இலங்கையின் ஜனநாயகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றகரமான மாற்றங்கள், குறிப்பாக சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக நிறுவனங்களின் சுயாதீனத்துவ உறுதிப்பாடு என்பன தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தமது வரவேற்பை வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களும், ஐரோப்பிய ஒன்றிய இலங்கை நட்புறவுக்குழுவில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகளுமான ஜோப்ரே வன் ஓர்டென், வில்லியம் டார்ட்மௌத் ஆகியோர் கடந்த 2 தொடக்கம் 6ஆம் திகதி வரையிலான ஐந்து நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
மேற்படி ஐந்து நாள் விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள், எதிர்க்கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தனர்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை ஆகிய இருதரப்பிற்கும் இடையிலான பொதுவான பிராந்திய ரீதியிலான செயற்பாடுகள், ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை, அரச நிர்வாகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி, சிவில் சமூக அமைப்புக்கள் சார்ந்த பிரச்சினைகள், மனித உரிமைகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் இக்கலந்துரையாடல்கள் அமைந்திருந்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.