இலங்கையில் மத ரீதியான பதற்றம் குறைந்துள்ளது – அமெரிக்கா

218

இலங்கையில் மத ரீதியான பதற்றம் குறைந்துள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கையில் பல ஆண்டுகளாக மத ரீதியான பதற்றம் நிலவி வந்ததாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச மத சுதந்திரப் பிரிவு தூதுவர் டேவிட் சமர்ஸ்டின் தெரிவித்துள்ளார்.
கடும்போக்குடைய சிங்கள பௌத்த இன சமூகத்தைச் சேர்ந்த சில தரப்புக்கள் சிறுபான்மை மத சமூகங்களின் மீது அழுத்தங்களை பிரயோகித்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் பதற்ற நிலைமை ஓரளவு குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மத சுதந்திரம் தொடர்பிலான அறிக்கையொன்றை அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜொன் கெரி சமர்ப்பித்துள்ளார்.
இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள்இ இந்து ஆலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்திய பௌத்த கடும்போக்குவாதிகளுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருவதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குற்றம் சுமத்தி வருவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சில சந்தர்ப்பங்களில் அரசாங்க அதிகாரிகளும் காவல்துறையினரும் சிங்கள பௌத்த தேசியவாத அமைப்புக்களின் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக செயற்பட்டு வரும் நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்கள் மீது அதிகளவு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத வழிபாடுகளில் ஈடுபடும் தரப்பினர் மீது சட்டவிரோத ஒன்று கூடல் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா இயக்கம் தொடர்ச்சியாக சிறுபான்மை சமூகங்கள் மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் சிங்கள பௌத்தர்களை பாதுகாக்க புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென பொதுபல சேனா கோரியிருந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

SHARE