
எல்லா விடயங்களிலும் சர்வதேச ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் இலங்கை அரசு நாடுகிறது. பல்வேறு நாடுகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்கிறது. இலங்கை யுத்தத்தின்போது அரசியல் மற்றும் இராணுவ உதவிகள் சர்வதேசத்திடமிருந்து இலங்கை பெற்றுக்கொண்டது. ஆனால் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுக்கு சர்வதேச பொறிமுறைக்கு இலங்கை அஞ்சுவது போர்க்குற்றச்சாட்டுக்களை பாதுகாப்பதற்காகவே என்பது வெளிப்படையாக புரியுமொரு உண்மை. இலங்கை அரசு இந்தக் குற்றச்சாட்டுக்களை மூடி மறைக்க முயல்வதன் ஊடாக அவைற்றை விசாரணை செய்ய மறுப்பதன் ஊடாக எதனை பாதுகாக்க விரும்புகிறது என்பது மிகவும் முக்கியமானது.
சர்வதேசம் தலையிட அனுமதிக்கப்படாது என்றும் உள்ளக விசாரணை மூலமே விசாணை என்றும் இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் கூறியிருக்கிறார். ரணில் விக்கிரமசிங்க தொடர்ச்சியாக சர்வதேச விசாரணையை எதிர்த்து வந்திருந்தார். குறிப்பாக ஐ.நா அறிக்கையில் சொல்லப்பட்ட சர்வதேச கலப்பு நீதிமன்றம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியிருந்தார். சர்வதேச நிறுவனங்களோ, சர்வதேச பிரதிநிதிகளோ இலங்கை அரசின் உள்ளகப் பொறிமுறையில் உள்வாங்கப்படமாட்டார்கள் என்று இலங்கைப் பிரதமர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஆக இனப்படுகொலையை மூடி மறைக்க சர்வதேசத்திடம் மண்டியிடும் அரசு உள்நாட்டில் சர்வதேச எதிர்பாளராக காட்டுகிறது.
இதேவேளை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளக விசாரணைக்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் இன்னொரு புறம் ஈடுபடுகிறார். இலங்கையின் இராஜதந்திரிகளும் இந்த நடவடிக்கைகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார்கள். மகிந்த ராஜபக்ச காலத்தில் அவர் யுத்தத்தை முன்னெடுப்பதில் காட்டிய தீவிரத்தை இப்போது மைத்திரி ரணில் ஆட்சி முன்னெடுக்கிறது. ஜெனீவாவில் வெற்றி பெறுவோம் என இலங்கை அரசாங்கம் கூறுவது யுத்தப் பாணியிலான அறிவிப்பாகும். இங்கு இலங்கை அரசு போர்க்குற்றங்களை மறைத்து வெற்றி பெறும்போது தமிழ் மக்கள் தோற்கடிக்கப்படுகின்றனர் என்பதையும் இலங்கை அரசு அறிவிக்கிறது. இது இலங்கையின் புதிய அரசு இனச்சிக்கல் தொடர்பில் கடந்த கால அரசுகளைப் போன்றே செயற்படுகிறது என்பதற்கு தக்க எடுத்துக்காட்டு.
இலங்கைப் போரில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை என்பது தமிழ் மக்களை தமிழ் மக்களுக்கு இழைக்கும் மிகப்பெரும் அநீதியாகும். இலங்கை அரசு சர்வதேச விசாரணை வேண்டாம் என்றும் உள்ளக விசாரணையே நடத்துவோம் என்றும் கூறுவது இனப்படுகொலை புரிந்த போர்க்குற்றவாளிகளை பாதுகாப்பதற்கே. மகிந்த ராஜபக்சவை மின்சாரக் கதிரையில் இருந்து நாமே காப்பாற்றினோம் என்றும் ஐநாவின் அறிக்கையில் இலங்கை அரசுக்கு எதிராக முனவைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களில் ஆயிரம் மடங்கை புதிய அரசு குறைத்திருக்கிறது என்பதும் இலங்கை அரசு போர்க்குற்றவாளிகளை பாதுகாக்க முனைக்கிறது என்பதை அவ் அரசே சொல்லும் வாக்குமூலங்கள் ஆகும்.
போர்க்குற்றவாளிகளை பாதுகாப்பது என்பதும் இலங்கையில் நடந்த இனப்படுகொலைய மறைப்பது என்பதும் இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக வரலாறு முழுவதும் நடந்த இன ஒடுக்கல் அநீதிகளை மறைப்பதற்கும் அந்த அநீதிகளை இழைத்த சிங்களப் பேரினவாதத்தை பேணுவதற்கும் தொடர்ந்து அதை பாதுகாப்பதற்கும் அடிப்படையாக அமைகிறது. இலங்கை அரசு தான் இழைக்க அநீதிகளை ஒப்புக்கொள்ள மறுத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்திரித்து தனது ஒடுக்குமுறையை மறைத்தும் சிங்களப் படைகள் செய்த இன அழிப்பு குற்றங்களை மறைத்து இனப்படுகொலைப் போர்க்குற்றங்களை பாதுகாப்பதும் இந்த தீவில் தொடர்ந்தும் இன முரண்பாட்டையும் இன ஒடுக்குமுறையையும் ஊக்குவிப்பதாகவே அமையும் என்பதுதான் அதிர்ச்சி தரும் விடயமாகும்.
இலங்கையில் பல பத்தாண்டுகளாக தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இலங்கை அரசின் விசாரணைகளும் நீதித்துறையும் தமிழர் இன அழிப்புக்கு உடந்தையாகவே இருந்தன. 1983இல் நடந்த மிகப் பெரும் இனப்படுகொலை குறித்து இலங்கை அரசு முன்னெடுத்த நடவடிக்கை என்ன? இலங்கை அரசே முன்னெடுத்த இனப்படுகொலை நடவடிக்கைகளுக்கு அந்த அரசே விசாரணை செய்தால் எவ்வாறு நீதி கிடைக்கும். இதுவே இலங்கையின் வரலாற்று அனுபவம். இவ்வாறு தொடர்ந்தும் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்வதை ஊக்குவிக்க இன்றைய அரசும் முனைகிறது.
இலங்கையில் விசாரணை செய்ய உரிய நீதி அமைப்பில்லை என்று ஐ.நா தனது அறிக்கையில் கூறுகிறது. தவிரவும் இலங்கை அரசு உள்ளக விசாரணையின் ஊடாக போர்க்குற்றவாளிகளை பாதுகாக்க முனைகிறது என்பதை அவ் அரசே சொல்கிறது. மகிந்த ராஜபக்ச நடத்திய நல்லிணக்க ஆணைக்குழு விசாரணையில் மக்கள் சாட்சியம் வழங்கியபோது அவர்களை இலங்கை இராணுவப்படைகள் புகைப்படம் பிடித்து மிரட்டியிருந்தது. இலங்கை அரசு தானே இழைத்த குற்றங்களை தானே விசாரிப்பதாக கூறுவது எவரலாலும் ஏற்கத்தக்கதல்ல. தவிரவும் இனப் படுகொலையால் போர்க்குற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களே தமக்கு எவ்வாறான விசாரணை தேவை என்பதை கோர முடியும். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இலங்கை அரசுமீது துளியளவும் நம்பிக்கை இல்லை. அவர்கள் சர்வதேச நீதி விசாரைணை தேவை என்பதை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
சர்வதேச விசாரணையை கோரியே வடமாகாண சபைத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழ் மக்கள் வாக்களித்தனர். சர்வதேச விசாரணை ஒன்றை வலியுறுத்தி தமக்கு வாக்களித்த மக்களுக்காக அவர்களின் உள்ள ஏக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் சர்வதேச நீதிவிசாரணை தேவை என்றும் வடக்கு மாகாண சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ் மக்களின் கோரிக்கைகளை இலங்கை அரசுகள் காலம் காலமாக நிராகரித்து வந்ததுடன் அவர்களின் குரல்களையும் நசுக்கி வந்திருக்கின்றன. ஏனெனில் தமிழ் மக்களின் கோரிக்கைகள் சிங்கள அரசின் இன ஒடுக்குமுறைக்கு எதிரானவை. ஒடுக்கு முறையிலிருந்து மீட்சி பெற துடிக்கும் அந்தக் கோரிக்கைகளை நசுக்கி தொடர்ந்து இன அழிப்பை மேற்கொள்வதே இலங்கை அரசின் செயல்.
பிரதம நீதியரசராக தமிழரை நியமித்திருப்பதும் எதிர்கட்சித் தலைவர் பதவியை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கொடுத்திருப்பதையும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகையைபோல காண்பித்து சர்வதேச விசாரணையிலிருந்து தப்பிக்கும் வழியை இலங்கை அரசு கோருகிறது. இலங்கையில் இன படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட காலத்தில் தமிழர்கள் உயர்பதவிகளில் இருந்துள்ளார்கள். அவர்களால் தமிழ் மக்களை பாதுகாக்க முடியாத நிலையில் இருந்ததுடன் அவர்களும் அந்த இனப்படுகொலைக்கு உடந்தையாக பயன்படுத்தப்பட்டனர். பதவிகளை வழங்கி தாம் செய்த இனப்படுகொலையை இலங்கை மூடி மறைக்க முயல்வதும் மிகவும் தவறான அணுகுமுறையாகும்.
இலங்கை அரசு சர்வதேச விசாரணைக்கு இணங்க வேண்டும் என்று ஐ.நா விசாரணை அறிக்கை பரிந்துரைத்துள்ள நிலையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை சர்வதேச விசாரணை உள்ளிட்ட 14 விடயங்களை நீக்கி மென்மையானதாக்க அல்லது பலவீனமானதாக்க கடும் முயற்சிகளில் இலங்கை அரசு ஈடுபடுகிறது. இலங்கை அரசு போர்க்குற்றவாளிகளை பாதுகாக்கும் இனப் படுகொலையாளிகளை பாதுகாக்கும் தீவிர நடவடிக்கையில் மிகவும் புத்திசாலித்தனமாக ஈடுபடுகிறது. யுத்த வெற்றி வீரனான மகிந்த ராஜபக்சவை காப்பாற்றுவதில் தம்மை அர்ப்பணித்துள்ள இன்றைய இலங்கை அரசு அச் செயலின் ஊடாக சிங்களப் பேரினவாத இன ஒடுக்கல் வெறியையே பாதுக்கிறது.
யுத்த குற்றவாளிகளாக மகிந்த ராஜபக்ச மாத்திரம் அடையாளம் காணப்படவில்லை. 2001இல் இருந்து 2011வரையான காலத்தில் நடந்த சம்பவங்களின் அடிப்படையிலேயே ஐ.நா விசாரணை அறிக்கை பரிந்துரைக்கிறது. அவ்வாறு எனில் அக்கால கட்டத்தில் ஆட்சி புரிந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இறுதி யுத்த காலத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் என்ற அடிப்படையில் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோரும் யுத்தக்குற்றவாளிகளாக அடையாளம் பெறுகிறார்கள். அக் காலத்திலிலேயே அதிகளவான போர்க்குற்றங்கள் நடந்துள்ளன. மகிந்த ராஜபக்சவை காப்பாற்றுவதைப் போல காட்டி பேரினவாத அலைக்கு தீணியிட்டாலும் இன்றைய அரசு முழுமையாக தன்னை பாதுபாக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடுகிறது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
ஆக, இலங்கைத் தீவில் ஈழத் தமிழருக்கு எதிரான நடந்த இன ஒடுக்கல் குறித்த உண்மையை மறைப்பதுதான் சிங்களப் பேரினவாத அரசியலாக தொடர்கிறது. அதையே புதிய அரசும் செய்ய முனைக்கிறது. சிங்கள மக்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். சிங்கள மக்களின் ஆதரவு போய்விடும் என்ற அரசியல் நோக்க்திற்காக ஈழத் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன அநீதிகளை மறைப்பதன் ஊடாக இலங்கை அரசு தமிழ் மக்களை தனது பிரஜைகளாக ஏற்றுக்கெள்ள மறுக்கிறது. அத்துடன் தமிழ்மக்கள் இந்த நாட்டின் இரண்டாம் தரப் பிரஜைகளாககூட மதிக்காமல் இன்னொரு நாட்டின் பிரசைகளாகவே கருதுகிறது. இந்தப் பாரபட்சம் மகிந்த ராஜபக்ச காலத்தில் மாத்திரமின்றி இலங்கை வரலாறு முழுவதும் நிகழ்ந்த விடயம். இதுவே தமிழர்களை தனிநாடு கோரிய போராட்டத்திற்கும் இட்டுச்சென்றது.
தமிழர்கள் கோரும் யாவற்றையும் இலங்கை அரசு நிராகரிக்கிறது. சமஷ்டி ஏற்படுத்தப்படமாட்டாது என்று சொல்கிறது. உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படாது என்று சொல்கிறது. சர்வதேச விசாரணை நடத்தப்படாது என்கிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மேற்குறித்த விடயங்களில் மகிந்த ஆட்சிக்கும் மைத்திரி ரணில் ஆட்சிக்கும் இடையில் வேறுபாடுகள் ஏதுமில்லை. நல்லாட்சி என்பது மகிந்தவிடமிருந்து சிங்கள மக்களை பாதுகாப்பதும் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்சவை பாதுகாப்பதுமா? இந்தப் பாரபட்சத்தின் அடிப்படையில் ஆட்சி புரியும் இன்றைய அரசு மிக மோசமான அரசல்லவா?