நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க இன்று மாலை மீண்டும் பிரதம நீதியரசராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறைபாடுகளை கொண்டதும் சட்டவிரோதமானதும் என ஜனாதிபதியும் அமைச்சரவையும் ஏற்கனவே தீர்மானித்துள்ளது.
இதனிடையே பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்சை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுத்து சட்டத்தரணிகள் ஒன்றியம் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் காரணமாக மொஹான் பீரிஸ் தனது அலுவலகத்தில் இருந்து வெளியேறி விட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் உத்தரவுகள் மூலம் பிரதம நீதியரசர் ஒருவரை பதவியில் இருந்து நீக்குவது ஜனநாயகத்திற்கு புறம்பானது என சட்ட ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், மொஹான் பீரிஸ் கடந்த காலங்களில் வழங்கிய தீர்ப்புகளின் செல்லுபடி தன்மை குறித்தும் கேள்விகள் எழும்பியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
ஷிராணி பண்டாரநாயக்க உச்ச நீதிமன்றிற்கு வருகை
பிரதம நீதியரசராக கடமையாற்றிய ஷிராணி பண்டாரநாயக்க உச்ச நீதிமன்றிற்கு வருகை தந்துள்ளார்.
பிரதம நீதியரசராக கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொள்ளும் நோக்கில் உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதம நீதியரசராக கடமையாற்றி வரும் மொஹான் பீரிஸ் பதவியை துறக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மொஹான் பீரிஸின் நியமனம் சட்டவிரோதமானது என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் அடிப்படையில் பிரதம நீதியரசராக இன்று ஷிராணி பண்டாரநாயக்க மீளவும் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொள்வார் என சட்டத்தரணிகள் சங்க அழைப்பாளர் ஜே.சீ. வெலியமுன தெரிவித்துள்ளார்.