2018ஆம் ஆண்டு இலங்கை இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குரிய மின்சார சபையின் நீண்டகால திட்டத்திற்கு அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டளவில் ஏற்படக்கூடிய மின்சார நெருக்கடிக்கு வெற்றிகரமாக முகம்கொடுப்பதற்கு நான்கு வருடங்களுக்கு எட்டு மின்சார உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்க வேண்டும் என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இதன்படி, டீசல் மூலம் இயங்கும் இரண்டு மின் நிலையங்களும் சுழல் காற்றாடி மூலம் இயங்கும் இரண்டு மின் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. இவற்றின் மூலம் 1275 மெகா வோட்ஸ் மின்சாரம் தேசிய மின்சார கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதன் மூலம் நாட்டின் மின்சார உற்பத்தியை 2020ஆம் ஆண்டளவில் 3900 மெகா வோட்ஸ்லிருந்து 4900 மெகா வோட்ஸ் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த மின்சார நிலையங்களை திட்டமிட்ட அடிப்படையில் நிர்மாணிப்பதன் மூலம் 2018ஆம் ஆண்டு காலத்தில் மின்சார நெருக்கடி ஏற்படுவதை தடுக்க முடியும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.