இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளில் சறுக்கும் ஒபாமா நிர்வாகம்!

254

625.117.560.350.160.300.053.800.210.160.90

அமெரிக்காவின் ஒபாமா நிர்வாகம், இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்பு அதிகரிப்பை நிறுத்தி, இருதரப்பு உறவுகளை பயன்படுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான யோசனைகளின் நடைமுறைக்கு காத்திரமான பங்கை அளிக்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தெ வயர் என்ற இணையம் இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் அரசாங்கம், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை அமெரிக்கா தொடர்ந்தும் தெரிவித்து வந்தது.

இதனையடுத்து மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் ஆட்சியமைத்த பின்னர் மனித உரிமை விடயங்களில் முன்னேற்றம் காணப்படுவதாக அமெரிக்கா கூறிவருகின்றது.

இந்த முன்னேற்றங்கள் முன்னைய அரசாங்கத்தின் கொள்கைகளை காட்டிலும் காத்திரமாக இருக்கின்றபோதும், நடைமுறையை பொறுத்தவரையில் அதனை காணமுடியவில்லை என்பதே தெ வயர் இணையத்தின் கருத்தாக் கூறப்படுகிறது.

மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தினது ஊழல் ஒழிப்பு மற்றும் மீளமைப்பு அட்டவணையை பொறுத்தவரையில் இது பிரம்மாண்டமானது.

எனினும் அதன் நடைமுறைகளை பொறுத்தவரை அது தெளிவில்லாமல் உள்ளது.

ஊழல்கள் காரணமாகவே மஹிந்த ராஜபக்க்ஷவின் அரசாங்கம் தேர்தலில் தோல்வி கண்டது.

எனினும் அந்த ஊழல்கள் தொடர்பில் மைத்திரியின் அரசாங்கம், இன்னும் நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

தமிழர் வாழும் பிரதேசங்களை பொறுத்தவரையில் இராணுவ மயமாக்கல் இன்னும் முடியவில்லை. சமூகப்பிரச்சினைகள் அங்கு நிலவுகின்றன.

இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரை புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் அதிக பிரயத்தனத்தை எடுத்துக்கொண்டுள்ளது.

எனினும் அது எந்த அளவுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை உள்ளடக்கியிருக்கிறது என்பது கேள்விக்குறியாகும்.

இதனைக்கொண்டு பார்க்கும் போது மைத்திரிபால சிறிசேனவின் மீளமைப்புக்கள் ஆழமானவையாக இல்லை என்று தெ வயர் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்துப்படி இலங்கை நல்லிணக்கம் தொடர்பில் இன்னும் செய்யவேண்டியவை அதிகமாக உள்ளன என்பது தெளிவு.

எனினும் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளில் யோசனையை முன்வைத்த அமெரிக்கா, இன்று யோசனை நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் வழங்காமல் இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு என்பவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.

அமெரிக்காவுக்கான தூதர் அடுல் கெசாப், அடிக்கடி இலங்கையுடனான உறவு குறித்து பெருமிதம் பேசிவருகிறார்.

என்றும் இல்லாதவாறு இலங்கையுடனான உறவு உச்சநிலையில் இருப்பதாக அவர் கூறுகிறார்.

இந்த நிலையில் இலங்கையின் கடினமான விடயத்தில் அமெரிக்காவின் ஒபாமா நிர்வாகம், திறந்தநிலையில் செயற்படவேண்டியது அவசியமாகும் என்று தெ வயர் கூறுகிறது.

மேலும், துரதிஸ்டவசமாக தற்போது இலங்கைக்கு வந்துள்ள பிஸ்வாலிடமும், மிலிநோவ்ஸ்கியிடமும் அவ்வாறான திட்டம் இல்லை என்று தெரிவதாக தெ வயர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE