இலங்கையில் ஜேர்மன் நாட்டவரின் வியக்க வைக்கும் செயற்பாடு!

225

இலங்கையில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

இலங்கையில் அழிந்து வரும் பவள பாறைகளை பாதுகாக்க குறித்த ஜேர்மன் நாட்டவர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக தனது சொந்த நிதியை செலவு செய்து வருகிறார்.

பவள பாறைகளை பாதுகாக்கும் நடவடிக்கையை பிரபல சுற்றுலா தலமான ஹிக்கடுவையில் முன்னெடுத்துள்ளார்.

குறித்த நபர் 2012ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் குளிர்காலத்தின் போது இலங்கைக்கு வர ஆரம்பித்துள்ளார். அவ்வாறு இலங்கை வரும் போது நாள் ஒன்றுக்கு 2500 ரூபாய் என்ற கணக்கில் 3 மாதங்கள் ஹோட்டலில் தங்கி இருப்பார். இதன்போது சாக்கு நூல்களில் உரப் பைகள் தைத்து, ஹிக்கடுவையில் சுனாமிக்கு பின்னர் அழிந்த பவள பாறை திட்டுகளை மீண்டும் ஒன்று சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார்.

ஆங்காங்கே சிதறி கிடக்கும் பவள பாறைத் துண்டுகளை சேர்த்து கட்டி, உரப்பையில் போட்டு, மற்றுமொரு இடத்திற்கு கொண்டு சென்று மீண்டும் உயிர் பெற வைக்கும் நடவடிக்கைகளை ஜேர்மன் நாட்டவர் மேற்கொண்டு வருகிறார்.

சில வருடங்களாக எவ்வித தலையீடுகளுமின்றி அவர் தனிப்பட்ட ரீதியில் தயாரிக்கப்பட்ட 21 பேர்சஸ் நிலப்பரப்பு அளவு பவள பாறைகளை அமைத்துள்ளார்.

அந்தப் பகுதியில் வசிக்கும் மீனவ குடும்பங்களின் செயற்பாடுகள் குறித்து அவர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். தான் ஹிக்கடுவை கடல் மீது அதிக அன்பு செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். தான் மரணிக்கும் வரையில் இந்த பவள பாறை வளர்ப்பினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த கடலில் மரணிப்பது தனது ஆசை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வித பெருமையுமின்றி, தான் செய்யும் செயலை பகிரங்கப்படுத்தாமல், இது எனது நாடு எனது இனம் என்ற வேற்றுமை இல்லாமல், தனது செலவில் ஜேர்மன் நாட்டு பிரஜை, இயற்கையை பாதுகாப்பது குறித்து இலங்கையர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இவர் மீது மிகவும் ஈர்ப்பு கொண்ட இலங்கையர் ஒருவர் அவருடன் புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

SHARE