கடற்கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு, சிறிலங்காவுக்கு பிரான்ஸ் உதவும் என்று சிறிலங்காவுக்கான பிரெஞ்சு தூதுவர் ஜீன் மரின் சுப், தெரிவித்துள்ளார்.
“சிறிலங்கா கடற்படைக்கு உதவ எமது நாடு விருப்பம் கொண்டுள்ளது. ஆட்கடத்தல், போதைப் பொருள் கடத்தல், கடற்கொள்ளை என்பன பூகோள சவால்களாக இருக்கின்றன. அதனை கூட்டாக எதிர்கொள்ள வேண்டும்.
சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு பிரான்ஸ் இணை அனுசரணை வழங்கியிருந்தது.
சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளை பிரான்ஸ் வரவேற்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, கொழும்பு வந்துள்ள பிரெஞ்சுக் கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கி கப்பலான மிஸ்ராலின் கட்டளை அதிகாரி கப்டன் ஸ்ரனிஸ்லஸ் டி சார்கெரெஸ், கருத்து வெளியிடுகையில், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து, பிரெஞ்சுக் கடற்படையின் சிறப்புப் படையினர், கடற்கொள்ளை எதிர்ப்பு, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.