சித்திரவதைகளுக்கெதிரான ஐ.நா மன்றக் குழுவின் ஜெனிவா அமர்வின்போது, இலங்கையில் ஏழு இரகசிய சித்திரவதை முகாம்கள் இயங்குவதாகத் தெரியவந்துள்ளது. இலங்கை இராணுவமும் – அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களும், இந்த இரகசிய முகாம்களை நடத்தியதாகவும் – இதில் சில இன்னமும் செயல்படலாம் என்ற சந்தேகத்தையும், அம்னெஸ்டி அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது. இது போன்ற இடங்களில் சட்டத்திற்குப் புறம்பான சித்திரவதைகள், கொலைகள் போன்றவை நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக 7 முகாம்களின் முகவரியை அம்னெஸ்டி அளித்துள்ளது. அவையாவன, வவுனியா பூந்தோட்டம் கல்லூரி, வவுனியாவில் இருக்கும் 211 ஆவது பிரிகேட்டின் தலைமையகம், வெளிக்குளம் பாடசாலை, புளோட் அமைப்பின் வவுனியா தடுப்பு மையம், மற்றும் தருமபுரத்திற்கு 21 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஐந்து கைவிடப்பட்ட வீடுகள், மற்றும் கட்டிடங்களில் முன்னால் புலிகள் 700 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 80 பேர் புலிகளின் முன்னணித் தலைவர்கள் என்றும், 300 பேர் புலிகளின் ஆதரவாக செயற்பட்ட பொதுமக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர முல்லைத்தீவில் இரு இரகசிய முகாம்கள் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்து. இந்த அமர்வில் விரைவாக ஆராயப்பட்டது. இந்தக் குழுவின் தலைவரான பெலிஸ் கியர், இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். மனித உரிமை மீறல்கள் குறித்த. அம்னெஸ்டி உள்ளிட்ட அமைப்புக்கள் அளித்த ஆதாரங்கள் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டோர் மீது சுயாதீனமாக மருத்துவ பரிசோதனை நடத்தப்படுவதில்லை என்றும் ஐ.நாவின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் தலைவர், பெலிஸ் கியர் தெரிவித்தார். மேலும் பாரிய மனித உரிமை மீறல்கள் இலங்கையில் இடம்பெற்றதாக தமக்கு பல புகார்கள் வந்துள்ளதாகவும் கூறினார். அவர் இப் புகார்களில், பலவந்தமாகக் காணாமல் போதல், காவல்துறையால் சித்திரவதை செய்யப்படல், பாலியல் தாக்குதல் நடத்தப்படுவது, மற்றும் சிறையில் நடைபெறும் மரணங்கள் போன்றவை அடங்கும் என்றார். அதே சமயம், இலங்கை அரசு தான் அறிவித்தபடி தடுத்து வைக்கப்பட்டோரின் பெயர் விபரங்களை இன்னமும் வெளியிடவில்லை எனவும், ஐ.நா அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் ஜனவரி மாதம் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளிடம், தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் பெயர் விபரங்கள் அரசிடம் இருப்பதாகவும், இதை அவர்களிடம் உறவினர்கள் பெறலாம் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சு கூறியிருந்தது. ஆனால் இது போன்ற விபரங்கள் இருப்பதாகக் கூறப்பட்டலும், இவ்விபரங்களைப் பெறமுடியவில்லை என்று தன்னார்வுத் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.என்றார் பெலிஸ் கியர்.
சித்திரவதை தொடர்பான ஐ.நாவின் உடன்பாட்டில், சில அம்சங்களில் தமது நாடு கைச்சாத்திடவில்லை என்றும், இலங்கை அமைச்சரவை ஆலோசகராக தற்போது இருக்கும், அரசின் முன்னாள் சட்டமா அதிபர் மோகன் பெரிஸ் சுட்டிக்காட்டினார். மாறாக தமது அலுவலகத்தில் இரகசிய முகாம் எதுவும் செயற்படவில்லை என்று புளோட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் லண்டன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இந்த அமர்வில் எழுப்பப்பட்ட விடயங்கள் குறித்து. இலங்கை அரசு விரிவாக பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதே நேரம் விடுதலைப்புலிகள் போரின் இறுதிக்கட்டத்தில் செய்த தற்கொலைத் தாக்குதல்கள், கட்டாய ஆட்சேர்ப்பு போன்றவை குறித்து, ஏற்கனவே ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களையும் பொலிஸ் கியர் சுட்டிக்காட்டியிருந்தார்.
-ஆகாஸ்-