இலங்கை அரசியலில் உடன்பாடில்லை! சிறிநேசன் எம்.பி.

255

இலங்கை அரசியலில் தனக்கு அவ்வளவு உடன்பாடில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

“கலைமகள் சாதனையாளர் விழா” ஏறாவூர் கலைமகள் மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்றது.

பாடசாலையின் பிரதி அதிபர் என். இராஜதுரை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நான் ஆசிரியராக, அதிபராக, விரிவுரையாளராக, பிரதிக் கல்விப் பணிப்பாளராக, அரசியல் வாத்தியாராக இருந்திருக்கின்றேன்.

இப்பொழுது அரசியல் வாதியாக இருக்கின்றேன். ஆனால், இலங்கை அரசியலில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

இலஞ்சம், ஏமாற்று, உழைப்பதற்காக அரசியலைப் பயன்படுத்துவது இப்படியான நிலைமைகள் தான் தற்போது அரசியலில் மலிந்து காணப்படுகின்றன.

இந்தப் பண்புகளைக் கொண்டுள்ள அரசியல் வாதிகள் தங்களை உத்தமர்களாகவும் காட்டிக் கொள்கின்றார்கள். இந்நிலைமைகளால் தான் நான் இலங்கை அரசியலை வெறுத்திருந்தேன்.

ஆயினும் என் அன்புக்குரிய மாணவர்கள் என்னை அரசியலுக்குள் எவ்வாறோ இழுத்துக் கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள்.

அவர்களது பேராதரவு காரணமாக நான் மாவட்டத்தில் அதிகப்படியான வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டேன்.

எப்படியிருந்தாலும், இத்தகைய இழி அரசியல் கலாச்சாரங்களுக்கூடாக நாம் நல்லதைச் செய்து தூய்மைப்படுத்த வேண்டும் என்பது எனது அவா.

அதனால்தான் இப்பொழுது அரசியலில் ஒட்டிக் கொண்டிருக்கின்றேன். இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் எமது தலைவர் இரா. சம்பந்தன் ஐயா அவர்கள் முன்னின்று உழைத்துக் கொண்டிருக்கின்றார்.

இலங்கையில், இனப்பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் என்ற நம்பிக்கை சர்வதேச ரீதியிலும் தேசிய மட்டத்திலும் இப்பொழுது துளிர்விட ஆரம்பித்திருக்கின்றது.

எனவே, நீண்டகாலமாக புரையோடிப்போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டால், எம்மைச் சூழ்ந்திருக்கின்ற மற்றைய பிரச்சினைகள் தானாக அல்லது சிறு பிரயத்தனங்களின் மூலம் தீர்க்கப்பட்டு விடலாம்.

அந்த சந்தர்ப்பத்தை நாம் அடையும்போது பாடசாலைகள் எதிர்கொள்கின்ற அனைத்துப் பிரச்சினைகளும் கூட தீர்ந்து விடும்.

ஆயினும், பாடசாலைகள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை நிர்வாக மட்டத்திலும், அந்தப் பிரதேசத்தில் பாடசாலைச் சமூகமும் தீர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு முன்மாதிரியான நிலைமையை நாம் அடைந்து கொள்ளவேண்டும்.

ஆசிரியர் பற்றாக்குறை, பௌதீக வளப் பற்றாக்குறை என்பனவற்றை அந்தப் பாடசாலைச் சமூகமும் அந்தப் பாடசாலையின் பயனாளிகளும் கூட தற்காலிகமாகவேனும் தீர்வு காண்பதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்க வேண்டும்.

இலங்கை அரசியல் அமைப்பில் எனக்குப் பிடித்த ஒரேயொரு விடயம் இலவசக் கல்வித் திட்டம்தான். இதனைக் கொண்டு நாம் இழந்த கல்வியை மீளப்பெற்றுக் கொண்டு அறிவார்ந்த சமூகமாக மிளிர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் எஸ். தில்லைநாதன் உள்ளிட்ட பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE