. இமயம் தோன்றி ஆன்மீக மரபின் சின்னமாவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னதாகவே — மிகப்பெரிய இந்திய-ஆப்பிரிக்கக் கண்டம் பிரிவதற்குமுன்னரே — இலங்கை அதன் ஒருபகுதியாக இருந்தபோதே அங்கு சிவவழிபாடு துவங்கிவிட்டது.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே சிவபெருமானை மகாதேவராக, ஆதிசைவத்தின் ஒரு பெரிய கடவுளாக வழிபட்டதாகவே — சர் ஜான் மார்ஷல் சிந்து சமவெளியிலும், ஜார்ஜ் ஃபெப்ரி மற்றவர்கள் மால்ட்டா, மடகாஸ்கர் மற்றும் கிரீட்டிலும் கண்ட புதைபொருள் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
மொகஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று முகமுள்ள கடவுள் முத்திரைகளும் — மும்மூர்த்திக் குறிக்கோள் — பிற்காலப் பிரம்மா, விஷ்ணு, சிவன் பதிப்புருவாக இருக்கக்கூடும். பொது ஆண்டுகளுக்கு மூவாயிரம் ஆண்டு முன்னதான மூன்றுமுக சிவபெருமானும் ஒருமுகக் கடவுளின் முந்தைய முத்திரைகளவு முக்கியமானதாகவே இருக்கலாம்.
சைவக் குருமாரான திருஞானசம்பந்தரும்[2], சுந்தரமூர்த்தி நாயனாரும்[3] திருக்கேதீஸ்வரத்திலுள்ள பெருமானைப் புகழ்ந்து பாடும்போது, பெரிய, சிறந்த துறைமுகமான — மகாவம்சத்தில் மாதிட்டைஎன்றழைக்கப்படும் — மாந்தோட்டத்தை எண்ணிலடங்காத மரக்கலங்களின் புகலிடம் என்றும், அங்கு மாடமாளிகைகள் நிறைந்திருந்ததாகவும், பூம்பொழில்கள், பழத்தோட்டங்கள், வயல்கல் சூழ்ந்திருந்ததென்றும் வர்ணித்திருக்கின்றனர்.
மாந்தோட்டத் துறைமுகம் பாலாவி ஆற்றுமுகத்தில் இருந்தது. மலையளவு அலைகள் எழுந்தும் விழுந்தும் ஆர்ப்பரித்தன. ஆற்றின் தென்கரையில் அலைவாய்க்குரடுகளும் [piers] கிடங்குகளும் அமைந்திருந்தன. இப்பொழுது அக்கிராமம் வங்காலை [வங்கக் கலங்கள் கலக்குமிடம்] என்றழைக்கப்படுகிறது. வடகரையில் திருக்கேதீஸ்வரம் கோவிலும், அரசுக்கட்டிடங்களும், மாளிகைகளும் இருந்தன. இது மாளிகைத்திடல் என்று இப்பொழுது அழைக்கபடுகிறது. பபமொடை [அர்ச்சகர்களுக்கான இடம்], கோவில் குளம் என்றும் கிராமங்கள் உள்ளன. திருக்கேதீஸ்வரம் கோவில் வங்காலையிலிருந்து நான்குமைல் தொலைவிலுள்ளது. இதிலிருந்து பாலாவி ஆற்றின் முகத்துவாரம் அந்நாளில் எவ்வளவு பெரிதாக இருந்ததென்றும், அதன் முக்கியத்துவத்தையும் உணரலாம்.
எகிப்து, மெசபடோமியா, பாலஸ்தீனம், கிரேக்க, ரோமானிய நாடுகளிலிருந்து அரபிக்கடல் வழியாக கடல்வழி வணிகம் அக்காலத்தில் நடந்துவந்தது. அந்நாட்டார் தென்மேற்குப் பருவமழைக்குப் பயந்தனர். அதன் சீற்றத்திலிருந்து மாந்தோட்டத் துறைமுகம் புகலிடமளித்தது. அதற்குக் காரணம் தெற்கிலுள்ள மன்னார் தீவும், ராமர் அணையும்தான். அக்காலத்தில் மன்னார் தீவுக்கும், இலங்கை நிலத்திற்கும் இடையுள்ள நீர்ப்பரப்பு இருபருவமழைகளால் ஏற்படும் கடல் நீரோட்டத்தால் மணல்தட்டாமல், கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக இருந்தது.
கப்பல்கள் செல்லுமளவுக்கு ஆழமான மன்னார் கடற்கால் எப்படி சதுப்புநிலமானது, மிகச்சிறந்த மாந்தோட்டத்துறைமுகம் மணல்மேடுற்றது, அலைமோதிய பாலாவியாறு எப்படி ஒரு சிறுவாய்க்காலானது, அதைச் சுற்றியிருந்த நிலப்பகுதி தரிசுநிலமானது என்ற கேள்விகள் எழத்தான் செய்யும்.
பாலாவி ஒரு வளமிக்க ஆறாக இருந்தபோது, மல்வத்து ஓயாவின் நீர்ப்பெருக்கும், மற்ற இயற்கையான நீரோட்டங்களும் அதில்தான் கலந்தன. காலப்போக்கில் மல்வத்து ஓயா தனது போக்கைத் தெற்குநோக்கி மதவாச்சிப் பக்கம் திருப்பியது. இது மல்வத்து ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தைப்பற்றி ஆய்வுசெய்த ஒரு ரஷ்யப் பேராசிரியரின் கருத்தும் ஆகும். மல்வத்து ஓயாவை ஜயன்ட்ஸ் டாங்கைவிட்டு [Giants Tank] மன்னாருக்குப் பலமைல்கள் தொலைவிலுள்ள அருவியாற்றுக்குத் திருப்பியது ஜீவநதியான பாலாவியாற்றை மழைகாலத்தில்மட்டும் நீர்ப்பெருக்குள்ள மணற்படுகையாக ஆக்கியது. அகலமான பாலாவியின் கழிமுகம் மணல்மேடாகுவது விரைவாக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், மன்னார் தீவுக்குச் செல்ல அமைக்கப்பட்ட சாலைப்பாலமும், ரயில்வே பாலமும் கடல் நீரோட்டத்தை முழுவதும் நிறுத்திவிட்டன. மாந்தோட்டத்திற்குப் பதிலாகத் தலைமன்னார் இந்தியாவுக்கு அருகாமையான துறைமுகமாக உருப்பெற்றது. பராக்கிரமபாகுவின் காலத்தில் துவங்கி, போர்ச்சுகீசியரின் வருகையும் மாந்தோட்டத் துறைமுகத்தின் சிறப்புகுன்றி, வடக்கிலிருக்கும் கேட்ஸ் துறைமுகம் சிறப்புப்பெற்றது.
மாந்தோட்டத்தின் பொற்காலத்தில் பதினொன்றாம் நூற்றாண்டுக்கு முன்னதான இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மட்டுமன்றி, தென்னிந்திய கடல்வணிகர்கள் தங்கள் சரக்குகளை மேற்கேயும், சீனாவுக்கு கொண்டுசெல்லும்போது இடைப்பட்டுத் தங்கிச் செல்லும் துறைமுகமாகவும் விளங்கியது.
அவ்வமயம் இந்தியாவில் இராமேஸ்வரம் கோவிலுக்கு நிகரான சிறப்புடன் திருக்கேதீஸ்வரம் கோவில் விளங்கியது. ஆனால் அது இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் செல்லும் படைகளின் வழியைவிட இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் படையெடுத்துவரும் இராணுவத்தின் வழியில் அதிகமாகவே இருந்தது. அதனால் திருக்கேதீஸ்வரம் உள்ளான அளவுக்கு அதன் தோழமைக்கோவிலான இராமேஸ்வரம் தாக்குதலுக்கு ஆளாகாமல் தப்பித்தது.
திருக்கேதீஸ்வரத்தின் செழிப்பு வன்னித் தமிழர்களின் ஏற்றத்தாழ்வின்போது அதிகமாகவும், இந்தியத் தீபகற்கத்தின் ஏற்றத்தாழ்வின்போது மறைமுகமாவும் ஏற்றத்தாழ்வடைந்தது.
சோழர்கள் பொலனருவையிலிருந்து இலங்கையில் ஆட்சிபுரிந்தபோது மாந்தோட்டமும், திருக்கேதீஸ்வரமும் தாற்காலிகமாக அவற்றின் புகழின் உச்சக்கட்டத்தை அடைந்தன. அது ராஜராஜேச்சுரம் என்றுகூட அழைக்கப்பட்டது. அரசியல்நிலை மாறியவுடன் அப்புகழ் உடனேயே மங்கிக் குன்றியது.
முதலாம் சுந்தரபாண்டியனின் காலத்தில் [பொ.ஆ. 1251-80] அரசச்சலுகைபெற்ற திருக்கேதீஸ்வரம் கோவில் பாண்டியச் சிற்பக்கலையின்படி புதுப்பித்துக் கட்டப்பட்டது[4]. அதற்குச் சான்றுகள் தற்பொழுது கோவிலருகிலுள்ள கற்களின்வாயிலாகவும் கிடைக்கின்றன.
சடையவர்மன் வீரபாண்டியனின் குடுமியாமலைக் கல்வெட்டுகள் அவன் இலங்கை மன்னனை வென்று திறைபெற்றதாகவும், கோணமலை[திரிகோணமலை]யில் பாண்டியரின் இரட்டைமீன் சின்னத்தைப் பொறித்ததாகவும் கூறுகின்றன. கடற்படையில் வலிமையுள்ள பாண்டியனான அவன் திருகோணமலைக்குக் கடல்வழியாகச் சென்றிருந்தாலொழிய திருக்கேதீஸ்வரமும் அப்பொழுது அரசனின் கவனத்தைப் பெற்றிருக்கலாம்.
போர்ச்சுகீசியர்கள் பொ.ஆ 1540ல் இலங்கையின் வடக்குக் கடற்கரைப்பக்கம் வந்தபோது திருக்கேதீஸ்வரம் ஒரு பெரிய இந்துசமய வழிபாட்டுத்தலமாகவே இருந்தது.[5]
எமர்சன் டெனந்ட் [Emerson Tennent] கொடுத்துள்ள விவரிப்பைக் காண்போம்:
“போர்ச்சுகீசியர் நெடுங்காலமாக யாழ்ப்பாணத்தை அடையவிரும்பினாலும், அது செழிப்பானதெற்கிலிருக்கும் அவர்களது குடியிருப்பின் பாதுகாப்புக்காக அல்ல; அவர்களதுகடல்வணிகத்திற்காகவே. அப்படியிருந்தும் 1617ல்தான் மலபார் அரசபரம்பரையைப் பதவிநீக்கம்செய்து, அதைத் தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தனர். அதுவரை அவர்களது அரசியலுக்கு மசியாதஅப்பகுதி, அப்பொழுது மதமாற்று நடவடிக்கைக்கு உற்சாகமளிக்கும் வாய்ப்பை அளித்தது.
“1544ல் அவர்களின் முதல் படையெடுக்கும் முயற்சி தக்காணத்தின் தென்கடற்கரைப் பகுதிகளிலுள்ளஇந்துக் கோவில்களைச் சூறையாடப் பொருத்தமாக அமைந்தது. [யாழ்ப்பாண]தீபகற்பத்தின் அரசரைஅழைத்து, போர்ச்சுகலுக்குத் திறைசெலுத்தும் நாடாக ஆகாவிட்டால் [போர்ச்சுகலின்] கொள்ளைக்காரக்கடற்படைத் தாக்குதலை எதிர்நோக்கவேண்டும் என்ற எச்சரிக்கை இடப்பட்டது. அரசர் முன்னதைத்தேர்ந்தெடுத்து ஆண்டுக்கு நாலாயிரம் டக்கெட்டுகள் திறைசெலுத்த ஒப்புக்கொண்டார். அந்தஆண்டிலேயே செயின்ட் ஃபிரான்சிஸ் சேவியரின் கட்டளைப்படி ரோமன் கத்தோலிக்கமதப்பிரசாரகர்களால் ஏராளமானவர் மன்னாரில் மதமாற்றம் செய்தனர். யாழ்ப்பாணப்பட்டினத்தின்அரசர் சமயமாற்றத்தை வேரறுக்கவேண்டி புதிதாக மதம்மாறிய அறுநூறுபேருக்கு மரணதண்டனைகொடுத்தார். ஆயினும், இந்தத் துன்மார்க்கம் அவரது அரண்மனையையே அடைந்தது. அவரதுமூத்தமகன் மதம் மாறினான். எனவே, அதன் விளைவாக, அவனுக்கும் மரணதண்டனைவிதிக்கப்பட்டது. அவரது இரண்டாம் மகன் தந்தையின் தாளாத சினத்திலிருந்து தப்பிக்க கோவாவுக்குஓடினான்.
“இந்தக் கடுமையான நடவடிக்கைளுக்கு எதிராக மெதுவாக, பாதுகாப்பாக, ஆனால் தீவிரமாகப்பழிவாங்குமாறு மூன்றாம் போப் ஜான் [போர்ச்சுகலின்] இந்திய வைஸ்ராயுக்கு உத்தரவிட்டார். உடனே, மன்னாரில் கிறித்தவர்களின்மீது அடக்குமுறை அடுத்தடுத்து நிகழ்வதாகவும், கோவாவுக்கு ஓடிவந்தஅண்ணனின் அரசுரிமையை யாழ்ப்பாண அரசர் பறித்துக்கொண்டதாகவும் உள்ள இரண்டுமுறையீடுகளின்படி நடவடிக்கையெடுக்கவேண்டி, இந்திய வைஸ்ராய் டான் கான்ஸ்டன்டீன் தெபிரகான்சா [Don Constantine de Braganza] யாழ்ப்பாணத்திற்கு எதிராக மற்றொரு கடற்படையை 1560ல்அனுப்பினார். தெ கோட்டோ [De Couto] தனது இந்திய வரலாற்றின் எழுபதாவது பத்தாண்டில் இந்தபுனிதப்போரைப்பற்றி பகட்டான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்:
“வைஸ்ராயுடன் கப்பலில் பயணித்த கொச்சி பிஷப் தரையிறங்கியவுடன் ஒரு வழிபாட்டிடத்தை நிறுவி, நகரின்மீது தாக்குதலைத் துவங்குவதற்காக படையெடுத்துவந்த இராணுவத்தின் முன்னிலையில்தொழுகைநடத்தி, போரில் விழுவோருக்கு முழுமையான சலுகைகளையும், சிலுவைக்காகஉயிர்துறப்போருக்கு முழுபாவமன்னிப்பும் வழங்கினார்.
“தாக்குதல் வெற்றியடைந்தாலும் முடிவு மோசமாக இருந்தது. பல பிரபுக்கள் எதிரிகளின் பீரங்கிகளால்கொல்லப்பட்டனர். நகரம் வீழ்ந்தது, அரண்மனை எரிக்கப்பட்டது. அரசரும், அவரைச் சேர்ந்தவரும் வெற்றிகொண்டோருடன் உடன்படிக்கை செய்துகொள்ளவைக்கப்பட்டனர். கண்டியிலிருந்தும், கோட்டாவிலிருந்தும் ஆறாம் புவனேகாவின் மருமகனும், தர்மபாலாவின் தந்தையுமான திரிபுல பந்தாவால் கொண்டுவரப்பட்ட பொக்கிஷத்தின் மறைவிடத்தைத் தெரிவிக்கவேன்டுமென்றும், அதற்கும் மேலாக, எண்பதாயிரம் குருசேடோ பணமும் தரவேண்டுமென்றும், மன்னார் தீவை போர்ச்சுகீசியருக்கு விட்டுத்தரவண்டுமென்பதும் என்பதே அந்த உடன்படிக்கை. உடனே மன்னார் தீவு ஆக்கிரமிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டது.
“சிங்கள அரசர்களுக்கு உதவியாக போர்ச்சுகீசியருக்கு எதிராகச் செயல்பட்டதற்காக யாழ்ப்பாணஅரசரைத் தண்டிக்கவேண்டி, 1591லும், 1604லும், கோவாவிலிருந்து புதிய படையெடுப்புகள்மேற்கொள்ளப்பப்பட்டன. ஆனால், ஒவ்வொரு தடவையும் பயமுறுத்தல் அபாயத்தைத் தடுக்கவலிமையற்றவர் தானாகச் சரணடைந்தனர். ஆயினும், ஏற்கனவே யாழ்ப்பாணப் பகுதியைப்போர்ச்சுகலின்கீழ் கொண்டுவரும் திட்டமிருந்தாலும், அதை நிறைவேற்றத் தகுந்த தருணத்திற்காகஅச்செயல் ஒத்திப்போடப்பட்டுவந்தது.
“1617ல் கான்ஸ்டன்டைன் தெ சா நொரனாவின் [Constantine de Saa Norana] தலைமையில் ஒரு படையாழ்ப்பாணத்தை முன்புசொல்லப்பட்ட ஒருமுகப்பட்ட காட்டுமிராண்டித்தனத்துடன் தாக்கிக்கைப்பற்றியது. அரசர் கைதுசெய்யப்பட்டு கோவாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டு கொல்லப்பட்டார். மலபார் இளவரசர்களில் கடைசியான அவரது மருமான் அவரது அரசுரிமையை விட்டுக்கொடுத்துவிட்டிஃபிரான்சிஸ்கன் கான்வென்ட்டில் சேர்ந்தார். அவரது சொத்துரிமை போர்ச்சுகலின் ஆட்சிப்பகுதியாகமுறைப்படி இணைக்கப்பட்டது.”
எமர்சன் டெனன்ட்டால் தனிப்பட்ட முறையில் குறிப்பிடப்படாதிருந்தாலும், இந்த வரலாற்றுச் சூறாவழிச் சுழல் நிகழ்ச்சிகளான போர்ச்சுகீசியரியன் காலத்தில் திருக்கேதீஸ்வரம் ஒரு முக்கியமான பங்கை வகித்தது.
தென்னகத்தின்[தக்காணம்] செல்வச்செழிப்புள்ள இந்துக்கோவில்களைச் சூறையாடிக் கொள்ளையடிப்பதைக் குறிக்கோளாகக்கொண்ட போர்ச்சுகீசியருக்கு இந்துமாக்கடலின் அக்கரையிலுள்ள கன்னியாகுமரி, திருச்செந்தூரைவிட, திருக்கேதீஸ்வரம் எளிதான இரையாகவே அமைந்ததால், அவர்கள் அதில் வெற்றிபெற்றனர். சேதுப்பாலம் மற்றும் இராமேஸ்வரம் கோவிலின் அறங்காவலரான இராமநாதபுரம் சேதுபதியின் வலிமையான பாதுகாப்பே அங்கு அவர்களின் தோல்விக்குக் காரணமாக இருக்கலாம்.
மன்னார்த்தீவு மக்களின் சமயமாற்றம் துவங்குவதற்குமுன்னரே திருக்கேதீஸ்வரம் கோவிலின் சூறையாடல் நிகழ்ந்துமுடிந்தது. அதைப் பெயர்த்தெடுக்கப்பட்ட கற்களே மன்னார் கோட்டையைக் கட்டப் பின்னர் உறுதுணையாகவிருந்தன. இதைப் பழிவாங்க யாழ்ப்பாண மன்னர் எடுத்துக்கொண்ட வலுக்குறைந்த முயற்சிகளே படுகொலையாக பூதக்கண்ணாடிகொண்டு காட்டப்பட்டன.
இதில் நாம் கருத்தில்கொள்ளவேண்டியது என்னவென்றால், திருக்கேதீஸ்வரத்தின் வீழ்ச்சியுடன் இலங்கையின் தமிழ் அரசுக்குச் சாவுமணி அடிக்கப்பட்டு, தமிழ்மக்கள் தங்கள் சுதந்திரத்தை இழந்தனர்.
[திரிகோணமலையில் குடிகொண்டுள்ள] கோணேஸ்வரரின் பக்தனான இலங்கேஸ்வரன் இராவணனும் அவனது மாமனார் மயனும் திருக்கேதீஸ்வரத்தின் தொன்மையான கோவிலைக் கட்டினார்கள் என்பது மரபு. இலங்கையிலிருந்து அயோத்திக்குத் திரும்பிச்செல்லும் வழியில் இராமேஸ்வரத்தில் சிவனுக்குக் கோவில்கட்டி வழிபட்ட இராமர், திருக்கேதீஸ்வரத்திலும் சிவபெருமானை வழிபட்டதாகப் புகழப்படுகிறது.
மகாபாரதத்தின் நாயகனும், கிருஷ்ணனின் உறவினனும், சீடனுமான அருச்சுனன் தெற்கே தீர்த்தயாத்திரை மேற்கொண்டபோது திருக்கேதீஸ்வரத்திற்கும் வருகைதந்தான் என்பது ஐதிகம். இந்த யாத்திரையின்போதுதான் அவன் மாந்தோட்டத்தையடுத்த பகுதியை ஆண்டுவந்த நாக இளவரசியான அல்லி அரசாணியைச் சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது. மன்னார்த்தீவை அடுத்து இலங்கை நிலப்பரப்பில் காணப்படும் இடிபாடுகள் அல்லியின் கோட்டையென்று குறிப்பிடப்படுகின்றன.
பொது ஆண்டுகளுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பவுத்த இலக்கியங்கள் இவ்விடத்தை மஹாதித்த என்கின்றன. மரபையொட்டிச் சில கற்றறிவாளர் குறிப்பிடுவதைப்போல இராமர், அகத்தியர், அருச்சுனன் ஆகியோர் மாந்தோட்டத் துறைமுகத்தின்மூலம் கடலைக் கடந்து இலங்கைக்கு வந்தார்களென்றால், இளவரசன் விஜயனும்[6] அதேவழியில்தான் வந்திருக்கவேண்டும். அப்படியிருந்தால், விஜயனோடு வந்த உபதீசன் என்ற அந்தணப் பூசாரி வழிபாடு நடத்திய அங்கிருந்த சிவன்கோவில் திருக்கேதீஸ்வரத்தைத்தவிர வேறெதுவாகவும் இருக்கமுடியாது.
யாழ்ப்பாணத்து டச்சு கவர்னருக்காக 1736ல் யாழ்ப்பாணக் கவிஞர் மயில்வாகனப் புலவரால் தயாரான [எழுதப்பட்ட] வரலாற்று மரபுகளின் பதிவான யாழ்ப்பாண வைபவ மாலை கூறுகிறது:
“பொது ஆண்டுக்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கைக் கடற்கரையிலிறங்கிய இளவரசன்விஜயன், பல்லாண்டுகளாகச் சிதிலமடைந்து கிடந்த திருக்கேதீஸ்வரம் கோவிலைக் கட்டஏற்பாடுசெய்தான்.”
ஒன்பது-பத்தாம் நூற்றாண்டுகளில் இலங்கையில் மக்கள் குடியிருந்த பகுதிகளில் தமிழர்களின் மேலாண்மையை விவரிக்கும் ராஜ ரத்தினாகர என்ற சிங்கள நூல், சைவசமய முதல்வர்களின் காலத்திய மாந்தோட்டச் செழிப்பை ஒட்டியதாகவே உள்ளது.
திருக்கேதீஸ்வரம் கோவிலை மீட்டெடுக்கும் [புணருத்தாரணம்] பணியின் முதல் முயற்சி மாபெரும் இந்துசமயச் சீர்திருத்தவாதியான ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரால் செய்யப்பட்டது. ஆயினும், அக்காலத்துச் சைவர்களின் அக்கறையின்மையாலும், கிறிஸ்தவர்களின் எதிர்ப்பாலும் அவரது முயற்சி உடனே வெற்றியை எதிர்கொள்ளவில்லை.
அவர் காலமடைந்து பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, திருக்கேதீஸ்வரம் கோவிலின் தொன்மைப் புகழைப்பற்றி நிலையான பதிவைத் தனது அலுவலக அறிக்கையில் எழுதியிருந்த ஸர் வில்லியம் ட்வைமனால் 13, டிசம்பர் 1893ல் யாழ்ப்பாணச் சைவர்களால், யாழ்ப்பாணக் கச்சேரியில் [அரசு அலுவலகம்] நடத்திய ஏலத்தில், நாற்பது ஏக்கர் காட்டுநிலம் யாழ்ப்பாணச் சைவர்களால் வாங்கப்பட்டபோது அவரது கனவு நிறைவேறியது
“செதுக்கப்பட்ட சிலைகளின் சில துண்டுகள், உடைந்த ஓடுகள், செங்கல்கள், மட்பாண்டச் சில்லுகள் தவிரவேறெதுவும் இப்புராதன நகரின் நிலப்பகுதிக்குமேல் காணப்படவில்லை. இந்நிலம் மட்டுமீறிப் பெரிதாகவளர்ந்த, அடர்த்தி குறைந்த, தாழ்ந்த காடாகிவிட்டிருக்கிறது; சில தனக்கா, பவொப்பா மரங்கள்தாம்பெரிதாக வளர்ந்துள்ளன. பழைய தெருக்கள் இருந்ததற்கான அடையாளமும், இரண்டு–மூன்றுகிணறுகளும் காணப்படுகின்றன. அங்கிருந்த குன்றின் மையத்திற்குப் பக்கத்தில் ஏதோ ஒருஇடத்திலிருந்த எந்தவொரு செங்கல்கட்டிடத்தின் அடித்தளத்தின்மேல் நகரின் பெரும்பகுதி நின்றதுஎன்று நம்பினேனோ, அவை அரண்மனை என்று குறிப்பிடப்பட்டன; கோவிலின் வாசல் கிணற்றுக்குஅருகாமையில் இருந்ததென்று சொல்லப்பட்டது.”
[கட்டுரை சமர்ப்பித்தபோது] கூட்டத்திற்கு வந்திருந்த பி. இராமநாதன் [பிற்காலத்தில் ஸர் பொன்னம்பலம்] இந்த அறிக்கையின் ஒருபகுதிக்கு மறுப்பு தெரிவித்ததுடன், இவ்விடத்தின் இந்துசமய நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்கும் ஒரு கருத்தையும் சேர்த்தார். மேலும், பழைய கட்டிடங்களின் இடம் உலகியல் சார்ந்த [secular] நகரின் பகுதியல்லவென்றும், கோவிலின் உடமையென்றும், அந்தப் பகுதியின் மக்கள் கோவிலின் அதிகாரிகள், பக்தர்கள், பணியாளர்கள் என்றும் சொன்னார். அப்பகுதியின் ஒரு குறிப்பிடத்தக்க தனித்தன்மை — பொவாக்கேவும், முந்தைய பிரித்தானியப் பார்வையாளர்களும் கவனிக்கத்தவறியவை, கோட்டையென்று சொல்லப்பட்டதைச் சுற்றியிருந்த இரட்டை அகழிகள் — வெளித்தடுப்பு அரணாகக் கடல்நீரையும், உட்பாதுகாப்பாக நன்நீரையும் உள்ளடக்கி, செல்வச்செழிப்பான கோவிலின் உடமைகளுக்கு வலுவான பாதுகாப்பாக அமைந்தன என்று இப்பொழுது தெளிவாகிறது.
கோவில்நிலத்திலிருந்த சோழர்கிணறு, போர்ச்சுகீசியர் காலத்துக்குமுன் வழிபாட்டிலிருந்த சிவலிங்கம், உட்கார்ந்திருக்கும் நந்தி, அப்போது மண்மூடியிருந்த கோவில் அடித்தளத்தின் அருகிலுள்ள பிள்ளையார் திருவுருவங்கள் வாய்ப்பளித்த தடயங்களிலிருந்து தரைமட்டமாக்கப்பட்ட தலைமைக் கோவிலின் மூலமனை ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இலங்கை இந்துக்களின் வேண்டுதலின்படி காசியிலிருந்து புகழ்பெற்ற சிவலிங்கம் ஒன்று திருக்கேதீஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்யவேண்டிக் கொடுக்கப்பட்டதாகவும், அதுவே தற்பொழுது ஆதிமூலமாக வழிபடப்பட்டுவருவதாகவும் இராமேஸ்வரத்திலுள்ள பதிவுகள் சான்றாக உள்ளன.
பண்டைய [கோவில் இருந்த] மிகச்சரியான நிலத்தில் ஒரு சிறிய கோவில் கட்டப்பட்டு, 1903, ஜூன் 28ம் தேதியில் பிராணப்பிரதிஷ்டை [உயிரூட்டல்] செய்யப்பட்டது[8].
தற்போதைய சுவாமி மற்றும் அம்பாளின் சன்னதிகள் முதல் உலகப் பெரும்போருக்குப் பின்னர் மன்னாரில் பணியாற்றிய இந்துப் பொது அலுவலர்களின் [public servants] தூண்டுதலால் மிகவும் பகட்டான அளவில் கட்டப்பட்டன. அவைகளும் காலப்போக்கில் சிதிலமடைந்தன. அக்டோபர் 19, 1948ல் இந்துக்களால் கொழும்பில் ஒரு கூட்டத்தில் துவக்கப்பட்ட திருக்கேதீஸ்வரம் கோவில் மறுநிர்மாணிப்புச் சங்கத்தின் [Thiruketheeswaram Temple Restoration Society] ஆதரவின்கீழ் புதுப்பிக்கப்பட்டு ஆகஸ்ட் 1952ல் குடமுழுக்கும் [கும்பாபிஷேகம்] செய்விக்கப்பட்டது.
இது தற்போதைக்கு மையச்சன்னதிகளில் பூசைகளும், வழிபாடுகளும் தடையின்றித் தொடர உதவும்போது, ஒன்பது பிரகார சன்னதிகள், ராஜகோபுரம், திருமதில், மற்ற பக்கமண்டபங்களின் புதுப்பிப்புப்பணிகள் நடந்தன.
தென்னிந்தியாவில் கிட்டும் மிகச்சிறந்த சமய, [ஆகம]சிலைக்கலை வல்லுனர்களின் திறமையால் புதுக்கோவிலின் வரைபடமும், நில அமைப்புத் திட்டமும் மரபுசார்ந்த வழியில் உருவாக்கப்பட்டன. வெளிப்பிரகாரத்தின் வடகிழக்குச் சுற்றுக்கட்டில் ஒரு உத்சவ மண்டபம் [வசந்த மண்டபம்] உடனிருக்கும், வெளிச்சுவற்றால் சூழப்பட்ட மற்ற கட்டிடங்களுக்கு நடுவில் இருக்கும். மாபெரும் பக்தர்திரளுக்கு இடங்கொடுக்கும்வகையில் வெளிச்சுவருக்கு வெளியே சுற்றிலும் அகலமான பகுதியில் இரதவீதி அமைந்திருக்கும். அதைச் சுற்றியுள்ள நிலங்களில் குறுக்குநெடுக்கான வீதிகள் பூங்காக்கள், பொழில்கள், தோப்புகள், மடங்கள், சத்திரங்கள், அர்ச்சகர், அடியார்கள், கோவில் பணியாளர்களுக்கான வீடுகள் இவற்றுக்கு ஏற்பாடளிக்கும்வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
திட்ட அமைப்பில் குருகுலம், சமய மேற்படிப்புக்கான கல்லூரி, சாதுக்களுக்கான ஓய்விடம் இவற்றிற்கும் திட்த்தில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. குருகுலம் ஏற்கனவே உருவாகியிருக்கிறது. கோவிலுக்குச் செல்லும் வழியில் அநாதை இல்லத்திற்கான இடவசதியுடன் மகளிர் நல்வாழ்வு மையம் ஒன்று கட்டப்பட்டுவருகிறது.
நினைவுக்கெட்டாத பழங்காலத்தில் நம்மை வந்தடைந்த புராதனமான சிவலிங்கம், இலங்கைமீது ஐரோப்பியப் படையெடுப்புகளால் சிலகாலம் தலைமறைவாகியபின்னர், மேற்குப் பிரகாரத்தில் சிறப்பாகக் கட்டப்பட்ட மண்டபத்தில் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வந்திருந்த மாபெரும் இந்துசமயப் பிரதிநிதிக் கூட்டத்தின் முன்பு அக்டோபர் 31, 1960, திங்கட்கிழமை காலை பத்துமணிக்கு தகுந்த சடங்குகளுடன் அரியணையேற்றப்பட்டது.
இந்தக் கும்பாபிஷேகத்தின் வாய்ப்பைப் பயன்படுத்தி விநாயகர், சுப்பிரமணியர், நந்தீஸ்வரர் இவர்கள் உட்பிரகாரத்திலுள்ள தத்தம் சன்னதிகளில் நிறுவப்பட்டனர்.நினைவுக்கெட்டாத பழங்காலத்தில் நம்மை வந்தடைந்த புராதனமான சிவலிங்கம், இலங்கைமீது ஐரோப்பியப் படையெடுப்புகளால் சிலகாலம் தலைமறைவாகியபின்னர், மேற்குப் பிரகாரத்தில் சிறப்பாகக் கட்டப்பட்ட மண்டபத்தில் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வந்திருந்த மாபெரும் இந்துசமயப் பிரதிநிதிக் கூட்டத்தின் முன்பு அக்டோபர் 31, 1960, திங்கட்கிழமை காலை பத்துமணிக்கு தகுந்த சடங்குகளுடன் அரியணையேற்றப்பட்டது.
‘ஈ’ என்னும் இசைத்தொனிக்கு துல்லியமாச் சுரம்கூட்டிய, தூய தாமிரம்-காரீயக் கலப்பு உலோகத்தில் லண்டனில் நன்கு அறியப்பட்ட வார்ப்பகத்தில் வார்த்த, நான்கடி விட்டமுள்ள கோவில்மணி ஒன்று ஏற்கனவே கடல்வழியாகத் திருக்கேதீஸ்வர்த்திற்கு வந்துகொண்டிருக்கிறது. அதன் எடை ஒரு டன், மூன்று குவார்ட்டர்கள், ஐம்பதுக்கு, ஐம்பதுக்கு ஐம்பது அங்குல வடிவமைந்தது. அதன் மொத்த எடை இரண்டு டன் ஆகிறது. தகுந்த மணிக்கூண்டும் கட்டப்பட்டுவருகிறது.
1960ன் திருவெம்பாவுக்காக கடல்மட்டத்திற்கு எழுபத்தைந்தடி உயரத்திலிருந்து மன்னார் மாவட்டத்தில் பலமைல்கள் வட்டாரத்திலிருக்கும் இந்துக்களை திருப்பள்ளியெழுச்சி பாடித்தொழுவதற்காக அழைத்தெழுப்யும் என நம்பப்படுகிறது.
பத்துவருட இருப்பை நிறைவேற்றிய திருக்கேதீஸ்வரம் கோவில் புனரமைப்புச் சங்கம் அதிகமாகச் என்பதை கோவிலுக்கு வருகைதந்தால்மட்டுமே ஒரு இந்து அடியாரால் உணரவியலும். யாத்திரிகர்களின் வசதிக்குத் தேவையானதை நிறைவேற்றும் பல மடங்களுக்கும், கோவிலின் வாயிற்படிக்கு நேராக வருவதற்கு நல்ல வண்டிவரக்கூடிய தார்ரோடும் உள்ளது. பாலாவி ஆற்றில் புனித நீராடுவதற்காக சிமிண்ட் படிகளுல்ல குளிக்கும் துறையும், அருகாமையில் மற்ற நோக்கத்திற்காக குழாய்த் தண்ணீர் வசதியும் உள்ளன. அடியார்களின் அனைத்து அன்றாடத் தேவைகளை எதிர்கொள்ள மின்வசதி, தொலைபேசி இணைப்புள்ள துணை அஞ்சல் அலுவலகம், கடைகள், மன்னாரிலிருந்து அடிக்கடி பஸ் சேவை உள்ளன.
அவரது சமயத்தின், பண்பாட்டின், மொழியின், இந்நாட்டில் நிலைத்துநிற்கும் சின்னமான திருக்கேதீஸ்வரத்திற்குத் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது வருகைதருவது இலங்கையிலுள்ள ஒவ்வொரு இந்துவின் தலையாய கடமையாகும்.